வீரபாண்டி ஆறுமுகம் உடல் அவரின் சொந்த ஊர் சேலம் பூலாவரிக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய அமைச்சர் மு.க அழகிரி, முரசொலி செல்வம், எ.வ.வேலு, சுப்புலட்சுமி ஜகதீஷன், சுப இளவரசன், பா.ம.க கோ.க மணி உட்பட அனைத்து கட்சியினரும் வந்திருந்து இரங்கலை தெரிவித்தனர். கோ.க மணி 'வீரபாண்டியார் என்ற பெயரை எங்கள் கட்சி தான் அவருக்கு 1984 இல் சூட்டி புகழாரம் செய்தோம். அவர் இழப்பு தி.மு.க வுக்கு மட்டுமல்ல வன்னிய இனத்திற்கே பேரிழப்பு தான்' என்றார்.
மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து ஆறுதல் தந்தவர் இரவு ஜி.ஆர்.டி ஹோட்டலில் தங்கினார்.
'சிங்கமே எங்க சேலத்து சிங்கமே... இனி எங்களுக்கு யாரு சொந்தமே' என தொண்டர்கள் கதறி அழுதனர். உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் குவிந்ததால் வீரபாண்டியார் உடல் வைத்து இருந்த இடமே தள்ளு முள்ளுவால் தத்தளித்தது அங்கே வந்த வீரபாண்டியாரின் தம்பி பாரப்பட்டி சுரேஷ் அந்த இடத்திற்கு வந்து தொண்டர்களை ஒரு வழிபடுத்தி தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். மறுபுறம் டி.எம்.செல்வகணபதி வேட்டியை மடித்துகட்டிகொண்டு தொண்டர்களை கட்டுபடுத்தி உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்துகொண்டார்.
24.11.2012 வீரபாண்டியார் வீடு மட்டுமல்ல அந்த ஊரே தி.மு.க தொண்டர்கள் தலையாக தெரிந்தது... இரண்டாவது நாளாக சேலம் முழுக்க கடைகள் மூடப்பட்டு இருந்தது. தனியார் பேருந்துகள் இயங்கவில்லை..முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், எம்.பி ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, டி .ஆர்.பாலு, கே.பி ராமலிங்கம், என்.கே.கே.பி ராஜா, எம்.பி கனிமொழி உட்பட்ட பல தலைவர்கள் வந்திருந்தனர். வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் வந்திருந்தார். திராவிடர் விடுதலைக் கழகம், சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல கட்சியினரும் வந்தனர்
சரியாக மாலை 3 மணிக்கு வீரபாண்டியார் உடல் அவரின் மகன் மறைந்த செழியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலமாக உடல் கொண்டு செல்ல அதை முன்னின்று வழிநடத்தி சென்றார் மு.க ஸ்டாலின்.
கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேருக்கு மேல் அலைகடலென திரண்டு இருந்தனர். அடக்கம் செய்யப்பட்ட இடத்தில 'வீரம் விதைக்கப்படுகிறது' என கண்ணீரோடு தலைவர்கள் பேசினர்.தன் மூத்த மகன் செழியன் உடலோடு உரையாட தொடங்கினார் வீரபாண்டியார்.கிட்டத்தட்ட 57 வருடங்கள் ஓய்வில்லாமல் உழைத்த வீரபாண்டியாருக்கு இயற்கை ஒய்வு தர அவர் விட்ட கட்சி பணிகளை ஓய்வில்லாமல் தொடர கிளம்பியது வீரபாண்டியாரின் படை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக