செவ்வாய், 23 ஜூலை, 2013

நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கவே கூடாது! எம்.பி.க்கள் கடிதம்

குஜராத்தில் 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து
வன்முறை வெடித்தது. இதனால் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறார். மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்ற கையெழுத்து இயக்கத்தை பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யான முகமது அதீப் தொடங்கினார். அதன்படி 12 கட்சிகளைச் சேர்ந்த 65 எம்.பி.க்கள், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஏற்கனவே கடிதங்கள் அனுப்பியிருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி 25 மேல்சபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதமும், டிசம்பர் 5-ம் தேதி 40 மக்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதமும் அனுப்பப்பட்டது. தற்போது மோடிக்கு விசா பெறுவதற்கு ராஜ்நாத் சிங் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், 65 எம்.பி.க்கள் அனுப்பிய கடிதங்களின் நகல்கள் பேக்ஸ் மூலம் மீண்டும் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


மேல்சபை உறுப்பினர்கள் எழுதிய கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் அச்சுதன் ஆகியோரின் கையெழுத்து இடம்பெற்றிருந்தது.

இதுதொடர்பாக சீதாராம் யெச்சூரியை பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "அமெரிக்க நிர்வாகத்திற்கு இப்படி ஒரு கடிதம் எழுதும் கடைசி ஆளாக நான் இருப்பேன். இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் யாரும் தலையிடுவதை நாங்கள் விரும்புவதில்லை. இந்த விவகாரம் நமது நாட்டுக்குள் அரசியல் ரீதியாக தீர்த்துக்கொள்ள வேண்டிய விவகாரம் ஆகும்" என்று கூறினார்.

இந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தும் முகமது அதீப் இதுதொடர்பாக கூறுகையில், "சீத்தாராம் யெச்சூரியும், அச்சுதனும் அந்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தனர். ஆனால், இப்போது ஏன் மாற்றிப் பேசுகிறார்கள் என்பது புரியவில்லை" என்றார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: