செவ்வாய், 23 ஜூலை, 2013

DMK: நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை எதிர்ப்போம்

தி.மு.க. தலைவர் கலைஞர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பினை உச்சநீதிமன்றம் 18-7-2013 அன்று ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது. பொது நுழைவுத்தேர்வு தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு, அரசியல் சாசனச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து பல ஆண்டுகளாகவே பிரச்சனை உள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டு 2007-08ஆம் கல்வி ஆண்டு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர்களை சேர்க்கும் நடைமுறைதான் இருந்து வருகிறது.

இது தொடரப்பட வேண்டும் எனறு நான் முதல்வராக இருந்தபோது, பிரதமருக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் 15-8-2010ல் கடிதம் எழுதினேன்.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பினை பெரும்பாலானோர் வரவேற்று மகிழ்கிற இந்த நேரத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று காத்திருந்தோம், துரதிர்ஷ்டவசமாக அத்தகைய தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எங்களுக்கு சிறிது மன வருத்தம்தான். ஏனெனில் பலவற்றை நாங்கள் சீர்படுத்த திட்டமிட்டிருந்தோம். தீர்ப்பை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள இயலாதது. அவர் ஏற்கனவே நுழைவுத் தேர்வு தொடர்பாக மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கும் தற்போதைய அவரது அறிவிப்புக்கும் முரண்பாடு உள்ளது. தி.மு.க.வைப் பொறுத்தவரை, நுழைவுத்தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்க்கும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: