சனி, 29 மார்ச், 2014

எம்.ஜி.ஆர். காலத்து ஜெயலலிதா சேலம் அ.தி.மு.க. மேடையில்! ஒ.பி.எஸ் அலர்ட் பிளீஸ்!!


“வணக்க்க்…..கம்” புகழ் நிர்மலா பெரியசாமி வித்தியாசமான கெட்டப்பில் அ.தி.மு.க. மேடைகளில் தோன்றி அசத்துகிறார். ஜெயலலிதா ஆரம்ப நாட்களில் அ.தி.மு.க. மேடைகளில் தோன்றிய தோற்றத்தை இவர் பிரதிபலிக்கிறார் என புளகாங்கிதம் அடைகின்றனர் அ.தி.மு.க.வினர்.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த நிர்மலா பெரியசாமி, வணக்கம் என்ற வார்த்தையை வணக்க்க் ……கம் என வித்தியாசமாக உச்சரித்து பலரது மனதைக் கவர்ந்து புகழ் பெற்றவர். இதனால், இவரது வணக்க்க்கத்துக்கே ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. இவரது உச்சரிப்பை மறைந்த நடிகர் மணிவண்ணன்கூட அடிக்கடி மிமிக்ரி செய்வதுண்டு.
சன் டிவியில் இவரது செய்தி நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென இவர் செய்திகளில் மிஸ்ஸானதால் பலரும் நிர்மலா பெரியசாமி எங்கே எனத் தேடத் தொடங்கினர். பின்னர்தான் விஷயம் வெளியே கசிந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் 1996-ல் சட்டசபைத் தேர்தலின்போது இவர் எம்.எல்.ஏ. சீட் கேட்க, அவரும் பார்க்கலாம் என்று கூறி பத்திரமாக
அனுப்பி வைத்துவிட்டு, கலாநிதி மாறனிடம் விஷயத்தை வத்தி வச்சார். மறுநாள் அறிவாலயம் (சன் டிவி அலுவலகம்) வந்த இவருக்கு அதுதான் சன் டிவியின் தான் வாசிக்கும் கடைசி செய்தியாக இருக்கும் என்று தெரியவில்லை.
செய்தி வாசிக்குப் பின் இவரை அழைத்த நிர்வாகம், பணியிலிருந்து விலகல் கடிதத்தை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தது.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நிர்மலா பெரியசாமி, கொஞ்ச நாட்களாகவே எங்கும், எதிலும் தலைகாட்டாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஜீ தமிழ் டிவியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற குடும்ப கட்டப்பஞ்சாயத்து நிகழ்ச்சியைத் தொடங்கி தொலைக்காட்சி வரலாற்றில் மறுபிரவேசம் செய்தார்.
நிகழ்ச்சி சுவாரசியமாகச் சென்றபோது அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக மாறினார். பின்னர் அங்கும் சில பிரச்னைகளால் ஜீ தமிழ் டிவியிலிருந்து வசந்த் டிவிக்கு தாவினார். ஜீ டிவியில் நடத்திய அதே நிகழ்ச்சியை ‘வாய்மையே வெல்லும்’ என்ற பெயரில் நடத்தி வருகிறார்.
கருணாநிதியால் பழிவாங்கப்பட்ட நிர்மலாவுக்கு, ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபுவின் நட்புக் கிடைத்தது. அவரது உதவியால் ஜெயலலிதாவை சந்தித்து கடந்த அக்டோபரில் அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். எந்த டெஸ்ட்டும் இன்றி அ.தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளராக ஜெயலலிதா அவருக்கு புரமோஷன் கொடுத்தார்.
சகோதரர் ஸ்டாலினால், இந்த விரல்களை வெட்ட முடியுமா?
சகோதரர் ஸ்டாலினால், இந்த விரல்களை வெட்ட முடியுமா?
இப்போது, அ.தி.மு.க. மேடைகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நிர்மலா வித்தியாசமான கெட்டப்பில் தோன்றி கலக்கி வருகிறார்.
முதன்முதலாக சேலம் பொதுக்கூட்டத்தில், கருப்பு வெள்ளை சிவப்பு பார்டர் போட்ட வெள்ளை நிற புடவையுடன் வெள்ளை ஜாக்கெட் அணிந்து மேடையில் தோன்றினார்.
ஜெயலலிதா அ.தி.மு.க.வில் சேர்ந்த காலத்தில் 1984க்குப் பின் அவரால் உருவாக்கப்பட்ட யூனிபார்மில் (மேலே படத்தை பார்க்கவும்) நிர்மலா பெரியசாமி மேடையில் தோன்றியது அ.தி.மு.க. பேரிளம் தொண்டர்களுக்கு பழைய ஜெயலலிதாவை நினைவுபடுத்தி விட்டது.
ஜெயலலிதாவை காட்டிலும் ஒரு படி மேலே சென்று, தனது கை விரல் நகங்களில் அ.தி.மு.க கொடி மற்றும் சின்னத்தையும் நிர்மலா நெயில் பாலிஷில் வரைந்து (nail art) அசத்திவிட்டார்.
மைக்கைப் பிடித்த நிர்மலா, “கட்சி சின்னத்தை காட்டினால் தேர்தல் கமிஷனிடம் சென்று மறைக்கச் சொல்லும் ஸ்டாலின் அவர்கள், தற்போது என் விரல்களை என்ன செய்வார். இதை மறைக்க சொல்ல இயலுமா? அல்லது அவரால் வெட்டத்தான் முடியுமா? என் விரலை வெட்டினாலும் பரவாயில்லை, எனது உடல் பொருள் ஆவி அனைத்தும் அம்மாதான் (ஜெயலலிதா)” என்று இவர் விரலை வெவ்வேறு கோணங்களில் ஸ்டைலாக காட்டி (காப்பிரைட் சிம்பு) அபிநயம் பிடித்தபோது கூட்டத்தில் பலத்த ஆரவாரம்.
விதவித நெயில் ஆர்ட் - அ.தி.மு.க. மகளிர் அணிக்கு சமர்ப்பணம்
விதவித நெயில் ஆர்ட் – அ.தி.மு.க. மகளிர் அணிக்கு சமர்ப்பணம்
கூட்டத்துக்கு வந்திருந்த மகளிர் அணியினர் பலர் தமது நகங்களை பார்த்துக் கொண்டனர். அவர்களில் பலரின் வீடுகளில் இன்று சமையல் சந்தேகமே!
கம்யூனிஸ்ட் கூட்டங்களில் மாவோ, லெனினின் சித்தாந்தங்கள் கூறப்படும்போது கைதட்டல் எழுவதுபோல, அ.தி.மு.க. கூட்டத்தில் நெயில் பாலிஷூக்கே அப்ளாஸை அள்ளிக்கொண்ட நிர்மலா தொடர்ந்து பேசுகையில், “அண்ணன் விஜயகாந்த் (வாவ்.. நம்ம கட்சி மேடையில் இப்படி மாற்றுக் கட்சியினரையும் கௌரவமாக குறிப்பிடும் கலாசாரத்தை தொடக்கி வைத்ததற்கு இவரை நிஜமாகவே பாராட்டலாம்) என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை.
அவர் கட்சி தொடங்கியதற்குப் பதில் தனது மைத்துனர், மனைவிக்காக ஒரு கம்பெனியை தொடங்கி இருக்கலாம்.
அண்ணன் விஜயகாந்த் அவர்களே தங்களைத் தாங்களே கருப்பு எம்.ஜி.ஆர் என அழைத்துக்கொள்கிறீர்கள். உலகில் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். அவரும் ரோஸ் எம்.ஜி.ஆர்தான்” என்று தனது கணீர் குரலில் அசத்தினார்.
ஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியினரை விமர்சித்துப் பேசிய நிர்மலா, “அண்ணன் அவர்களே, பெரியவர் கலைஞர் அவர்களே” என மரியாதையோடு பேசியபோது, அரசியலுக்கு வந்தாலும், ஒரு மீடியாக்காரருக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக தெரிந்தது.
பேசுவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த நிர்மலா, தனது வெள்ளை நிற செல்போன் மூலம் மேடைக்கு முன் அமர்ந்திருந்தவர்களை விதவிதமாகப் படம் பிடித்தார். அப்போது, ஒரு மூதாட்டி மேடை முன் வந்து தனது இடுப்பில் சொருகியிருந்த ஒரு காகிதத்தை எடுத்து ‘உங்கள் குரலின் ரசிகை நான், எனக்கு ஆட்டோ கிராப் போடுங்கள்’ என்றார்.
இதனால் அசந்துபோன நிர்மலா, அவரிடம் ஒரு டிமாண்ட் வைத்தார். “இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப் போட்டால்தான் கையெழுத்து” என்று கூறவே, மூதாட்டியும் உறுதி அளித்தார். பின்னர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததோடு, தனக்கு தொண்டர்கள் போட்ட சால்வையையும் மூதாட்டிக்கு அணிவித்து தொண்டர்களின் கரகோஷத்தைப் பெற்றார். மொத்தத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆரின் ஸ்டைலை நிர்மலா காப்பி அடித்தார்.
ஆனால், நிர்மலாவின் நடை, உடை, பேச்சு அம்மாவின் காதுகளுக்கு எட்டியதா எனத் தெரியவில்லை.
நமக்கென்ன கவலை.. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் கவலைப்பட வேண்டும்!
“டில்லிக்குப் போகும்போது அந்தம்மா, இந்தம்மாவை சீட்டில் உட்கார வெச்சுட்டு போனா.. கதை கந்தல்தான்!”
viruvirupu.com

கருத்துகள் இல்லை: