இதுவரை பலியான மாணவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். மதிய உணவின் மாதிரிகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்றனர். இதன் அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மதிய உணவில், பூச்சி மருந்து கலந்திருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மோனோகுரோட்டோபாஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உணவில் எண்ணெய்க்கு பதில், சமையல் செய்தவர் பூச்சி மருந்தை ஊற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இது குறித்து பாட்னா ஏடிஜிபி ரவீந்திர குமார் கூறுகையில், ‘‘மதிய உணவில் கலந்துள்ள பூச்சி மருந்தின் அளவு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதிய உணவில் பூச்சி மருந்து எப்படி கலந்தது என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டியுள்ளது’’ என்றார்.பள்ளியின் முதல்வர் மீனா தேவி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றியபோது, புகையும், கெட்ட நாற்றமும் வந்துள்ளது. அதை சமையல்கார பெண் மீனா தேவியிடம் கூறியிருக்கிறார். அந்த புகாரை காதில் வாங்காமல் அந்த எண்ணெய்யையே பயன் படுத்தும்படி கூறியிருக் கிறார் மீனாதேவி.அவர் மீது கவனக்குறைவு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சமையல் செய்த பெண்ணின் 2 குழந்தை களும் பலியாகி விட்டனர்.பீகார் சம்பவத்தையடுத்து, பள்ளி மதிய உணவில் வழங்கப்படும் உணவின் தரத்தை கண்காணிக்க சிறப்புக் குழுவை அமைப்பது பற்றி மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக