வியாழன், 27 மார்ச், 2014

கனிமொழியை சந்தித்து பேசிய அழகிரி: பொறுத்திருங்கள், 2 மாதங்களில் நடவடிக்கை பாயும்..!


சென்னை: திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பிறகு சென்னை வந்துள்ள மு.க. அழகிரி திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவரும், தனது தங்கையுமான கனிமொழியை இன்று சந்தித்து பேசினார். திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பிறகு மு.க. அழகிரி நேற்று சென்னை வந்தார். திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிச் சென்ற பிறகு நேற்று மாலை கோபாலபுரம் சென்று தனது தாய் தயாளு அம்மாவை சந்தித்து பேசினார் அழகிரி. சுமார் அரை மணிநேரம் தாயுடன் இருந்துவிட்டு அவர் சென்றார். இந்நிலையில் அழகிரி திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவரும், தனது தங்கையுமான கனிமொழியை இன்று சந்தித்து பேசினார். சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார் அழகிரி. முன்னதாக 2ஜி வழக்கில் கைதாகி கனிமொழி திகார் சிறையில் இருந்தபோது அவரை அவ்வப்போது சந்தித்து ஆறுதல் கூறினார் அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. மாறாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் ஆதரவாளர்களுக்கே அதிக அளவில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியில் உள்ள கனிமொழியை அழகிரி சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரணி: இன்னும் இரண்டே மாதங்களில் என்னை நீக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும். அது தலைவராக இருந்தாலும் சரி, அவருடைய நண்பர்களாக இருந்தாலும் சரி. நடவடிக்கை கண்டிப்பாக உண்டு. அது என்ன நடவடிக்கை என்பது குறித்து இப்போது சொல்லமாட்டேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார். ஆரணிக்கு வந்த அழகிரி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் என்னை நீக்கியதற்கான நோட்டீஸ் அனுப்பவில்லை. நோட்டீஸ் வழங்கி விட்டதாக கருணாநிதியிடம் தவறான தகவல் தெரிவித்து நீக்கியிருக்கிறார்கள். திமுகவில் இருந்து என்னை திட்டமிட்டு வெளியேற்றி இருக்கிறார்கள்.   என்ன வெளியேற்றுவதற்கு காரணமானவர்கள் மீது 2 மாதங்களில் வேறுவிதமான நடவடிக்கை பாயும். அது தலைவராக இருந்தாலும் சரி, அவருடைய நண்பர்களாக இருந்தாலும் சரி நடவடிக்கை பாயும். எந்தவிதமான நடவடிக்கை என்பது பற்றி இப்போது கூறமுடியாது. நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ஆதரவாளர்களுடன் கலந்து பேசித்தான் அறிவிப்பேன் என்றார் அழகிரி. அவருடன் அவரது மகன் துரை தயாநிதி, முன்னாள் மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன், ஜே.கே.ரித்தீஷ் எம்.பி ஆகியோரும் வந்திருந்தனர்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: