துரத்தும் வாழ்க்கை – சிதறும் கனவுகள்!
ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை என்பதில் ஆரம்பித்து ஐந்தாம் வகுப்பு மாணவன்
தற்கொலை வரை தற்கொலைகளின் காரணங்களும், அடிப்படைகளும் ஒன்றாகவே
இருக்கின்றன.
சென்னையைச் சேர்ந்த 29 வயதே நிரம்பிய ஜெயக்குமார்
தற்கொலை செய்து கொள்வார் என்பதை அதற்கு ஒரு நாள் முன்பு அவரது நெருங்கிய
நட்பு வட்டத்திலும், உறவினர்களிடமும் சொல்லியிருந்தால் நம்பியிருக்க
மாட்டார்கள். பொறியியல் பட்டம் பெற்ற ஜெயக்குமார் மேல்படிப்புக்காக
அமெரிக்கா சென்று திரும்பி சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. கடந்த ஆண்டு
ஜனவரி மாதம் தனது மேல்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்தியா திரும்பிய
ஜெயக்குமார், இங்கே சில தற்காலிக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அமெரிக்க கலாச்சாரம் தனக்கு ஒத்துவரவில்லையென்றும், அந்தச் சூழலை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையென்றும், எனவே மீண்டும் அங்கே சென்று படிப்பைத் தொடரும் எண்ணம் இல்லையென்றும் ஜெயக்குமார் சொல்லியிருந்தார். அவர் படித்த மேற்கு வெர்ஜினியா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் வெர்ஜினியா பகுதி இனவெறிக்கும், நிறவெறிக்கும் பெயர் போனது. இந்நிலையில் அமெரிக்கப் படிப்பை அந்தஸ்தின் அடையாளமாகக் கருதிய பெற்றோர், ஜெயக்குமாரை மீண்டும் அமெரிக்கா செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், தனது தாயின் சேலையைக் கொண்டு மின்விசிறியில் தூக்குமாட்டி உயிர் விட்டிருக்கிறார்.
இது போன்ற செய்திகள் சமீபகாலமாய் பத்திரிகைகளில் மீண்டும் மீண்டும் தலைகாட்டியபடியே இருக்கிறது. இவற்றில் இடம், பெயர், காலம் போன்றவற்றை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் காரணங்களின் சாராம்சம் அதிசயக்கத்தக்க விதத்தில் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது. ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை என்பதில் ஆரம்பித்து ஐந்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை வரை பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் தற்கொலைகளின் காரணங்களும், அடிப்படைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.
சந்தையில் குவியும் கண்ணைக் கவரும் நுகர்பொருட்கள் அணிவகுக்கும் அதே நேரத்தில், பொருளாதார வாழ்க்கை மேலும் நொறுங்கி வீழ்ந்து வரும் போக்குகள் ஒரு பக்கமும், வேலைச் சந்தையில் அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக சம்பளம் குறைந்து வருவது மறு பக்கமுமாக சேர்ந்து மாணவர்களைத் தங்கள் பொருளாதாய வாழ்க்கையின் கடும் சவால்களை எதிர்கொண்டு வென்றேயாக வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் தள்ளி விடுகிறது. பந்தயத்தில் ஓடும் தமது குதிரையும், பிற பந்தயக் குதிரைகளிலிருந்து எந்த வகையிலும் ‘தரம்’ குன்றிப் போய் விடலாகாது என்பதில் பெற்றோரும் உறுதியாக இருக்கின்றனர். குதிரைகளுக்கே கூட கொள்ளுப்பயிறு தின்னக் கொடுக்கலாம்; மெல்லத் தின்கிறதே என்று வயிற்றைக் கிழித்து திணிக்க முயன்றால் என்னவாகும்?
சமீபத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்த போது, எட்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனை ஐ.ஐ.டியில் சேர்ப்பதற்காக இப்போதே டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பி வருவதாகப் பெருமையுடன் கூறினார். உயர் படிப்புக்கு மூளையைத் தயார் செய்யும் அதே நேரம், பிற்காலத்தில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகளுக்கு தனது வாரிசு எந்த வகையிலேனும் தகுதியில் குறைந்துவிடக் கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். அந்தச் சின்னப் பையனின் ஓய்வு நேரத்தை பட்டியலிட்டு, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், எதைக் கற்றுக்கொள்ள வேண்டும், எதை விளையாட வேண்டும், எப்படி விளையாட வேண்டும், யாரோடு விளையாட வேண்டும் என்று சகலத்துக்கும் கறாரான வேலைத் திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.
நீச்சல், சதுரங்கம், கர்நாடக சங்கீதம், கிரிக்கெட் கோச்சிங், கராத்தே, சிலம்பம், யோகா, அபாக்கஸ் என்று நீண்ட அந்தப் பட்டியலில் இருந்த பெயர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தேன். பதினைந்து என்று வந்தது. அந்தச் சிறுவனின் வயது அதில் ஒரு எண் குறைவு – பதினான்கு தான். நான் அவனை அருகில் அழைத்து உட்கார வைத்தேன். பதினான்கு வயதுக்கேயுரிய எந்தவிதத் துருதுருப்பும் இன்றி ஒரு ஜோம்பியைப் போல் இருந்தான். நிலைகுத்திய பார்வையோடு எங்கோ வெறிப்பதும், கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்களை முணுமுணுப்பதுமாக இருந்த அவனைப் பெருமிதத்துடன் நோக்கிய அவன் தந்தை என்னிடம் இவ்வாறு சொன்னார் – “சார், அவன் ஒரு ஜீக் (Geek – அறிவுஜீவி) மாதிரி தான் எங்க கிட்டயே பேசுறான்”
இப்படி நடமாடும் கலைக்களைஞ்சியமாக மாறியாக வேண்டிய கட்டாயமும், அப்படியும் தட்டுத்தடுமாறி மாறிய பின் நடக்கும் போட்டியில் தோற்றால் இழந்து போய் விடக்கூடிய வாழ்க்கை, கண்களுக்கு முன்னே ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. கண் சிமிட்டும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும் வேகத்துக்கு இணையாக ஓட வேண்டிய நிர்ப்பந்தமும், அந்த வாழ்க்கையை துய்க்கத் துடிக்கும் அடங்காத ஆசையும், அந்த ஆசை உண்டாக்கும் ஏக்கமும், ஏக்கம் நிறைவேறாமல் வரும் ஏமாற்றமும், ஏமாற்றம் உண்டாக்கும் விரக்தியும் இளையோர் உலகில் செல்வாக்கு செலுத்துகிறது.
இது ஜெயக்குமாரைப் போன்ற மாணவர்களுக்கு மட்டுமா நேர்கின்றது..?
***
அற்ப பிரச்சினைகளுக்காகத் தற்கொலைகள் மற்றும் சில்லறைச் சண்டைகளுக்காகக் கொலைகள் என்பது பெருநகரங்களோடு மட்டும் முடிந்து விடவில்லை. சிறிய தொழில் நகரங்களிலும் தற்கொலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியுள்ளது. கடந்த 2009 ஜனவரி மாதம் தொடங்கி 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டுமே திருப்பூரில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 980. கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை மட்டுமே 264 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. திருப்பூரில் மட்டும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 30 தற்கொலை முயற்சிகள் நடப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த இறப்புகளில் 61 சதவீதம் ஆண்கள், 33 சதவீதம் பெண்கள் மற்றும் 6 சதவீதம் சிறுவர், சிறுமியர். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் மூலம் மட்டும் சுமார் 12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் தொழில் நகரமான திருப்பூர் தற்போது பனியன் நகரம், டாலர் சிட்டி என்று மட்டும் அறியப்படுவதில்லை – அது தற்கொலை நகரமாகவும் அறியப்படுகிறது.
திருப்பூர் நகர செய்தித்தாள்களைப் புரட்டினால், பக்கத்துக்குப் பக்கம் தற்கொலைகளைச் சந்திக்காமல் கடந்து போக முடியாது. “கள்ளக் காதலை உறவினர்கள் கேலி பேசியதால் தனது மூன்று மகள்களுக்கும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தாய்”. “கணவன் நகையை அடகு வைத்துக் குடித்ததால், மனமுடைந்த இளம் மனைவி தூக்கில் தொங்கினார்”. “கல்விக்கடன் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாணவர் தற்கொலை” “கந்துவட்டிக்காரர்கள் தொந்திரவு தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை” “வேலை கிடைக்காததால் தற்கொலை…”
மேலே தினசரிகளில் தலைப்புச் செய்திகளாய் வந்தவற்றில் சிலவற்றை மட்டும் பார்த்தோம். திருப்பூரின் தற்கொலைகளுக்குக் காரணங்களாய் செய்தித்தாள்கள் சொல்பவையனைத்தும் சாமானிய மக்கள் வாழ்வில் எதார்த்தமாய் எதிர்கொள்ளும் அன்றாடச் சிக்கல்கள் தான். கல்விக்கடன் தாமதப்படுவது அல்லது கிடைக்காமல் போவது, பள்ளியில் ஆசிரியர்கள் கண்டிப்பது, வேலை கிடைக்கத் தாமதமாவது அல்லது கிடைக்காமல் போவது, கடன்காரன் வீட்டு வாசலின் முன் நின்று ஏசுவது என்று நீளும் தற்கொலைக்கான காரணங்கள் ஏதும் புதிதில்லை – கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய காரணங்கள் தாம்.
எனில், இப்போது மட்டும் ஏன் இவை தற்கொலைகளாய் முடிகின்றன?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பள்ளி மாணவர்களாய் இருந்த போது இப்போதிருப்பதை விட கண்டிப்பு அதிகமாய்த்தான் இருந்தது. மாணவர்களை அடிப்பதற்கென்றே சில ஆசிரியர்கள் விசேசமான புளியம் விளார்களை வைத்திருப்பார்கள். எங்கள் தமிழாசிரியர் பிரம்படிக்கு ‘பிரம்பாம்பழம்’ என்றே பெயர் வைத்திருப்பார். ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்படாத அல்லது படிக்காமல் குறும்புத்தனம் காட்டித் திரியும் மாணவர்கள் எவரும் பிரம்பாம்பழத்தை ருசிக்காமல் தப்பிக்க முடியாது. எமது பெற்றோர் பள்ளியில் எங்களை விடும்போதே தெளிவாய்ச் சொல்லி விடுவார்கள் ‘படிக்கிறானோ இல்லையோ, ஒழுக்கமா நடந்துக்க வையுங்க சார்… கண்ணு ரெண்டையும் விட்டுப்பிட்டு தொலிய உரிச்சிடுங்க’. ஆனால், அப்போது மாணவர்கள் யாரும் கண்டிப்புக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டதில்லை.
அதே போல், வேலை தேடுவதிலாகட்டும், கடன்களை எதிர்கொண்டு சமாளிப்பதாகட்டும், குடும்ப விவகாரங்களாகட்டும் இந்தளவுக்கு அதிகரித்த எண்ணிக்கையில் தற்கொலைகளாய் முடிந்ததில்லை. இப்போது மட்டும் ஏன் என்கிற கேள்விக்கு விடை திருப்பூரின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதில் கிடைக்கலாம். திருப்பூர் அதையொத்த சிறிய தொழில்நகரங்களின் வாழ்க்கைச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள ஒரு துலக்கமான வகைமாதிரியாய் விளங்குகின்றது.
70களில் சிறியளவில் உள்நாட்டுச் சந்தைக்கு மட்டுமே உள்ளாடைகள் தயாரித்து வந்த திருப்பூரின் இன்றைய வளர்ச்சியோ அபரிமிதமானது. இன்று திருப்பூரில் தயாராகும் ஆயத்த ஆடைகள் உலக ஆயத்த ஆடைச் சந்தையின் ஒரு முக்கிய அங்கம். திருப்பூர் முதலாளிகள் மாறிவரும் சந்தையின் தேவைகளுக்கு ஈடுகொடுத்து போட்டியில் தாக்குப்பிடிப்பதற்காக தமது தயாரிப்புகளில் மட்டும் புதிய வகைகளைப் புகுத்தவில்லை – உற்பத்தி முறைகளிலும், கருவிகளிலும், தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதிலும் புதியபுதிய முறைகளைப் புகுத்தியுள்ளனர்.
தென்மாவட்டங்களில் இருந்து பதின்ம வயதுச் சிறுமிகளை ஏஜெண்டுகள் மூலம் பிடித்து வந்து, கம்பெனிக்கு அருகிலேயே ‘ஹாஸ்டல்’ எனப்படும் சிறைச்சாலைக்குள் அடைத்துவைத்து, நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரம் வேலை வாங்கிக் கொள்கிறார்கள். இப்படி சில ஆண்டுகள் வேலை செய்த பின், திருமணச் செலவுக்கு முப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை ரொக்கமும், தாலியில் கோர்த்துக் கொள்ள குந்துமணி தங்கமும் ‘கூலி’யாகத் தரப்படுவதற்கு திருப்பூர் முதலாளிகள் வைத்திருக்கும் பெயர் – சுமங்கலித் திட்டம்.
உ.பி, ராஜஸ்தான், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை ஏஜெண்டுகள் மூலம் பிடித்து வந்து, ‘கேம்ப்’ எனப்படும் தகரக் கொட்டடியில் அடைத்துப் போட்டு, நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டு, அதிகபட்ச வாரக் கூலியாக 1700 ரூபாய்கள் கொடுப்பதற்குப் பெயர் – கேம்ப் கூலித் திட்டம்.
இவர்கள் யாரும் பணி நிரந்தரம் பெற்றவர்கள் அல்ல. பல ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணி புரிந்திருந்தாலும் இவர்கள் எப்போதும் பயிற்சியாளர்கள் தான். ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் உண்டாகும் ஃபைன் டஸ்ட் எனப்படும் குறுந்துகள்களை சுவாசிப்பதன் மூலம் இந்தத் தொழிலாளர்கள் பலருக்கும் ஆஸ்துமா, டி.பி போன்ற நுரையீரல் கோளாறுகளும், சாயப்பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சோரியாசிஸ் போன்ற தோல் வியாதிகளும் சர்வசாதாரணமாக ஏற்படும். ஆனால் மருந்துக்குக் கூட பாதுகாப்பு உபகரணங்களோ, தடுப்பு முறைகளோ இங்கு பயன்படுத்தப் படுவதில்லை. மருத்துவக் காப்பீடு என்கிற சொல்லையே இந்தத் தொழிலாளர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
திருப்பூரின் நான்கு லட்சம் தொழிலாளர்களில் சுமார் பத்து சதவீதத்துக்கும் குறைவானவர்கள் தான் நிரந்தத் தொழிலாளிகள். பெரும்பான்மையான ஒப்பந்தத் தொழிலாளிகள் மற்றும் ‘பயிற்சிக்’ காலத்தில் உள்ள தொழிலாளிகளுக்கு தொழிற்சங்க பாதுகாப்பு என எதுவும் இல்லை. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபோது தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது; தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்படும்போது குரல் கொடுக்க தொழிற்சங்க அமைப்புகள் வலுவாக இருந்தன. இன்றோ தொழிலாளர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். பணியிடப் பிரச்சினைகளில் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரோ அதே போல் தான் சமூகத்திலும் அவர்கள் தனிமைப்பட்டுள்ளனர்.
திடீரென்று வேலை அதிகரிப்பது, திடீரென்று குறைவது, எதிர்பாராமல் வேலை பறிபோவது என்கிற இந்த நச்சுச் சுழற்சியில் தவிர்க்கவியலாமல் கந்துவட்டிக் கும்பல்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். வறுமையும், வேலையின்மையும், கடன் சுமையும் ஒரு பக்கத்திலிருந்து நெட்டித் தள்ளுகிறதென்றால், நிலையற்ற வேலை இன்னொரு முனையிலிருந்து கழுத்தை இறுக்குகிறது. ஓரு ஈசலின் பிறப்பையும், இறப்பையும் ஒத்த வேகத்தில் திருப்பூரின் தொழிலாளர் வாழ்க்கை அலைபாய்கின்றது. ஆர்டர்கள் குவியும் நாட்களில், சிறுநீர் கழிக்கவும் கூட நேரம் தரப்படாமல் கசக்கிப் பிழியப்படும் அவர்கள்; ஆர்டர்கள் குறையும் நாட்களில் ஈவிறக்கமின்றி தூக்கி வீசப்படுகிறார்கள். ஏஜெண்டின் அழைப்புக்கு ஏங்கிக் கிடக்கும் காதுகளில் கந்து வட்டிக்காரனின் பைக் உருமல் அமிலமாய்ப் பாய்கிறது.
திருப்பூரின் அராஜகமான பணிச்சூழல் உளவியல் ரீதியில் உண்டாக்கும் அழுத்தமும், நெருக்கடியும் தொழிலாளர்களின் பண்புகளில் அராஜகமான சிந்தனைப் போக்கை உண்டாக்கி விட்டிருக்கிறது. பாதுகாப்பற்ற பரபரப்பில் சிக்குண்டு போன மனம் சில்லறைச் சிக்கல்களுக்குக் கூட நின்று நிதானமாய் யோசித்து ஒரு முடிவெடுக்கத் தடுமாறுகிறது – முழம் கயிற்றை நம்பிச் சரணடைகிறது. சட்டென்று துவங்கி சட்டென்று முடியும் வேலைகளைப் போல் வாழ்க்கையும் சில நொடிக் கனவு போல் முடிந்து போகிறது. கடந்து போகும் பிணத்தின் முகத்தைப் பார்க்கக் கூட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.
***
பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும் மட்டும் மக்களின் வாழ்க்கை சமூகத்தினின்றும் துண்டிக்கப்பட்டு, தனித்து விடப்படவில்லை. இந்தியப் புவிப்பரப்பின் பெரும்பங்கை ஆக்கிரமித்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக விரிந்து கிடக்கும் கிராமங்களின் நிலையும் மெல்ல மெல்ல மாறி வருகிறது. இந்தியாவெங்கும் தற்கொலை செய்து மாண்டு போகும் இலட்சக்கணக்கான விவசாயிகளின் இறந்த உடல்கள் எழுப்பும் கேள்விகள், பதில்களைத் தேடி நம்மைத் துரத்துகின்றன.
விவசாயத்தின் பிரச்சினை ஓரிரு பத்தாண்டுகளில் தோன்றியதல்ல எனும்போது தற்கொலைகள் சமீபத்திய வருடங்களில் அதிகரித்துச் செல்லக் காரணம் தான் என்ன?
2009-ம் ஆண்டு மட்டுமே இந்தியாவில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். 1995 – 2011 கால அளவில் மட்டும் சுமார் 2,53,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாய விளைபொருட்கள் இறக்குமதியாவது, விளைச்சலுக்கு விலை கிடைக்காதது, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விண்ணை முட்டும் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணிகள் விவசாயிகளுக்கு கடன் வாங்கும் நிர்ப்பந்தத்தை உண்டாக்குகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயக் கடன்களைப் புறக்கணிக்கும் நிலையில், தவிர்க்கவியலாமல் அவர்கள் உள்ளூர் கந்து வட்டிக் கும்பலின் பிடியிலோ, குறுங்கடன் தரும் கார்ப்பரேட் கந்து வட்டிக் கும்பலிடமோ மாட்டிக் கொள்கிறார்கள்.
ஆந்திராவின் அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்லெம் சட்டென்னாவுக்கு இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. சென்ற பருவத்தில் பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததைப் பார்த்து இந்த முறையும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மேலும் 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து பருத்தி விதைத்துள்ளார். இதற்காக 1,80,000 ரூபாயை உள்ளூர் கந்து வட்டிக்காரர் ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று பருத்தியின் விலை சரிந்து, குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் வரை குறைந்துள்ளது. சட்டென்னாவுக்கோ எதிர்பார்த்த மகசூலும் கிடைக்கவில்லை. மொத்த நிலத்திலிருந்தும் முதல் பருத்தியெடுப்பில் வெறும் ஒரு குவிண்டால் பருத்தி தான் கிடைத்திருக்கிறது. கந்துவட்டிக்காரனுக்கு அஞ்சிய சட்டென்னா பூச்சி மருந்தைக் குடித்து உயிரை விட்டுள்ளார்.
இறந்து போன சட்டென்னாவுக்கு இன்னும் வாழ்க்கையென்றால் என்னவென்றே தெரியாத ஏழு வயதேயான மகன் இருக்கிறான். இளம் மனைவி இருக்கிறார். தான் இறந்து விட்டால் இவர்களின் நிலை நிர்க்கதியாகும் என்பது சட்டென்னாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்; அது போலவே அவருக்கு இன்னொன்றும் சர்வ நிச்சயமாகத் தெரியும் – அது கந்து வட்டிக்காரர்கள் கடனை வசூலிக்கு எந்தெந்த எல்லைகளுக்கெல்லாம் செல்வார்கள் என்பது.
25/02/2012 தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் குறுங்கடன் வங்கிகள் கடனை வசூலிக்க பின்பற்றும் வழிமுறைகளையும், அதனால் ஆந்திராவில் அதிகரித்துள்ள தற்கொலைச் சாவுகளையும் பற்றி விரிவான செய்தியொன்று வெளியாகியுள்ளது. கடன் வாங்கியவரின் வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்களை அடாவடியாகப் பறித்துச் செல்வது, வீட்டின் முன் நின்று ஏசுவது மட்டுமல்ல, கடனை வசூலிக்கு வந்த குண்டர் படை வீட்டிலிருக்கும் பெண்களை விபச்சாரத்துக்கு அனுப்பியாவது கடனைக் கட்ட வேண்டியதுதானே என்று கூட விவசாயிகளை அவமானப்படுத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.
எண்பதுகளிலும், அதற்கு முன்பும் விவசாயிகள் ஓரளவு அமைப்பு ரீதியாக அணி திரண்டிருந்தனர். அன்று வலுவாக இருந்த விவசாயச் சங்கங்கள் இன்று வலுவிழந்து போயுள்ளதுடன், அரசியல் ரீதியிலும் தீர்மானகரமான ஒரு சக்தியாக இல்லை. அன்று விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக வாதாட, போராட அமைப்புகள் இருந்தது. விவசாயிகள் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாகவோ, பிரச்சினைகளைத் தானே தனித்து நின்று எதிர்கொண்டாக வேண்டுமென்றோ நெருக்குதலுக்குள்ளாக வில்லை. இன்றைக்கு விவசாயக் கூலித் தொழிலாளர்களும், சிறிய விவசாயிகளும் நகரங்களுக்கு அத்துக்கூலிகளாய்ச் சென்று விட்ட நிலையில், எஞ்சியவர்கள் அமைப்பு பலமற்று தணித்து விடப்பட்டுள்ளனர்.
சமூகத்தின் இயக்கம் அமைப்பு ரீதியாகப் பிணைக்கப்பட்டிருந்த போது இருந்த பாதுகாப்பு இன்று தனிநபர்களாய்ச் சிதறி விட்ட பின் அகன்றுள்ளது. அரசு தனது அடக்குமுறைகளை இன்னும் கூர்மையாக்கி மேலும் மேலும் பாசிசமயமாகி வரும் சூழலும், எவருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்களில்லை எனும் மமதையில் நாட்டின் எல்லைகளைப் பன்னாட்டு மூலதனத்துக்கு அகலத் திறந்து விட்டிருக்கும் சூழலும், இதனால் மாறி வரும் பொருளாதாரச் சூழலும், அதைத் தொடர்ந்து சமூகத்தில் கூர்மையடைந்து வரும் ஏற்றத்தாழ்வுகளும், அதிகரித்து வரும் நுகர்பொருள் மோகமும், அதை அடைய மக்கள் செய்து கொள்ளும் சமரசங்களும், இவற்றால் விளையும் பிரச்சினைகளும் மக்களின் முன் கைகோர்த்து நிற்கும் போது மக்கள் அதைத் தன்னந்தனியே எதிர்கொள்ளும் நிலையில் நிற்கிறார்கள். www.vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக