ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

பாதாள சாக்கடை சுத்தம் செய்த 3 தொழிலார்கள் மரணம் ! மனிதர்களே சாக்கடைக்குள் இறங்கும் அவலம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபாதாள சாக்கடையில் இறங்கியபோது விஷவாயு தாக்கி 3 பேர் சாவு திருவள்ளூரில் இன்று அதிகாலை சோகம் திருவள்ளூர்: பாதாள சாக்கடையில் இறங்கிய 3 தொழிலாளர்கள், விஷ வாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர். திருவள்ளூரில் இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி, கடந்த 2008&09ல் துவங்கப்பட்டது. இதற்காக ரூ.36 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. கூடுதல் நிதியாக ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் ஜெயா நகர், லங்ககார தெரு, வீரணன் தெரு, முகமது அலி தெரு, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பல குடியிருப்பு பகுதிகளில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. கழிவுநீர் இணைப்பு தொட்டிகளும் கட்டப்பட்டன. பணி முடிந்த இடங்களில் சிமென்ட் சாலை போடப்பட்டது. பின்னர் இந்தப் பணி கிடப்பில் போடப்பட்டது.


கடந்த ஆண்டு பாதாள சாக்கடை பணி மீண்டும் துவங்கியது. இதற்காக 4 ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். ஜெ.என்.சாலை, திருத்தணி சாலையில் அங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டது. இந்த சாலையில் உள்ள முக்கிய தெருக்களை இணைக்கும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டு இணைப்பு தொட்டி கட்டப்பட்டது. ஜெ.என் சாலையில் 5&க்கும் அதிகமான இணைப்பு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. தபால் நிலையம் அருகே உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து ஜெயின் நகருக்கு இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 10 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பகலில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தபால் நிலையம் அருகே உள்ள தொட்டியின் மூடியை கொல்கத்தாவை சேர்ந்த தொழிலாளி திலீப் (25) என்பவர் அகற்றிவிட்டு பணியை தொடங்கினார். தொட்டி எவ்வளவு ஆழம் உள்ளது என்று எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அவரது செருப்பு தொட்டிக்குள் விழுந்தது. அதை எடுப்பதற்காக அவர் உள்ளே இறங்கினார். பின்னர் அவர் மேலே வராததால், மற்றொரு தொழிலாளியான பிண்டு (25), தொட்டிக்குள் பார்த்தார். அங்கு திலீப் மயங்கி கிடப்பதை பார்த்ததும், அவரை தூக்கிவர பிண்டுவும் உள்ளே இறங்கியுள்ளார். அவரும் மயங்கி விழுந்தார்.

மேலே நின்று கொண்டிருந்த பணி மேற்பார்வையாளர் புகழேந்தி (40), பதற்றமடைந்து மற்ற தொழிலாளர்களை அழைத்துள்ளார். தொட்டியில் இரண்டு பேர் விழுந்து விட்டதாக கூறியுள்ளார். அப்போது மேல்மலையனூரை சேர்ந்த முருகன் (35) என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். நீண்ட நேரமாக அவரும் வெளியே வரவில்லை. பாதாள சாக்கடை தொட்டியில் ஊற்று நீர் தேங்கியிருந்தது. அதில் இறங்கிய 3 பேரும் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உள்ளே இறங்கி, இறந்தவர்களின் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். வடமாநில வாலிபர்களான திலீப், பிண்டு ஆகியோருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. முருகனுக்கு திருமணமாகி மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த சம்பவம், திருவள்ளூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பலி வாங்கும் பாதாள சாக்கடை

திருவள்ளூரில் பாதாள சாக்கடை பணி துவங்கிய நாள் முதல் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. இதில் இதுவரை வக்கீல் உள்பட 5 பேர் இறந்துள்ளனர். பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து 3 பேரும் மணல் சரிந்து விழுந்து ஒருவரும் இறந்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியம், பணியில் மந்தம், கண்காணிப்பில் குளறுபடி போன்ற காரணங்களால் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் அடிக்கடி நடப்பதாக மக்கள் கூறுகின்றனர்..tamilmurasu.org

கருத்துகள் இல்லை: