அருண் சத்தா உடனடியாக கைது செய்யப்பட்டாலும், கண்டா தலைமறைவாகி விட்டார். அவரது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 10ம் தேதி போலீசிடம் சரணடைந்தார்.
47 வயதாகும் கோபால் கண்டா செருப்புக்கடை முதலாளி, ரியல் எஸ்டேட் புரோக்கர், தொழிலதிபர், கார் டீலர், தாரா பாபா பக்தர், விமான நிறுவன முதலாளி என்று வளர்ந்து அரசியல்வாதியாக உருவெடுத்தவன். 1998ல் முதலமைச்சரான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் கைத்தடியாக இருந்து அவரது ஆட்சி முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டான். 10 நீதிமன்ற வழக்குகளை எதிர் கொண்டிருந்த கண்டா 2009 சட்டசபை தேர்தலில் சிர்சா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா அரசு அமைக்க ஆதரவு அளித்து அதற்கு பரிசாக அமைச்சர் ஆக்கப்பட்டான்.
கீதிகா சர்மா வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகமுடைய நடுத்தர வர்க்கப் பெண். கோபால் கண்டா 2007ம் ஆண்டில் ஆரம்பித்த எம்.டி.எல்.ஆர் விமான சேவை நிறுவனத்தில் அப்போது 18 வயதான கீதிகா ஷர்மா விமான பணிப்பெண்ணாக சேர்ந்தார். அதிகாரம், ஆணவம், பெண்களை ஆளும் வெறி பிடித்திருந்த கோபால் கண்டா தன் மகள் வயதான கீதிகாவை தன் வசப்படுத்த ஆரம்பத்திலிருந்தே வேலை செய்திருக்கிறார்.
கீதிகாவுக்கு பல சலுகைகள் கொடுத்து, கீதிகாவின் மேல் படிப்புக்கு பண உதவி செய்வது, வெளி நாட்டு பயணங்களுக்கு அழைத்துப் போவது, புதுப்புது பெயரில் பதவிகளை அளிப்பது என்று வெளிப்படையான நாடகங்களை நடத்தியிருக்கிறார். தனது பணி முன்னேற்றத்திற்காகவும், தனது பொருளாதார நலன்களுக்காகவும் கீதிகா அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
எம்டிஎல்ஆர் நிறுவனம் நொடித்துப் போய் 2009 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இதனால் எமிரேட்சுக்கு போக வேண்டியிருந்த கீதிகாவை தன்னுடைய வேறு நிறுவனமான எம்டிஎல்ஆர் குழுமத்தில் ஒருங்கிணைப்பாளர் என பதவி உயர்வு கொடுத்து பக்கத்திலேயே வைத்திருக்க முயற்சித்திருக்கிறார் கண்டா. எமிரேட்ஸ் வாய்ப்பின் மூலமாக கண்டாவை விட்டு ஒதுங்கிவிடலாம் என்று நினைத்திருந்த கீதிகாவுக்கு இது கடிவாளம் போட்டதுபோலாகிவிட்டது. இருப்பினும் ஒருவழியாக தப்பித்து வேலையை ராஜினாமா செய்து விட்டு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் வேலை செய்ய துபாய்க்கு போய் விட்டிருக்கிறார் கீதிகா.
அவரை எப்படியாவது மீண்டும் தன் பிடியில் சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் போலி ஆவணங்களின் அடிப்படையில் அவர் வேலைக்கு சேர்ந்தார் என்றும் படிப்பிற்காக வாங்கியக் கடனை திருப்பி தராதவர் என்றும் கீதிகாவின் மேல் குற்றம் சாட்டி எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறார் கண்டா. இந்த மிரட்டல் நடவடிக்கைகளில் அவரது உதவியாளர் அருண் சத்தா உறுதுணையாக இருந்திருக்கிறார்.
அவரும், அவரது ஆட்களும் துபாயிலுள்ள எமிரேட்ஸ் நிறுவனத்துக்குப் போய் கீதிகாவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இவற்றால் கீதிகாவுக்கு வேலை பறிபோக, அவரை இந்தியாவில் மீண்டும் தன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டிருக்கிறார் கண்டா. இது போன்ற தொடர் பாலியல் தொல்லையால் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொண்ட கீதிகாவை துன்புறுத்தும் நோக்குடன் அவர் வாங்குவதற்காக பதிவு செய்து வைத்து இருந்த வீட்டையும் கிடைக்காமல் செய்துள்ளார் கண்டா.
இப்படி தொல்லைக்கு மேல் தொல்லையை பொறுக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் கீதிகா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். உயிருடன் வாழ்ந்து கொண்டே கண்டாவை எதிர்ப்பது சாத்தியமற்று போன நிலையில் இறப்பதன் மூலம் கண்டாவிற்கு பதில் சொல்வது என்ற கையறு நிலையில் தான் தனக்குத் தானே முடிவு கட்டிக்கொண்டு உள்ளாள் அந்தப் பெண்.
ஒரு மகன், இரண்டு மகள்கள் என்று பொறுப்பான குடும்ப மனிதனாக நடந்து கொள்ள வேண்டிய இந்த மிருகம் தன்னுடைய 46 வயதிலும் மைனரைப்போல வலம் வந்தது மட்டுமில்லாமல் ‘கீதிகா மேல் இருந்த தீராத காதலால், அவரை தன் பக்கத்திலே வைத்துகொள்ளும் நோக்குடன்தான் இவ்வாறன வழிமுறைகளை பின்பற்றினேன்’ என்பதை போலீசிடம் வாக்குமுலமாக கொடுத்து உள்ளார் கண்டா.
♦
இளம் வயதில், எந்த அனுபவமும் இல்லாத கீதிகாவிற்கு சீனியர் பணிப்பெண் பதவி, பெரிய கார், உயர்ந்த சம்பளம் தர கண்டா ஒன்றும் வள்ளலும் இல்லை நல்லவனும் இல்லை. இருப்பினும் அவர் வழங்கிய சலுகைகளும் அவற்றுக்கு அடிப்படையான அவருடைய அரசியல் அதிகாரமும் கீதிகாவையும் அவர் குடும்பத்தையும் செயலிழக்க செய்து உள்ளது. கண்டாவின் நோக்கத்தை அறிந்த பின்னரும், அவர்து தொடர்புகள் மூலம் பொருளாதார வாய்ப்புகளை பெறலாம் என்று அவர் பிடியில் சிக்கியது கீதிகா தனக்கு செய்துகொண்ட மாபெரும் தவறு.
தங்கள் மேல் அதிகாரிகளுக்கு வளைந்து கொடுத்து, முகஸ்துதி செய்வதன் மூலம் பொருளாதார சலுகைகள், பதவி உயர்வு, அதிகார பின்னணி இவற்றை பெற்று விட முயற்சிப்பவர்கள் ஒவ்வொருவரும் இது போன்ற அபாயமான விளையாட்டில்தான் இறங்கியிருக்கிறார்கள்.
சலுகைகளை பெறுவதற்காக செய்யப்படும் சில சமரசங்களும், அடிமைத் தனமும் நாள்பட நாள்பட மேலும் மேலும் இழிவான நிலையை எட்டுகிறது. ஒரு வகையான குற்ற உணர்வை தோற்றுவித்து, மனதளவில் சோர்வடையச் செய்கிறது. ஒரு நாள் ஒதுங்க நினைக்கும் போதுதான் அது வரை பயன்படுத்திய நபரின் உண்மையான முகம் தெரியவருகிறது.
கட்டுப்படுத்தி வந்த யாரும் கட்டுக்களை அவிழ்த்து விட சம்மதம் தருவது கடினம். அதுவும் அரசியல் அதிகாரம் இருக்கும் நபர் என்றால் கேட்கவா வேண்டும்! சட்டம், அரசு, போலீஸ் என்று எல்லாவற்றையும், கை நுனியில் வைத்து இருக்கும் நபர்களிடம் அதிகார அத்துமீறலுக்கு என்ன பஞ்சம்.
பாலியல் தொடர்பான இத்தகைய உறவு பெண்களுக்கு ஒரு சிறையை போன்றது, அதில் அவர்களின் இழப்பு மிகவும் அதிகம், சமூகரீதியாக, மனரீதியாக, உடல்ரீதியாக பல அவலங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாவதோடு, பெரிய பின்விளைவு இல்லாமல் அதிலிருந்து வெளி வருவதும் சாத்தியமில்லாமல் போகிறது. அந்த நிலை தான் கீதிகாவுக்கு ஏற்பட்டிருந்திருக்கிறது.
நடந்து முடிந்த இக்கொலைக்கு அதிகார வர்க்கங்களை காக்கும் அரசு எந்திரம் தரும் தீர்ப்பு என்பது நியாயமாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. பெண்கள் மேல் பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூகரீதியாக சுரண்டும் கனவான்களுக்கு என்றுமே சட்டமும், அரசும் சாதகமாக இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.
பா.ஜ.க. உறுப்பினர் ராஜ் கிஷோர் கேசரி தனக்கு செய்த பாலியல் கொடுமைகளை எதிர்த்து போராடிய ரூபம் பதக், அதற்கான நீதி கிடைக்காமல் போய், ராஜ் கிஷோர் மீண்டும் அதிகாரப் பதவியைக் கைப்பற்றும் சூழல் உருவான போது, தனது ஆத்திரம் தீர அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததை இங்கு நினைவு கூறலாம் அந்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்திருக்கின்றனர் ரூபம் பதக்கும் அவரின் குடும்பமும்.
விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தாவின் தற்கொலையும் இந்த தன்மையுடையது தான். பாலியல் கொடுமைகளையும், பெண் என்ற காரணத்தால் நடந்த அடக்குமுறைகளையும் எதிர்த்து போராடிய அஞ்சலி குப்தாவிற்கு இறுதியில் கிடைத்தது பணி நீக்கமும், அவச்சொல்லும். தொடர்ந்து போராடி தோய்ந்து போன அவர் இறுதியில் தேடியது மரணத்தை தான்.
நீளும் இந்தப் பட்டியலில் இப்போது கீதிகாவும் இணைந்துள்ளார். அதிகார வர்க்கங்களை எதிர்த்து போராடுவது அர்த்தம் அற்றது என்ற நினைப்பில் தன் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்துகொண்டு உள்ளார்.
படிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக