ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

ராஜ்யசபா எம்.பி., பதவி சசிகலா, கனிமொழி, பிருந்தா கராத்துக்கு கிடைக்குமா?

தமிழகத்திலிருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஆறு எம்.பி.,க்களின்
பதவி காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. அ.தி.மு.க.,வில் சசிகலா, தி.மு.க.,வில் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பிருந்தா கராத் ஆகிய மூவருக்கும், ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்குமா? என்ற கேள்வி அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.
பலம் இல்லை: தமிழகத்திலிருந்து, ராஜ்யசபாவுக்கு புதிய எம்.பி.,க்கள் யார், யார்? தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்ற கேள்வி, அரசியல் கட்சிகளிடையே தீவிரமாக எழுந்துள்ளது. அ.தி.மு.க.,வை தவிர, மற்ற கட்சிகளுக்கு போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லை என்பதால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு மூலம், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியாவது கிடைக்குமா? என்ற தவிப்பில் சில கட்சிகள் இருக்கின்றன. ஒரு எம்.பி., தேர்வு பெறுவதற்கு, 34 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவைப்படுகின்றன. அ.தி.மு.க.,வில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் பலம் அடிப்படையில், நான்கு எம்.பி.,க்கள் தேர்வு செய்வது உறுதி. ஜந்தாவது எம்.பி., பதவி, அ.தி.மு.க., ஆதரவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆறாவது எம்.பி., பதவி தே.மு.தி.க., ஆதரவுடன் தி.மு.க.,வுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க.,வில் மைத்ரேயன், இளவரசன், தி.மு.க.,வில் கனிமொழி, திருச்சி சிவா, தமிழக காங்கிரஸ் சார்பில், ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், டி.ராஜா ஆகிய ஆறு பேரும், இந்த ஆண்டின் ஜூலை மாதம் ஓய்வு பெறுகின்றனர். மைத்ரேயன் மூன்றாவது முறை நீட்டிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அ.தி.மு.க., வரலாற்றில், இரண்டாவது முறையாக மைத்ரேயனை தவிர வேறு யாரையும் நீட்டிக்கவில்லை.

இது குறித்து கட்சி கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு பின், மத்தியில் காங்கிரஸ், பா.ஜ., அணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், குஜராத் முதல்வர் மோடி மற்றும் பா.ஜ., ஆதரவுடன் பிரதமர் பதவியை முதல்வர் ஜெயலலிதா கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை அ.தி.மு.க., வினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பிரதமர் அல்லது துணை பிரதமர் பதவி அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் பட்சத்தில், முதல்வருக்கு உதவியாக, டில்லியில் செயல்படுவதற்கு வசதியாக, சசிகலாவுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

ஆதரவாளர்கள்: தி.மு.க.,வில் கனிமொழிக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நெல்லை, கன்னியாகுமரி, அல்லது வட மாவட்டங்களில் கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு லோக்சபா தொகுதியில் போட்டியிட வேண்டும் என, கனிமொழி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கனிமொழியும், தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யாக வேண்டும் என, விருப்பம் தெரிவித்தாலும், லோக்சபா தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவதும் கனிமொழியை சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்டமிட்டு உள்ளார். இந்த ஆண்டின் ராஜ்யசபா எம்.பி.,யை, தி.மு.க., எடுத்துக் கொள்வதால், அடுத்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி.,யை தே.மு.தி.க.,வுக்கு - தி.மு.க., விட்டுக் கொடுக்கவுள்ளது. அ.தி.மு.க., ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்.பி., சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியனுக்கு, 80 வயதாகி விட்டதால், ராஜ்யசபா எம்.பி., பதவியை அ.தி.மு.க., தரும் என, அவர் எதிர்பார்க்கிறார். அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தென் மாநிலங்களிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக வேண்டும் என, மேலிட தலைவர் பிருந்தா கராத் விரும்புவதால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவருக்கும் அ.தி.மு.க., வாய்ப்பு வழங்கலாம். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: