ஞாயிறு, 23 மார்ச், 2014

அழகிரி-வைகோ சந்திப்பு ! வைகோவுக்கு இம்முறை அதிஷ்டம்!


எதிர்பார்க்கப்பட்ட சந்திப்புதான், இருந்தபோதிலும் தேர்தல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க.வின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு வைகோ இன்று காலை 9.30க்கு சென்றபோது, அவரை அழகிரி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அழகிரி வீட்டுக்கு வைகோ வருவதாகத் தகவல் தெரிந்ததும், அழகிரி வீட்டின் முன் இரு தரப்பு ஆதரவாளர்களும் பெருமளவில் குவிந்திருந்தனர்.
இருவரும் 40 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் வெளியேவந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, “நானும், அழகிரியும் விமான நிலையத்தில் சந்தித்தோம். இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொண்டோம். அப்போது, என்னை வீட்டிற்கு வரும்படி அழகிரி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, இன்று அவரை சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது, வரும் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என கேட்டேன்.
குறிப்பாக விருதுநகர் தொகுதியில் எனது வெற்றிக்கு உதவும்படி கேட்டு கொண்டேன்.

அழகிரி என்னிடம் பேசியபோது, எங்களின் (ம.தி.மு.க.) வேட்பாளர்கள் அழகு சுந்தரம், சதன் திருமலைக்குமார், கணேசமூர்த்தி, மல்லை சத்யா ஜோயல், உள்ளிட்டோர் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. வெற்றி பெறுவீர்கள் என்றார். .
வைகோ சென்ற பின்னர், ராஜபாளையம் புறப்பட்ட அழகிரியிடம், வைகோ ஆதரவு கேட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘வைகோ ஆதரவு தரும்படி கோரினார். நான், எனது ஆதரவாளர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் முடிவை தெரிவிப்பேன்’ என்றார். ராஜபாளையம் சென்ற அழகிரி விருதுநகரில் நிருபர்களிடம் பேசுகையில், என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை நான் விரைவில் அறிவிப்பேன் என்றார்.
ம.தி.மு.க.வின் வெற்றிக்கு அழகிரி வாழ்த்து தெரிவித்து, எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று கூறி வழியனுப்பி வைத்தார்” என்றார்.
அப்போது, ஒரு செய்தியாளர், “அழகிரி உங்களுக்கு ஆதரவு தருவதாக கூறினாரா?” என்று கேட்டதற்கு, “எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றால், அதுதானே அர்த்தம்..” என்று பதிலளித்தார் வைகோ!
தேர்தலுக்கு முன் அழகிரியை  தி.மு.க. தலைமை சமாதானப்படுத்தாத நிலையில், மதி.மு.க. வேட்பாளர்களுக்கு அழகிரி நிச்சயம் ஆதரவளிப்பார் எனத் தெரிகிறது. ஒருவேளை சமாதானம் ஆகிவிட்டாலும்கூட விருதுநகர், தேனி, ராமநாதபுரம் உட்பட சில தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை அழகிரி ஏற்றுக்கொள்வதாக இல்லை.
தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இல்லாத விருதுநகர், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்கள் பணத்தைக் கொடுத்து சீட் பெற்றதாக அழகிரி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதேபோல, தேனி  தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடிக்க ஒரு குழுவையே அழகிரி நியமிக்க இருப்பதாக தகவல் உண்டு.
அழகிரியின் விசுவாசியாக இருந்த பொன்.முத்துராமலிங்கம் தி.மு.க. ஆட்சியின்போது பல்வேறு சலுகைகளைப் பெற்றார். இவரது மகனை அழகிரி கவுன்சிலராகவும் ஆக்கினார். ஆனால், தி.மு.க.வில் ஸ்டாலின் கை ஓங்கியதும் திடீரென பொன்.முத்துராமலிங்கம் அணி மாறினார். இதனால், ஆத்திரமடைந்த அழகிரி, பொன்.முத்துராமலிங்கத்தை துரோகி என்றே கூறி வருகிறார்.
இதனால், தேனி தொகுதியில் போட்டியிடும் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாஜக கூட்டணியில் தேனி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட உள்ளது. இந்தத் தொகுதியில் மதி.மு.க.வின் மாநில கொள்கை பரப்புச் செயலாளரான திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பொடா அழகு சுந்தரத்தை வைகோ நிறுத்தியிருக்கிறார்.
எனவே, தேனி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளரை அழகிரி ஆதரிப்பது கிட்டத்தட்ட உறுதி.
அதேபோல தி.மு.க. நிறுத்தியுள்ள விருதுநகர் தொகுதி வேட்பாளர் ரத்னவேல், அழகிரியின் ஹிட் லிஸ்ட்டில் உள்ளார். அந்த தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக வைகோவே போட்டியிடுகிறார்.
நிலைமை மோசமாகிறது என்பதை புரிந்துகொண்டு தி.மு.க. தலைமை அழகிரியை ஒருவேளை சமாதானப்படுத்துகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அப்படி நடந்தால்கூட, விருதுநகர், தேனி தொகுதிகளில் ம.தி.மு.க. வேட்பாளர்களை அழகிரி ஆதரிப்பார் என அழகிரிக்கு நெருக்கமான சர்க்கிளில் உள்ள நமது தொடர்பாளர் கூறுகிறார்.
பொதுவாக தேர்தல் காலங்களில் வைகோவுக்கு அதிஷ்டம் அவ்வளவாக கைகொடுப்பதில்லை. இம்முறை, அவருக்கு அதிஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள், கருணாநிதியும், ஸ்டாலினும்.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: