வெள்ளி, 23 நவம்பர், 2012

சிறுமி மலாலாவிற்கு உள்ள பொறுப்பும் துணிச்சலும்


 ஆர். நடராஜ்
malala-1Malala"பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மாமியார் மருமகள் சச்சரவு பற்றி  அங்கலாய்ப்பார்கள். பெண்ணுக்குப் பல முனைகளிலிருந்து பிரச்னைகள் வருகின்றன. பெண் சிசுவதை, பாலியல் கொடுமை, கல்வி மறுப்பு, வரதட்சணைத் தொல்லை, புகுந்த வீட்டில் பிரச்னை, அலுவலகங்களில் உரிமை பறிப்பு என்று திணற அடிக்கும் பிரச்னைகள் நமது நாட்டில். மேலை நாடுகளிலும் வேறுவிதமான எதிர்ப்புகள்.
 ஆனால் பின்தங்கிய நாடுகள், மூடப்பழக்கங்களில் உழலும் சமுதாயங்கள், தீவிரவாதம் அன்றாட நிகழ்வாக இருக்கும்  இடங்களில், பெண்கள் அதுவும் குழந்தைகள் பல கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.
 தீவிரவாதம் மிகுந்த இடங்களில் பள்ளிகள் முறையாக நடப்பதே அபூர்வம். நாட்கணக்காக மூடியிருக்கும். நடத்தப்படும் சில நாள்களிலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம்; இந்தச் சூழலில் எவ்வாறு படிக்க முடியும்? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு "கற்றலில் இனிமை' என்று அந்தப் பிஞ்சு உள்ளங்கள் கல்வியில் ஈடுபட முடியுமா?

 பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ளது கைபர் பக்துன்க்வா. அதில் ஸ்வாட் மாவட்டத்தில் மிங்கோரா என்ற சிறு நகரத்தில் வசிப்பவள் மலாலா யூசஃப்சாய். தந்தை யூசஃப்சாய் சமூக ஆர்வலர். எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துபவர். பஸ்தூன் வம்சாவளியில் வந்த முஸ்லிம் குடும்பம்.  பேசுவதோடு மட்டுமில்லாது ஒரு பள்ளியும் நடத்துகிறார். சிறுமி மலாலா, தந்தையின் கல்விச் சிந்தனைகளால் கவரப்பட்டு அதிக ஈடுபாடோடு சிறு வயதிலிருந்தே படிப்பில் கவனம் செலுத்தினாள்.
    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்த ஸ்வாட் மாவட்டம் தலிபான் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் தாக்குதலும் எதிர்தாக்குதலும், இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும். கல்விக்கூடங்கள் மூடிக் கிடக்கும்.

  கல்வி அடிப்படை உரிமை -  எவ்வாறு தீவிரவாதிகள் அந்த உரிமையைப் பறிக்க முடியும் என்று சிறுமி மலாலாவின் உள்ளம் கொந்தளித்தது. தனது ஆதங்கத்தை இணையதளத்தில் இணைய வலைமூலம் உருது மொழியில் அவ்வப்போது வெளியிட்டாள். தந்தையும் ஊடகங்கள் மூலமாக தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மலாலாவும் இந்தக் கூட்டங்களுக்குச் சென்று பேசுவாள். சிறுமியின் பேச்சும் நியாயத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் தைரியமும் எல்லோரையும் கவர்ந்தது.

 பி.பி.சி. ஊடகம் அவளது இணைய வலையை வைத்து நிகழ்ச்சி நடத்தியது. அவளது பாதுகாப்பு கருதி புனைபெயரில் அவளது கருத்துகள், மிங்கோரா நகரத்தில் தீவிரவாத நிகழ்வுகள், எவ்வாறு பெண்கள் தலிபான்களால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தது. அந்த நிகழ்ச்சி அமைதிக்காகப் போராடுபவர்களின் ஆதரவைப் பெற்றது.

  பயமின்றி கருத்துப் பரிமாற்றம் - அதுவும் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய இடத்தில்; விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி சிறுமி மலாலா கவலைப்படவில்லை, ஆனால் சிந்தித்தாள்.

 "என்னைத் தீவிரவாதிகள் தாக்கினால் அவர்களிடம் நிச்சயமாகக் கேட்பேன், ""உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, எங்களது கல்வி உரிமையைப் பறிக்க?'' என்று கேட்பேன்' என்று இணைய வலையில் பதிவுசெய்தாள்.

  தீவிரவாதிகள் தாக்குதலில் பொது இடங்களும் பள்ளிக்கூடங்களும் சேதமடைகின்றன. பள்ளிக்கூடங்களோ செயல்படவில்லை. இயங்காத பள்ளிக்கூடங்களை ஏன் தகர்க்க வேண்டும்? அதில் தீவிரவாதிகளுக்கு என்ன பயன் என்று விரக்தியாக மலாலா தனது இணைய வலையில் குறிப்பிடுகிறாள்.

 பதினான்கு வயது மலாலாவின் துணிச்சலும் அவளுக்குப் பெருகிவரும் ஆதரவும் தீவிரவாதிகளின் வெறுப்பைத் தூண்டியது.

 கடந்த அக்டோபர் 10-ஆம் நாள் மலாலா பள்ளியிலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பும்போது அந்த வாகனம் தீவிரவாதிகளால் மடக்கப்பட்டது. பஸ்ஸில் ஏறிய தீவிரவாதிகள் மலாலாவை அடையாளம் கண்டு சுட்டனர்.  பாவிகளின் குண்டு அவளது தலையைத் துளைத்து கழுத்தில் சிக்கியது. மேலும் இரண்டு மாணவிகள் காயமுற்றனர்.

 உடனடியாக மலாலா பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குண்டு எடுக்கப்பட்டது.  பின்பு இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகர எலிசபத் மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 மலாலா தாக்கப்பட்ட சம்பவம் மதம், நாடுகள் என்ற எல்லையைக் கடந்து எல்லோராலும் கண்டனம் செய்யப்பட்டது.

 பிரபல மேற்கத்திய இசைப்பாடகி Madonna "மனித சுபாவம்' என்ற தனது பாடலை மலாலாவிற்கு அர்ப்பணித்தார். ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.

 பொதுச் செயலர் பான் கீ மூன், மலாலாவின் வீரச்செயல்களைப்  பாராட்டி எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் கல்வி கொடுப்பதற்கு சர்வதேச அமைப்புகள் துரித முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

  ""நான் மலாலா'' என்ற முழக்கம் பெண் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முக்கியமாகத் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய இடங்களில் மாற்றுப்பாதை வகுக்கவும்  வரையப்பட்டது.

  பெண் கல்வி திட்டத்தில் முக்கிய மூன்று அம்சங்கள் உள்ளன. 1. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க திட்டம் வகுக்க வேண்டும். 2. எல்லா நாடுகளும் பெண் கல்விக்கு எதிரான பழக்கங்கள், நடவடிக்கைகளை சட்ட விரோதச் செயல் என்று பிரகடனப்படுத்த வேண்டும். 3. பள்ளிக்குச் செல்ல முடியாத 70 லட்சம் குழந்தைகளை 2015-க்குள்  பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளை அடைய சர்வதேச அமைப்புகள் பாடுபட வேண்டும் என்பதாகும்.

  மலாலா தாக்கப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியான தினம் "நவம்பர் 10', பெண் கல்வியை வலியுறுத்தும் தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

    பான் கீ மூன் தனது அறிக்கையில், ""சிறுமி மலாலா பெண் கல்விக்கு உலகின் முத்திரைச் சின்னம்'' என்று புகழ்ந்துள்ளார். ""நவம்பர் 10 - மலாலா நாள்'' உலகெங்கிலும் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்பட்டது. சிறுமி மலாலா விரைவில் குணமடைய கூட்டுப் பிராத்தனை தொடர்ந்து நடைபெறுகிறது.

  சிறுமி மலாலாவிற்கு உள்ள பொறுப்பும் துணிச்சலும் சிறிதளவும் மற்றவர்களிடம் இருந்தால் தீவிரவாதம் தலைதூக்க முடியாது. முறையற்ற தாக்குதல் என்ற பயத்தைப் பரவச்செய்து தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். நமக்கேன் வம்பு என்று சாதாரண மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதைக் குறை கூற முடியாது. தீவிரவாதிகள் கை ஓங்கினால் மக்கள் முடங்குவது இயல்பு. மலாலாபோல் துணிச்சலாகக் குரல் எழுப்புபவர்கள் வெகு சிலரே. ஆனால், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை எற்படும். பயம் தெளியும். தீவிரவாதத்தை ஒழிக்க அவர்களது ஒத்துழைப்பும் பெருகும்.

  மும்பையில் சமீபத்தில் அரசியல் தலைவர் மறைவில் நகரமே ஸ்தம்பித்தது. அவசியம் இருந்தாலொழிய, மற்றபடி வெளியே வர வேண்டாம் என்று மறைமுகமாக, பொறுப்பில் உள்ளவர்களே எச்சரிக்கை விடுத்தனர். இரவாமை என்ற நிலை வரக்கூடாது என்று வேண்டலாம். ஆனால், இறவாமை எவ்வளவு வேண்டினாலும் வராது. இயற்கையாகவோ விதியாலோ ஏற்படும் இறப்பை வைத்து பொதுச் சொத்துகளை அழிப்பது, உடைப்பது, மக்களை அச்சுறுத்துவது, சமுதாயத்தைச் செயலிழக்கச் செய்வது எந்த விதத்தில் நியாயம்?  

  இதைத்தான் இரண்டு இளம் பெண்கள் ஷஹீன்ததா, அவளது தோழி ரேணு தங்களது சமூக வலை தளத்தில் குறிப்பிட்டு மும்பை கடையடைப்பைப்பற்றிக் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அரசியல் தலைவரைப் பற்றி ஒன்றும் கருத்துக் கூறவில்லை. "ஏன் இந்த நிகழ்வை ஒட்டி நகரமே ஸ்தம்பிக்க வேண்டும்?' என்று வினவியது சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும், கலவரத்தைத்  தூண்டும் வகையில் அமையும் என்று காவல்துறையினர் சைபர் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து இரு பெண்களையும் கைது செய்தது பலருடைய கண்டனத்திற்கு உள்ளானது.

 சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு உள்ள காவல்துறைக்கு, எப்போதும் - இருதலைக்கொள்ளி எறும்பு என்ற - நிலைமையைச் சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. நடவடிக்கை எடுத்தாலும் தகராறு, எடுக்காவிட்டால் பேரிழப்பு. ஷஹீனின் உறவினரின் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை சமூக விரோதிகளால்  தாக்கப்பட்டுள்ளது. இளம் பெண்கள் மீது எழுத்து மூல புகார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது.

 காவல் நிலையப் பொறுப்பில் உள்ளவர் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார். நடவடிக்கை எடுக்காவிட்டால் சேனா ஆதரவாளர்கள் வேறுவிதமாக வன்முறையில் ஈடுபடலாம். அந்த இளம் பெண்களின் பாதுகாப்பே கேள்விக் குறி ஆகியிருக்கலாம். ஒரு முக்கிய அரசியல் தலைவர் இறப்பிற்குப் பிறகு அமைதி குலையாமல் மும்பையைக் காப்பற்றிய காவல்துறைக்கு இந்த சைபர் வழக்கு ஒரு பின்னடைவுதான்.

 காவல்நிலைய அதிகாரிகளைக் குறைசொல்லிப் பயனில்லை. காவல்துறை அப்போதைய நிலவரத்தைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம். எடுக்காவிட்டால் ஏற்படக்கூடிய விபரீத விளைவுகளுக்குக் காவல்துறை மீதுதான் குற்றம் சாட்டப்படும். இது காவல்துறைக்கே உரித்தான பொறுப்பில் உறையும் சங்கடங்கள்; நிச்சயமாக உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் இல்லாமல் வழக்குப் பதிவு செய்திருக்க முடியாது.

  உரிய தருணத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எந்த சவால்கள் வந்தாலும் சமாளிக்கும் திறமைதான் காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும். அவ்வாறின்றி கலகக்காரர்களுக்கு பயந்து வழக்கு போடுவது, இரவில் இரண்டு பெண்களைக் கைது செய்வது தவறான அணுகுமுறையாகும்.

 ஆனால் சமுதாயத்தில் பொறுப்பில் உள்ளவர்கள், சமூக நலவிரும்பிகள் ஏன் ஷஹீன் மாதிரியோ மலாலா போலோ குரல் எழுப்பத் தயங்குகிறார்கள், வசதிக்கு எற்றவாறு தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள்.

  தீவிரவாதிகள் எந்தப் பிரிவினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகள், அவர்களோடு இணக்கம் முறையற்றது,  தேச விரோதம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

  வன்முறையில் ஈடுபடுபவர்கள் போராளிகள் இல்லையேல் தீவிரவாதிகள் என்று கணக்குப் போடுவதால்தான் தீவிரவாதத்தை அறவே ஒழிக்க முடிவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படுகிறது.

 நாம் தீவிரவாத ஒழிப்பு நாள், சத்பாவனா திவஸ், தேசிய ஒருமைப்பாடு தினம் என்று அந்தந்த நாள்களில் உறுதி மொழி எடுக்கிறோம் ஆனால் நடைமுறைகள் கேள்விக்குறியாக இருக்கின்றன.

 ""ஆயிரம் மலர்கள் பூக்கட்டும்'' என்பது போல ஆயிரமாயிரம் மலாலாக்கள் உலகில் உதயமாக வேண்டும். மலாலாவிற்கு வந்த உணர்வு நம்மிடமும் உள்ளது. ""நானும் மலாலா'' என்று வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம். அப்போதுதான் சாந்தி நிலவவேண்டும் என்பது மெய்ப்படும்.

- Dinamani-

கருத்துகள் இல்லை: