ஞாயிறு, 23 மார்ச், 2014

ஊழல்பிரசாரம் செய்யும் காவிகொள்ளையர்கள் ! பின்கதவால் நுழையும் பார்பனீய ஆதிக்க சதி !

ஊழல்பற்றிப் பிரச்சாரம் செய்து காவிகள் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர் - அதற்கு வாக்காளர்கள் ஏமாந்து விடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பா.ஜ.க. தலைமையில் தமிழ்நாட்டைக் காவி மண் ணாக்க அரும்பாடுபட்டு, ஒரு அய்ந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி - எந்த பொதுக் கொள்கையும் இல்லாமல், மோடி பிரதமரானால் அதுவே சர்வரோக நிவாரணி என்பது போல பிரச்சாரம் செய்யப்  புறப்பட்டுள்ளது.
அவர்கள் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டுப் பாடுபடு வோம் என்று குரல் கொடுத்து, பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.
எந்த மேடையில், யாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிவுள்ள தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போலும் அவர்களுக்கு!
திமுக ஊழல் - காங்கிரஸ் ஊழல் என்ற இவர்களது வாதம்பற்றிப் பின்னால் ஆராய்வோம்.
எடியூரப்பாக்கள் பரிசுத்த யோவான்களா?  
1. முதலில் இவர்கள் யாருடன் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பு முழக்கம் செய்கிறார்கள்? ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே! இப்போது புதிதாக ஞானஸ்நானம் தந்து எடியூரப்பா அண்கோ சிறீராமுலு போன்றவர்களுடன் கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (பா.ஜ.க.) அமைப்பு களுடன் நின்று கொண்டு, சில சீட்டுகளுக்காக ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளனரே - உண்மைகள் இவர்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறதே - அதைக் கவனித்தார்களா?
சவப்பெட்டி ஊழல் மறந்து போயிற்றா?
2. அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே  தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் (NDA) கார்கில் போரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளுக்குக்கூட கமிஷன் வாங்கிய ஊழல் உலகத்தில் சிரிப்பாய் சிரித்ததே - அது மறந்து விட்டதா?
சவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள்தானே பி.ஜே.பி.யினர்!
3. பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பங்காரு லட்சும ணன் அவர்கள்  லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக காமிராவால் படம் பிடிக்கப்பட்டு, வழக்குப் போட்டு, தண்டனையும் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்ததெல்லாம் (அண்மையில் மறைந்தார்!) மறந்து போய் விட்டதா?
இலஞ்சம் வாங்கிய பிஜேபி எம்.பி.க்கள்!
4.அய்க்கிய முற்போக்குக் கூட்டணிஆட்சிமீது  நம் பிக்கை  இல்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, வாக்களிக்க லஞ்சம் வாங்கியவர்களில் பா.ஜ.க. எம்.பி.களும் ஆயிற்றே! ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் சிக்கியவர் பி.ஜே.பி. எம்.பி. அல்லவா!
5. மோடி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை குஜராத் தில் தந்துள்ளார்; எனவே அவரே பிரதமராகி இந்தியாவை ஆள வேண்டும் - ஊழல் ஒழியும் என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட உத்தமர்களைப்  பார்த்து ஒரு கேள்வி:
அண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,699 கோடி நிதி மற்றும் நில மோசடி குஜராத் மாநில ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள் ளதுபற்றி தி வீக் ஆங்கில இதழில் (23.2.2014) மல்லிகா சாராபாய் விரிவாக ஆதாரத்துடன் எழுதியுள்ளாரே - இதுவரை மோடி தரப்பில் மறுப்பு வந்ததுண்டா?
ஊழல் புகழ் கேத்தன் தேசாய் விவகாரம் என்ன?
6. கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் கவுன்சிலின் தலை வராக இருந்து பல கோடி ரூபாயாகவும், தங்கக் கட்டிகளாகவும் வாங்கி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தந்தார் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு MCI  என்ற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிலிருந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சி.பி.அய். விசாரணை மூலம் விரட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இன்னமும் இருக்கிறதே!  அந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனரை - குஜராத்திற்கு வரவழைத்து, அரவணைத்து, அவருக்கு ஒரு புதிய நுழைவு வாயிலாக ஒரு மருத்துவக் கல்லூரித் தலைவராக்கி, அதன் மூலம் மறுபடியும் MCI  என்ற மருத்துவக் கவுன்சிலுக்குப் பட் டணப் பிரவேசம் செய்ய வழி வகை செய்து கொடுத்தவர் குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அல்லவா!
ஈயத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளைகள்!
ஊழல் சக்ரவர்த்திகளின்மீது சி.பி.அய். வழக்கு இருந்தபோதிலும், அவரையேமீண்டும் புதுவாழ்வு பெற வைத்து, நாளைக்கு மத்தியில் மோடி ஆட்சி வந்தால் இந்த திருப்பதி ஏழுமலையானுடன் தங்கம் சேர்ப்பதில் போட்டி போட்ட கேத்தன் தேசாய் தானே மருத்துவ ஆலோசகர் - வழிகாட்டியாக இருப்பார்?
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி போல, தங்கள் முதுகை மறந்து மற்றவர்கள் பற்றிப் பேசலாமா?
தங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்திரங்கள்  இருக்கையில் பிறர் தூசிபற்றி பழிதூற்ற முன்வரலாமா?
இடத்தை விட்டுக் கொடுக்க ஒரு கோடி ரூபாய்
7. நேற்று ஒரு செய்தி - பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை விளக்கும் வகையில்!
லால்கிஷன் அத்வானிஜிக்கு மத்தியப் பிரதேசம் போபாலில் போட்டியிட அதற்கு முன் அங்கே எம்.பி.யாக இருந்தவர் விட்டுக் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று  காங்கிரஸ்காரர் ஒருவர் குற்றம் சுமத்தி யுள்ளாரே, அது உண்மையானால் அதைவிட வெட்கித் தலை குனியும் நிலை உண்டா?
தேர்தல் செலவு கணக்கு?
கருப்புப் பணப் பட்டியலில் இல்லாத உத்தமர்கள் எத்தனைப் பேர்? உண்மையான தேர்தல் செலவைக் காட்டு பவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார்? யார்? மனசாட்சியைக் கொல்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம்.
2ஜி ஊழல் என்னும் கூக்குரல்!
2ஜி ஊழல் என்று திரும்பத் திரும்ப திமுகமீது அமைச்சராக இருந்த ஆ. இராசாமீது குற்றம் சுமத்து கிறார்களே, மத்தியில் அத்துறை அமைச்சராக உள்ள கபில்சிபல் நாடாளுமன்றத்திலேயே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுமில்லை. பூஜ்யம் (Zero Loss)   என்று  கூறவில்லையா?
இந்த ஏற்படாத நஷ்டம் பற்றிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் திமுகவை, இராசாவை வீழ்த்த நினைப்போரால், இதுவரை அந்த இழப்பின் கற்பனை மதிப்பைக்கூட ஒரே மாதிரியாகக் கூற முடியவில்லையே!  அருண்ஷோரி முதல் சி.பி,.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர்  குற்றவாளிகள்  ஆகி விடுவார்களா? பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா? உறுதியாகக் கூறட்டும் பார்க்கலாம்.
அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களா? என்று கூறுவார் களேயாயின் அதே பதில் - லாஜிக் - தி.மு.க.வுக்கும் பொருந்தாதா?
அ.தி.மு.க. பொதுச் செயலாளரான அம்மையார் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார்; 2ஜி அலைகற்றை ரூ.1 கோடியே 80 லட்சம் கோடி இழப்பு என்று ஒரு பொய் யையே பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்!
மேற்காட்டிய பதில் இவருக்கும் பொருந்தும், ஆ. இராசா அவர்கள் ரூ.3000 கோடி  மொரிஷிஸ் மற்றும் வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என திட்டமிட்ட ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே, எங்காவது எப்போதாவது ஒரு சல்லிக் காசையாவது கண்டு எடுத்ததா - விசாரணை அமைப்புகள்?
சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு  ஹாலிவுட் நடிகரின் சொகுசு  பங்களாவைப் படம் போட்டு, இது ஆ. இராசாவின் பங்களா என்று உச்சப் புளுகை ஊரெல்லாம் பரப்பியதே சில வெட்கங் கெட்ட ஊடகங்கள் - உண்மை அம்பலமானதும் அவர்கள் எங்குப் போய்ப் புதைந்தனர்?
சொத்து சேர்த்த  அம்மையார் மீதான வழக்கு  உட்பட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் மற்றவைகளிலும் மூன்று நான்கு   உட்பட உள்ளனவே!
இதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல், பாமர வாக்காளரிடம் இதே தவறான பிரச்சாரம் செய்தால் அது எவ்வளவு நாள் தாங்கும்?
மேலே காட்டப்பட்டுள்ளப்படி மற்றவர்களை  குற்றம் சுமத்துபவர்கள்   பரிசுத்த யோவான்களா? அவதாரங்களா? என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?
காவியைக் கொண்டுவரும் கங்காணிகள் - எச்சரிக்கை!
கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள் மீது கல்லெறிவது புத்திசாலித்தனமா?
தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர்; மீண்டும் காவியைக் கொணர முயற்சிக்கும் கங்காணிகளை சரியான அடையாளம் காணுவார்கள் - சரியானபடி பதிலடி கொடுப்பார்கள் - வெகு மக்கள் வாக்குச் சீட்டின் மூலம் இது உறுதி! உறுதி!!

கி.வீரமணி
viduthalai.in

கருத்துகள் இல்லை: