செவ்வாய், 30 ஏப்ரல், 2013

சிபிஐ யில் அரசியல் தலையீடு நீதிமன்றம் ஒப்புதல் வாக்குமூலம்

புதுடில்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சி.பி.ஐ., அமைப்பை அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவிப்பதே தங்களது முதல் பணி என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. நிலக்கரி சுரங்கங்களுக்கு மத்திய அரசு வழங்கிய உரிமங்களில், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) கண்டுபிடித்தது. இதையடுத்து, அந்த விவகாரத்தை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பல மாதங்களாக விசாரணை மேற்கொண்டு, சி.பி.ஐ., தயாரித்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய சட்ட அமைச்சர் அஷ்வனிகுமார், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நிலக்கரி அமைச்சகம் ஆகியோர் பார்வைக்கு சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா அளித்ததாகவும், இவர்கள் சிபிஐ அறிக்கையில் சில மாற்றம் கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இவ்வழக்கில் சிபிஐ பதிவு செய்த 11 குற்றப்பத்திரிக்கைகள் மற்றும் சிபிஐ இயக்குனரின் உறுதி சான்று ஆகியவற்றின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது

சுப்ரீம் கோர்ட் அதிருப்தி: அப்போது, சி.பி.ஐ., தாக்கல் செய்த பிரமாண பத்திரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர். மேலும், அரசிடம் தகவலை சி.பி.ஐ., பகிர்ந்து கொண்டது முழு வழக்கு விசாரணையையும் பாதிக்கும். மத்திய அரசுடன் தகவலை பகிர்ந்து கொண்டது பற்றி சுப்ரீம் கோர்ட்டிற்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என சி.பி.ஐ., விளக்க வேண்டும். அரசியல் தலையீடுகளிலிருந்து சி.பி.ஐ.,யை விடுவிப்பது எங்களின் முதல் பணி. சி.பி.ஐ.,யின் சுதந்திரம் காக்கப்பட வேண்டும். சி.பி.ஐ., மீதான இந்த அழுத்தம் சாதாரணமானது அல்ல என கூறினர்.

மேலும், நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், கூட்டம் எதேனும் ஏற்பாடு செய்தார்களா. அறிக்கையில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டன. யாருடைய உத்தரவின் பேரில் திருத்தங்கள் செய்யப்பட்டன என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக தேவைப்பட்ட ஆவணங்கள் எதையும் நிலக்கரி அமைச்சகம் கொடுக்கவில்லை என சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு: மார்ச் 8ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மத்திய அரசுடன் பகிர்ந்து கொண்டது பற்றி ஏன் கோர்ட்டில் சி.பி.ஐ., தெரிவிக்கவில்லை என்பது பற்றி மே 6ம் தேதிக்குள் விளக்க வேண்டும். ஏப்ரல் 26ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மாற்றம் செய்தது குறித்த விரிவான அறிக்கை ஏன் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், சட்டத்துறை அமைச்சர், பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் மற்றும் நிலக்கரி அமைச்சகத்தை தவிர வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டதை என்பது பற்றி சி.பி.ஐ., இயக்குநர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.dinamalar.com

கருத்துகள் இல்லை: