ஞாயிறு, 23 மார்ச், 2014

அழகிரிக்கு தென் மாவட்டங்களில் பெருகும் செல்வாக்கு! குமுறல்கள் உள்ளவர்களின் வடிகாலாக இருக்கிறார் ! தி.மு.க.வுக்கு தெளிவான அபாய சிக்னல்!!

நெல்லை என்றாலே தொல்லை என ஒருமுறை தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதுண்டு. திருநெல்வேலியில் நகர கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் இந்த வார்த்தையை அவர் கூறியிருந்தார். அது இன்றைக்கும்கூட பொருந்துவதாகத்தான் உள்ளது.
தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட அழகிரி தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் 17-ம் தேதி நடத்திய பின் அடுத்த கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராஜபாளையத்தில் நடைபெறும் நிலையில், திருநெல்வேலியிலிருந்து மாநகர முன்னாள் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வேன், பஸ்களில் மதுரை வந்தனர். அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்த தி.மு.க.வினர் தங்கள் மனக்குமுறலை அவரிடம் கொட்டித்தீர்த்தனர்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், “தி.மு.க.வையும், தலைவர் கருணாநிதியையும் காக்க வேண்டும் என அழகிரி கூறியுள்ளார். அதுதான் உண்மை. அதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில்தான் தி.மு.க. உள்ளது.

கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. பிற கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்குத்தான் பதவிகள் அளிக்கப்படுகின்றன. தேர்தல் பணி உள்பட எந்தப் பணியும் எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. எங்கள் மனக்குமுறலைத் தெரிவிக்கவே வந்தோம்” என்றார்.
முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மாலைராஜா தலைமையில் மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழகிரியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
ராஜபாளையத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில், அழகிரியை நேற்று அவரது வீட்டில் சந்தித்துப் பேச வந்த காரணம் குறித்து நாம் விசாரித்தபோது, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ராஜபாளையத்தில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்தான்.
ஆனால், கூட்டத்தோடு கூட்டமாக கலந்துகொண்டால் அதில் ஒரு விஷேசமும் இருக்காது. அதேநேரத்தில் அழகிரியை தனியாகச் சந்தித்தால் மனம்விட்டுப் பேசலாம். அதற்காகவே தனியாக வந்து சந்தித்து எங்கள் ஆதரவை அவருக்குத் தெரிவித்தோம் என்றனர்.
அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு தாவிய கருப்பசாமி பாண்டியன் கட்சியில் சீனியர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்ததோடு, எம்.எல்.ஏ.வானார். அதேபோல, தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க.விலிருந்த அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க.வுக்கு தாவி எம்.எல்.ஏ.வானார்.
தி.மு.க.விலிருந்து விலகி மதி.மு.க.வுக்குச் சென்றுவிட்டு திரும்பிவந்த முன்னாள் அமைச்சர் தங்கவேல், முன்னாள் மாநகர மாவட்டச் செயலாளர் மைதீன்கான் ஆகியோர் இன்று எம்.பி. எம்.எல்.ஏ.வாகியுள்ளனர்.
“அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களுக்கும், தி.மு.க.விலிருந்து விலகி பிற கட்சிகளுக்குச் சென்றுவிட்டு திரும்ப வந்தவர்களை மட்டுமே தி.மு.க. தலைமை பதவிகளைக் கொடுத்து மரியாதை செய்கிறது. ஆண்டாண்டு காலம் கட்சிக்காக உழைத்த எங்களைப் போன்றவர்களை கழகம் கண்டுகொள்வதே இல்லை” என்று உண்மையான தி.மு.க.வினர் புலம்புகின்றனர்.
இதற்கிடையே, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்த காவேரிமணியம் நினைவு நாளையொட்டி அவரது இல்லத்துக்குச் சென்ற அழகிரி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்சியின் மிகவும் சீனியரான காவேரிமணியம் உயிருடன் இருந்தபோது, அவரை தலைமை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அப்போது அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தருவதாக  உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 2000-ம் ஆண்டில் நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது வாய்ப்பு அளிக்கப்படாததால் தனது பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்வதாக கருணாநிதிக்கு காவேரிமணியம் கடிதம் எழுதினார்.
அதையடுத்து அவரை கட்சித் தலைமை சமாதானம் செய்தது. ஆனால், உயிரோடு இருக்கும் வரை தி.மு.க. தலைமை அவரை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு, இன்னமும் தொண்டர் மத்தியில் உள்ளது.
இப்படியான குமுறல்கள் உள்ளவர்களின் வடிகாலாக இருக்கிறார் அழகிரி.
தி.மு.க. வட்டாரங்களில் அழகிரிக்கு எதிரணியில் உள்ளவர்கள்கூட ஒப்புக்கொள்ளும் விஷயம், தற்போது வேன்களிலும், பஷ்களிலும் அழகிரியை சந்திக்க வருபவர்கள், பணம் கொடுத்து கூட்டிவரப்படும் கூட்டமல்ல. தாமாகவே திரண்டுவரும் கூட்டம் இது.
வெளிமாவட்டங்களிலிருந்து தொண்டர்கள் திரண்டு வந்து அழகிரி ஆதரவு தெரிவிப்பது தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தி.மு.க. தலைமை முழுக்க முழுக்க நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தி வருதால், அழகிரியை தொண்டர்கள் சந்திப்பதைத் தடுக்கவோ, அவர்களிடம் சமாதானம் பேசவோ முடியாத நிலையில் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக அழகிரி எடுக்கப்போகும் முடிவு நிச்சயம் தி.மு.க.வை பாதிக்கும் என்றே தெரிகிறது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: