புதன், 24 ஜூலை, 2013

கலால் துறை லஞ்சம் – ஒரு உண்மைக் கதை ! ஒரு வருட தணிக்கைக்கு ஒரு லட்சம் கேட்டான்

பணம்ந்த நிகழ்வு நடந்து சில நாள்களாகிவிட்டன.  யாரிடமாவது சொன்னால் தான் மனசு ஆறும் என தோன்றுகிறது. கற்பனை கதைகளை விட உண்மை சம்பவங்களுக்கு நிறைய மதிப்பு இருக்கிறது. நான் சொல்லப்போவது கூட அப்படி ஒரு உண்மைச் சம்பவம்தான்.

அன்று காலையில் 9 மணிக்கு அந்த நிறுவனத்தில் இருக்க வேண்டும் என அவசர அவசரமாய் கிளம்பிக்கொண்டிருந்தேன். கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தணிக்கைக்கு தேவையான எல்லா பதிவேட்டுகளையும் தயார் செய்துவிட்டேன். இருந்தாலும், அதிகாரிகள் 10 மணிக்கு வருவதற்கு முன்பாக ஒருமுறை சரிபார்த்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா!
முன்பெல்லாம் தணிக்கை என்றாலே உடலிலும், மனதிலும் ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். வருகிற அதிகாரிகளெல்லாம் காசு வாங்குகிற அதிகாரிகளாகவே இருப்பினும் இதில் ஒரு சிக்கலும் இருந்தது. திருவிளையாடல் தருமி போல, எவ்வளவு தவறு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல கூடுதலாகவோ, குறைச்சலாகவோ லஞ்சம் முடிவாகும். இதனால் முதலாளியின் மனம் வருந்தும். அதனால்,எந்த தவறும் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என இல்லாத கடவுளை வேண்டிக்கொண்டு கிளம்பினேன்.

பத்து மணிக்கு இரு கலால் (Excise) அதிகாரிகளும் சரியாக வந்துவிட்டனர். இப்படி தணிக்கைக்கு வருவதற்கு கண்டிப்பாக அலுவலகத்தில் போக்குவரத்து படி தந்துவிடுவார்கள். இருப்பினும் நம் செலவில் கார் ஏற்பாடு செய்துதர சொல்வார்கள். அதிகார பிச்சை என்பது இதுதான்.
மேலதிகாரிக்கு வயது 50 இருக்கும். கீழ் அதிகாரிக்கு வயது 45 இருக்கும். எப்பொழுதும் இப்படி தணிக்கைக்கு வரும் அதிகாரிகள் ஒருவித இறுக்கத்துடன் வருவார்கள். தோரணையுடன் பேசுவார்கள். அதாவது ரெம்ப கறாராக இருக்கிறார்கள் என புரிந்துகொள்ள வேண்டுமாம். இவர்கள் அந்த அளவுக்கு இறுக்கமாய் இல்லை.
தணிக்கை ஆரம்பித்தது. கீழ் அதிகாரி பதிவேடுகளையும் பில்களையும் ஒவ்வொன்றாக சோதனை செய்ய ஆரம்பித்தார். மேலதிகாரி மூன்றாண்டு நிதி நிலை அறிக்கையை நோட்டம் விட ஆரம்பித்தார். கீழதிகாரி எல்லா விற்பனை பில்களையும் சரிபார்த்துவிட்டார். கொள்முதல் பில்களையும் ஒரு ஆண்டுக்கு சரிபார்த்துவிட்டார். இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது. இருவராலும் தவறுகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கவில்லை என்றால், பணத்தை கறக்கமுடியாதே என்ற கவலை இருவர் கண்ணிலும் அப்பட்டமாக தெரிந்தது. இதற்கிடையில், மேலதிகாரியின் மூத்தப் பெண் அவ்வப்பொழுது போனில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவ்வப்பொழுது தன் கீழ் அதிகாரியுடன் தன் மகள் பற்றி பேசியதில் நாம் புரிந்துகொள்ள முடிந்தது.
மேலதிகாரி பல ஆண்டு காலம் சேவை வரித்துறையில் வேலை செய்து, சமீபத்தில் தான் கலால் துறைக்கு மாறி இருக்கிறார். அதனால், நிதி நிலை அறிக்கையில் சேவை வரியில் தவறு கண்டுபிடிப்பதிலேயே குறியாய் இருந்தார். ஒரு தவறை கண்டுபிடித்ததும் முகத்தில் பல்பு எரிந்தது. ஒரு குறிப்பிட்ட கணக்கிற்கு கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கு மேலான தொகைக்கு சேவை வரி கட்டவில்லை. அதற்கு வரி கட்டினால், 3 லட்சத்திற்கு மேல் கட்டவேண்டும் என பேச ஆரம்பித்தார். அதற்கு கட்ட தேவையில்லை என பதில் சொன்னாலும் என்னை கண்டு கொள்ளவேயில்லை. முதலாளியின் அறைக்கு போய் பேரம் பேச ஆரம்பித்தார். முதலாளியுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, அவ்வப்பொழுது வெளியே வந்து, அவருடைய பெண் தன்னுடைய கணவன் மோசமாக நடத்துவதை, கொடுமைப்படுத்துவதை சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார். ‘
சாப்பிடுவதற்கான நேரம் நெருங்கியது. முதலாளி அதிகாரிகளை உணவகத்துக்கு தள்ளிக்கொண்டு போய், ஒன்றரை மணி நேரம் செலவழிக்க வைக்கலாம் என்ற திட்டத்தோடு பேசினார். அவர்களோ வாங்கிக்கொண்டு வரச்சொல்லுங்கள். இங்கேயே சாப்பிட்டுவிடலாம் என சொல்லிவிட்டனர். என்ன வேண்டும் என கேட்டதற்கு, ஆடு, மீன், கோழி என எதையும் விட்டுவைக்காமல், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கேட்டனர். எல்லாம் இலவசம் தானே!
ஒரு புகழ்பெற்ற உணவகத்திலிருந்து அவர்கள் கேட்டது எல்லாம் சுடச்சுட வந்தது. அந்த நன்கு குளிரூட்டப்பட்ட சாப்பாட்டு அறையிலும் வேர்க்க விறுவிறுக்க பரம திருப்தியுடன் தின்று முடித்தனர். சிறிது நேரம் மொக்கை கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
லஞ்ச பரிமாற்றம்.
லஞ்சம்
மீண்டும் காரியத்தில் கவனமானார்கள். மேலதிகாரி லஞ்ச பேரத்தை விட்ட இடத்திலிருந்து முதலாளியுடன் பேச துவங்கினார். இரண்டு லட்சம் கேட்டார். அதை ஒரு லட்சமாக குறைப்பதற்கு முதலாளி ஏதோதோ சொல்லிக்கொண்டிருந்தார். பேச்சிற்கு இடையிடையே வெளியே வந்து தன் பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, லேசாக கண்ணீர் சிந்தினார். கைக்குட்டையை எடுத்து யாரும் அறியாமல் துடைத்துக்கொண்டார். தன் பெண்ணிடம் நான்கு மணிக்கே வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மற்றவற்றை நேரில் பேசிக்கொள்ளலாம் என்றார். மீண்டும் உள்ளே போய் உனக்கும் பாதகம் வேண்டாம். எனக்கும் பாதகம் வேண்டாம் என 1.5 லட்சம் என ஒரு ஒப்பந்ததிற்கு வந்தார்கள்.
அதற்குப் பிறகு, எல்லாம் சுமூகமாய் முடிந்தது. அரசு சரியில்லை என அதிகாரியும், முதலாளியும் சிரித்து சிரித்து பேசினார்கள். இறுதியில் பணத்தை கவரில் போட்டு வாங்கி கொண்டு, கிளம்பும் பொழுது, முதலாளியிடம் கைகொடுத்து “உங்களுக்கு ஏதாவது சந்தேகம், உதவி என்றால் தயங்காமல் கேளுங்கள். உதவுகிறேன்!” என வாயெல்லாம் பல்லாக பேசினார்கள். என்னிடம் கைகொடுத்து, “எந்த தப்பும் இல்லாம, எல்லா பதிவேடுகளையும் (Registers) நீட்டா பராமரிக்கிறீங்க! வாழ்த்துக்கள்! ” என்றனர். நானும் சம்பிரதாயமாக புன்னகை செய்தேன்.
அவர்கள் போனதும், முதலாளியிடம் போய் “இல்லாத தவறை அவர் பில்டப் செய்து பணம் கேட்டால் நீங்களும் ஏன் இவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள்?” என்றேன். அவர் “முதல் தணிக்கையின் பொழுது, வந்த அதிகாரி ஒரு வருட தணிக்கைக்கு ஒரு லட்சம் வரை கேட்டான். மேலும் தாறுமாறா பேசி, திட்டவும் செய்தான். என்னை அவன் அலுவலகத்துக்கு நாலைந்து தடவை வரச்சொல்லி இழுத்தடிச்சான். ஒரு லட்சத்திலிருந்து கடைசி வரைக்கும் குறையவே இல்லையே! அந்த விதியை மீறிட்டீங்க! இந்த விதியை மீறிட்டீங்கன்னு என்னை மிரட்டினான். வேறு வழியில்லாமல் அவன் கேட்டதை கொடுத்தேன். இந்த ஆள் அப்படி இல்லையே! தொடக்கத்திலிருந்து கூலா தான் பேசினான். அவன் சொன்ன சேவை வரி விசயம் ஒன்னும் இல்லைன்னு நீங்க சொல்றீங்க! அது தப்புன்னு அவனிடம் நிரூபிச்ச உடனே அவன் கிளம்பிருவானா! மாட்டான். அடுத்து என்ன தப்பு இருக்குன்னு நோண்ட ஆரம்பிச்சிருவான். இந்த கம்பெனியை நானும் என் மனைவியும் நடத்துகிறோம். இன்னொரு கம்பெனியை என் பெயரில் நடத்துறேன். இன்னொரு கம்பெனியை என் மனைவி பெயரில் நடத்துறேன். அதையெல்லாம் நோண்டி , ஏதாவது பெரிய தப்பை கண்டுபிடிச்சான்னு அதற்கு அப்புறம் 3 லட்சம் கொடுன்னு அடம்பிடிப்பான். எதுக்கு வம்பு, ஒரு வருடத்திற்கு ரூ. 50,000 மூணு வருடத்திற்கு 1.50 லட்சம். ஒரு கணக்கு வைச்சுத் தான் கொடுத்தேன்.” என்றார். இவரும் ஒரு மனக்கணக்கு போட்டுத்தான் தணிக்கையை எதிர்கொண்டிருக்கிறார் என புரிந்தது.
எல்லாவற்றையும் எடுத்து வைத்து, கிளம்பும் பொழுது ஐந்தரைமணி. இருட்ட ஆரம்பித்தது. தென்மேற்கு பருவமழை காலம் இது. மழை பெய்ய துவங்கியது. இன்று நடந்த நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது. வரி ஏய்ப்பு செய்வதற்காக மற்ற நிறுவனங்கள் துவங்கியது ஒரு காரணம்.. மறுபுறம், நமக்கு தெரியாமல், சரக்கு வாங்காமலே கொள்முதல் பில்கள் வாங்கி கலால் வரி ஏய்ப்பு செய்வார் போலிருக்கிறது. அதனால் தான் லட்சகணக்கில் லஞ்சம் தர தயாராய் இருக்கிறார் என புரிந்தது.
பொதுவாய் வி.ஏ.ஒ. வாங்கும் லஞ்சம், இ.பி. கனெக்சனுக்கு அதிகாரி வாங்கும் லஞ்சம் தான் அடிக்கடி பத்திரிக்கைகளில் கண்ணில்படும். இதனால் சாதாரண மக்கள்தான் லஞ்சம் கொடுத்து இந்தியாவை குட்டிச் சுவர் ஆக்குவதாக அண்ணா ஹசாரே கனவான்கள் துள்ளிக் குதிப்பார்கள். ஆனால் தொழிற்துறையில் சிறு முதலாளிகளில் துவங்கி பெரு முதலாளிகள் வரை அதிகார வர்க்கத்தினருக்கு பல லட்சங்கள்-கோடிகளில் தரும் லஞ்சம் பலரும் அறியாத செய்தி. இந்த லஞ்சம் எப்பொழுதுமே வெளியில் வராது. vinavu.com

கருத்துகள் இல்லை: