நேரடி மானிய திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேரடி மானியங்களை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணமாகச் செலுத்தும் திட்டத்தில் உள்ள சந்தேகங்கள் தீர்க்கப்படும்வரை, அந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:
மானியங்களை பணமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தமிழகத்தின் திருச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அறிகிறேன். இந்தத் திட்டத்தில் சில அம்சங்களை மாநில அரசு கடுமையாக எதிர்க்கிறது. அவற்றை தெளிவாக்கும் வரை இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மீறி இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயலாக்குகிறது. இது, கூட்டாட்சி மற்றும் ஜனநாயக பரவலாக்கலை காற்றில் பறக்க விடுவதாகும்.
கல்வி உதவித் தொகை, கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவி மற்றும் ஓய்வூதியம் உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான உதவித் தொகைகளை நிபந்தனை அடிப்படையில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாநில அரசே நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மானியங்களை பணமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டமானது ஏற்கெனவே மாநிலத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்களின் மீது திணிக்கும் நடவடிக்கையாக அமையும். மேலும், பிரதான திட்டங்களான பொது விநியோகத் திட்டம், உரம் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான மானியங்களை பணமாக வழங்கும் திட்டத்தை மாநில அரசு கடுமையாக எதிர்க்கிறது.
சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான பயனாளிகளை அடையாளம் காண்பது மற்றும் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளை மாநில அரசே மேற்கொள்கிறது. ஆனால், நிதியுதவி உள்ளிட்ட திட்டப் பணிகளை மட்டும் மத்திய அரசு நேரடியாகச் செய்கிறது. இது, மாநில அரசின் நிர்வாகம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றுக்கு எதிரானதாகும். எனவே, இந்த நடைமுறை சரியானதல்ல.
தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு: மானியங்களை பணமாக வழங்கும் திட்டம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மத்திய திட்டக் குழு வகுத்துள்ளது. அவை குறித்து மாநில அரசுகளுடன் எந்தவித ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
திட்டத்துக்கான முடிவுகள் அனைத்தும் மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், களப் பணிகளை ஆற்றுபவையாக மாநில அரசுகள் இருக்கின்றன. திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாக மத்திய அரசு விளங்குகிறது.
மானியங்களை பணமாக வழங்கும் திட்டத்தில் மாநில அரசுகள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறதா? இது, மாநில அரசுகளின் அதிகாரத்தை மீறுவதுடன், நாட்டின் கூட்டாட்சிக் கொள்கை மற்றும் ஜனநாயக பரவலாக்கலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
25 திட்டங்கள்: மானியங்களை பணமாக மாற்றும் நடைமுறையில், இரண்டாவது கட்டத்தில் 25 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பல திட்டங்கள், ஒவ்வொரு மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் முன்னோடித் திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சில திட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்குகள் இருக்கின்றன. அதுபோன்ற திட்டங்களுக்கான மானியத்தை மத்திய அரசு பணமாக வழங்கும்போது, அவற்றில் குழப்பங்கள் ஏற்படும். அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு என்பது பாதிக்கப்படும்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் போன்றே மத்திய அரசும் ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்துக்கான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்போது அதில் குழப்பங்களும், போலிகளும் உருவாகக் கூடும். பயனாளிகள் போதுமான அளவுக்கு பயன்பெறுவதிலும் பாதிப்பு ஏற்படும்.
சில உதவித் தொகை வழங்கும் திட்டங்களில் மாநில அரசுகள் போதுமான நிதியை வழங்கிய பிறகு, கூடுதலாகத் தேவைப்படும் நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றன. மானியங்களை பணமாக வழங்கும் திட்டத்தால் அதிலும் குழப்பம் ஏற்படும். எனவே, அந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நினைத்தால் அதற்கான நிதியை மாநில அரசுகளின் மூலமாக வழங்கி நடைமுறைப்படுத்தலாம்.
பொது விநியோகத் திட்டம், உரம் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான மானியங்களையும் பணமாக வழங்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதற்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. இந்த நிலையில், மானியங்களை பணமாக வழங்கும் திட்டத்தில் மாநில அரசுகளுக்கு எழுந்த கவலைகள் மற்றும் சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். அந்தத் திட்டம் குறித்து ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படும் வரையில், இப்போதுள்ள நடைமுறையின்படியே அதை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது.
மாநில அரசுகளின் மூலமாகவே மானியங்களை பணமாக வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக