வெள்ளி, 23 நவம்பர், 2012

TV சீரியல் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது.

டிவி-சீரியல்தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை. சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களை கட்டிங்குக்காக தவிக்கும் குடிமகனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். சீரியல் அடிமைகளுக்கோ, தங்கள் சிந்தனை காவு கொடுக்கப்படுவது குறித்துத் தெரிவதில்லை. அந்த வகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள். இந்த நெடுந்தொடர்களில் வருகின்ற கதைகளும் அவை தோற்றுவிக்கும் கருத்துகளும் தனியொரு ஆய்வுக்குரியவை.
ஆனால் இத்தொடர்களின் கதைகள் எவ்வாறு தயாராகின்றன என்பதை இதனுடன் கட்டிப் போடப்பட்டுள்ள ரசிகர்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒரு வளர்ப்பு நாயை விடக் கேவலமான முறையில் தாங்கள் ஆட்டிப் படைக்கப்படுவதைத் தெரிந்து கொள்வது, இந்த அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள உதவும்.

***
மிழகத்தில் தற்போது 49 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டு… என இந்த 49ஐப் பலவாறாகப் பிரிக்கலாம். அடுத்த மூன்று – நான்கு மாதங்களில் மேலும் 13 சேனல்கள் வரவிருக்கின்றன.
இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ’டேம்’ (TAM) எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் அளவீடு (Television Audience Measurement)  சொல்லும் கணக்கைச் சார்ந்தே இயங்குகின்றன; நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றன. விளம்பர வருவாய்க்கு மட்டுமல்ல, நிகழ்ச்சித் தயாரிப்புக்கும் ’டேம்’ அளிக்கும் விவரங்கள் முக்கியமானவை. போட்டி ஊடகங்கள் என்ன நிகழ்ச்சியை, எந்த நேரத்தில் ஒளிபரப்புகின்றன, அவற்றுக்கு கிடைக்கும் விளம்பர வருவாய் எவ்வளவு, எத்தனை பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள், ஏன் அதே நேரத்தில் ஒளிபரப்பான வேறொரு நிகழ்ச்சியை புறக்கணித்தார்கள்… என்பதையெல்லாம் சக நிறுவனங்கள் அறிந்து கொள்ள இந்த ’டேம்’ விவரங்கள் அவசியம்.
எனவேதான் வாரம்தோறும் வெளியாகும் ’டேம்’ கணக்கின் விவரங்களை அனைத்து காட்சி ஊடகங்களும் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து அலசுகின்றன. இதன் பிரதிபலிப்பை தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பார்க்கலாம். முன்னணி சேனலாக இருக்கும் சன் டிவியில், வார நாட்களில் நாளொன்றுக்கு 18 தொடர்கள் ஒளிப்பரப்பாகின்றன. அதாவது 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளில் 9 மணி நேரங்களை இந்தக் கதைத் தொடர்களே ஆக்கிரமிக்கின்றன. காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், பிறகு மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் அரை மணி நேரத்துக்கு ஒரு தொடர் வீதம் ஒளிபரப்பாகின்றன.
ஆனால் விஜய், ஜெயா, ராஜ், ஜி தமிழ்… போன்ற மற்ற சேனல்களில் சராசரியாக நாளொன்றுக்கு 9 நெடுந்தொடர்களே ஒளிபரப்பாகின்றன. காரணம், ’டேம்’ கணக்கின்படி இந்தக் காட்சி ஊடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவு. எனவே விளம்பர வருமானம் சன் டிவி அளவுக்கு இவற்றுக்கு வருவதில்லை.
சன் டிவியில் எப்படிக் கதைத் தொடர்கள் தயாராகின்றன? பகலில் ஒரு தொடரை ஒளிபரப்புவதற்கு அரை மணி நேரத்துக்கு ரூபாய் 7 முதல் 9 லட்சம் வரையில் சன் டிவி வசூலிக்கிறது என்கிறார்கள் சீரியல் தயாரிப்பாளர்கள். ‘பிரைம் டைம்’ என்று சொல்லப்படும் இரவு 7.30 முதல் 9.30 வரையிலான நேரத்தில் சீரியல் ஒளிபரப்பாக வேண்டுமென்றால், அரை மணி நேரத்துக்கு கட்டணம் 12 முதல் 14 லட்சம் ரூபாய். இரவு 10 மணிக்கு மேல் என்றால், கட்டணம் ரூபாய் 6 முதல் 8 லட்சம் வரை. இந்தத் தொகை திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களுக்கு மட்டும்தான். சனி, ஞாயிறு ரேட் வேறு.
இப்படி திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையை வாடகைக்கு எடுப்பது போல் வாரத்தின் ஐந்து நாட்களுக்கு அரை அரை மணி நேரமாக ஒரு சீரியல் தயாரிப்பாளர் வாடகைக்கு எடுக்கிறார். அரை மணி நேரத்தில் 18 நிமிடங்கள் தொடருக்கு ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 12 நிமிடங்களை விளம்பரதாரர்களுக்கு விற்பார். அதுவும் பத்துப் பத்து விநாடிகளாக. இப்படி விற்றுக் கிடைக்கும்  பணத்தில் தான் அவர் அரை மணி நேரத்துக்கான வாடகையை சன் டிவிக்கு தர வேண்டும். தனது தொடரில் பணிபுரியும் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு சம்பளம் தர வேண்டும். லாபமும் பார்க்க வேண்டும்.
’டேம்’ தரும் வாராந்திர புள்ளிவிபரம் எக்குத்தப்பாக அமைந்து விட்டால், அடுத்து வரும் வாரங்களுக்கு விளம்பரங்கள் கிடைக்காது. கெஞ்சிக் கூத்தாடினால், சந்தை நிலவரத்தை விடக் குறைவான தொகைக்கு பேரம் பேசுவார்கள். அதற்கு ஒப்புக் கொண்டால் முதலுக்கே மோசமாகும். இன்னொரு பக்கம், பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தால் முதலில் சன் டிவி கண்டிக்கும். அடுத்த வாரம் அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிடும். மூன்றாவது வாரம், பாதியிலேயே தொடரை நிறுத்தி விடும். சில மாதங்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பான ’ஆண் பாவம்’ தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் அந்தத் தொடரை தயாரித்தது ஆர்.எம்.வீரப்பனின் சத்யஜோதி பிலிம்ஸ்.
மற்ற தொலைக்காட்சிகள் பின்பற்றும் வழிமுறை வேறு. அவர்கள் குறிப்பிட்ட தயாரிப்பாளரை அழைத்து ஒரு தொடர் அல்லது நிகழ்ச்சியைத் தயாரிக்கச் சொல்வார்கள். அதற்கான தொகையைத் தீர்மானித்து கொடுத்து விடுவார்கள். தயாரிப்பாளர் அந்தத் தொகைக்குள் தொடரோ, நிகழ்ச்சியோ தயாரித்துக் கொடுத்துவிட்டு, அந்த தொகைக்குள்ளேயே லாபத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். விளம்பர வருவாய் முழுவதையும் தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துக்கொள்ளும்.
தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்த வழிமுறை கம்பி மேல் நடப்பது போல் தான். அதனால் தான் இரவு 9 மணிக்கு மேல் சன் டிவி தவிர மற்றவர்கள் சீரியலுக்குப் பதிலாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். ஒரே காரணம் செலவு குறைவு என்பது தான். அல்லது சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக,  இந்தி மற்றும் தெலுங்கில் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர்களை ‘ஆடித் தள்ளுபடியில்’ வாங்கி தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. ’சிந்து பைரவி’, ’சின்ன மருமகள்’, ’மறுமணம்’ போன்ற தொடர்கள் இப்படி இந்தியில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டவைதான்.
முன்னர் ஷகிலாவின் மலையாளப் படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைத்து ரிலீஸ் செய்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இந்த நெடுந்தொடர்களும் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவையே.
ஒவ்வொரு நெடுந்தொடரின் முடிவிலும் அந்த மாபெரும் படைப்பை உருவாக்குவதில் பங்காற்றிய இயக்குநர் தொடங்கி காபி வாங்கிக் கொண்டுவரும் பையன் வரையிலான அனைவரது பெயர்களும் போடப்பட்டாலும், ஒரு தொடருக்கான கதையையும் காட்சிகளையும் கதாசிரியரோ இயக்குநரோ முடிவு செய்வதில்லை. சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் நிர்வாகிகளும், விளம்பர நிறுவனங்களும் சொல்லும் வகையிலேயே அவை உருவாகின்றன. இந்தக் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடு, இந்த நபருக்கு விபத்தை உண்டாக்கு, திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு இவர் கைதாக வேண்டும், மருத்துவமனை – காவல் நிலையங்களில் சில காட்சிகள் நகர வேண்டும்… என்றெல்லாம் விளம்பரக் கம்பெனிகளும், தொலைக்காட்சி நிர்வாகமும் கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கும். இதற்கேற்பவே காட்சிகளைக் கோர்க்க வேண்டும்.
அது மட்டுமல்ல, நட்சத்திரங்களை உருவாக்குபவர்களும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மற்றும் விளம்பர நிறுவனங்கள் தான். இவர்கள் மனது வைத்தால் யாரை வேண்டுமானாலும் முக்கியக் கதாபாத்திரமாக்கி பிரபலப்படுத்துவார்கள். முறைத்துக் கொண்டால் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளை அழித்து விடுவார்கள்.
அரை மணி நேரத்தில் 18 நிமிடம் தான் தொடர். நடுவில் மூன்று விளம்பர இடைவேளைகள். எனவே ஒவ்வொரு 6 நிமிடத்துக்கும் ஒரு திருப்பம் கொடுக்க வேண்டும். மறுநாள் தொடருக்காக ஏங்கும் விதத்தில், முந்தைய நாளின் இறுதிக் காட்சி அதிர்ச்சி நிரம்பியதாக அமைய வேண்டும். இதை அத்தொடரின் படத்தொகுப்பாளர் (எடிட்டர்) கவனித்துக் கொள்வார். காட்சியை முன் பின்னாக மாற்றிப் போட்டு, அன்றைய தினத்தின் இறுதிக் காட்சியை அவர் முடிவு செய்து விடுவார். இதற்காக இயக்குநர் அல்லது ’திரைக்கதை’ எழுதுபவரின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கதாபாத்திரத்தைக் கொன்று விடுமாறு தொலைக்காட்சி நிர்வாகம் உத்தரவிட்டால் கொன்று விட்டு, மிச்சமிருப்பவர்களை வைத்து இயக்குநர் கதையை நகர்த்திச் செல்ல வேண்டும்.
இந்தக் கதைத் தொடர்கள் அனைத்திலும் ஒரு பொதுத்தன்மையைப் பார்க்க முடியும். பெண்கள் தான் முக்கியமான பார்வையாளர்கள் என்பதால், பெண் கதாபாத்திரம் தான் மையம். கண்டிப்பாக அவள் ஆளும் வர்க்கப் பண்பாட்டின் வரையறுப்புப்படி ’நல்லவளாக’ இருக்க வேண்டும். அவளுக்கு ஒரு குடும்பம். அது பிறந்த வீடாக அல்லது புகுந்த வீடாக இருக்கலாம். இதைத் தீர்மானிக்க கதாசிரியருக்கு ’சுதந்திரம்’ உண்டு. ’அநாதை’ என்று அமைத்தால் ஏன் அநாதை ஆனாள், அவளது அப்பா – அம்மா யார்… என காரணங்களை அடுக்க வேண்டும். மொத்தத்தில், மையக் கதையில் ஒரு நல்லவள்(ன்), ஒரு கெட்டவள்(ன்), ஒரு அப்பாவி நிச்சயம் இருக்க வேண்டும்.
இந்த மையக் கதைகள் ஒரு வீடு அல்லது அலுவலகம் அல்லது கோயில் ஆகிய மூன்று இடங்களிலேயே பொதுவாக நகரும். அப்போதுதான் தயாரிப்புச் செலவு குறையும். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன், கடை வீதி போன்ற இடங்களுக்கு கதைக்களம் மாறினாலும், செலவு ’கட்டுபடி’ ஆகாது. எனவே நல்லதோ கெட்டதோ எதுவானாலும் இந்த மூன்று இடங்களில் முடிந்தாக வேண்டும்.
மையக் கதையின் மிக முக்கியமான தகுதி என்னவென்றால், அது எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இழுக்கத்தக்கதாகவும், முடிவே இல்லாமல் கிளைக் கதைகளை பின்னும் வாய்ப்புள்ளதாகவும் இருக்க வேண்டும். முடிப்பதைப் பொறுத்தவரை அது எப்போதுமே இயக்குநர் கையில் இல்லை. அதை விளம்பரக் கம்பெனி அல்லது தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்யும்.
கூட்டுக் குடும்பம் என்பதே சமூகத்தில் இன்று காலாவதியாகிவிட்ட போதும், சீரியலைப் பொறுத்தவரை அது பயனுள்ளதாகவே இருக்கிறது. பத்துப் பதினைந்து பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஏழெட்டு பேருக்கு கதையில் வேலையே இல்லையென்றாலும், பின்னால் புதிய பிரச்சினைகளை உருவாக்கி கதையை இழுப்பதற்கு அவர்கள் பயன்படுவார்கள்.
துணைக் கதாபாத்திரங்களும் நல்லவன்(ள்), கெட்டவன்(ள்), அப்பாவி என்ற மூன்று பிரிவுக்குள் மட்டுமே அடங்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காட்சியிலும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அவற்றுக்கு இடையில் ’மோதலை’க் கொண்டு வர முடியும். கதையும் ’சுவாரஸ்யமாக’ நகரும்.
நாயகிக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயல்கிறார்கள்… எனக் கதையைத் தொடங்கினால், தரகர் பொய் சொல்கிறாரா அல்லது ’எதிரி’ தவறான மணமகனை பரிந்துரைக்கிறாரா எனச் சில நாட்களுக்கு காட்சிகளை நகர்த்தலாம். பிறகு திருமணம் ஆகுமா, ஆகாதா என்ற ’எதிர்பார்ப்பை’ வைத்து பல நாட்களைக் கடத்தலாம். திருமண மண்டபத்தில் தாலி காணாமல் போவதில் ஆரம்பித்து சீர் அல்லது வரதட்சணையில் பற்றாக்குறை ஏற்படுவது வரை பிரச்சினையை 10 அல்லது 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம். திருமணமான பிறகு கணவனுடன் சேருவாளா அல்லது புகுந்த வீட்டில் யாராவது சேர விடாமல் தடுப்பார்களா என்ற கேள்வியை போடலாம். அது தொடர்பான காட்சிகளை நுழைக்கலாம். பிறகு கர்ப்பம். கர்ப்பப் பையில் பிரச்சினை அல்லது குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிக்கல் அல்லது அபார்ஷன் செய்ய யாரேனும் முயற்சி. அப்புறம் குழந்தை பிறப்பு அல்லது பிறந்த குழந்தை திருடப்படுதல். திருடப்பட்ட குழந்தை இன்னொரு இடத்தில் வளர்தல், அக்குழந்தைக்காகத் தாய் தவித்தல். குழந்தை வளர்ப்பு, நோய்வாய்ப்படுதல், தவறான தடுப்பூசியால் பாதிப்பு. பள்ளிக்கு குழந்தை செல்லும் போது கடத்தப்படுதல், பிச்சை எடுக்க வைத்தல்; வளரும் குழந்தை சிறுமியாக இருந்தால் பூப்பெய்துதல், காதலில் சிக்குதல்; சிறுவனாக இருந்தால் போதை போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாதல்…
இப்படியாக 40 நாட்களுக்கு ஒரு கதை வீதம் மையக் கதையை நகர்த்திக் கொண்டே செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் தலா யாரேனும் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராட வேண்டும். அவர்களைக் காப்பாற்ற நாயகி தீ மிதிக்க வேண்டும் அல்லது மண் சோறு சாப்பிட வேண்டும். இந்தப் ’பகுதி’ முடிந்ததுமே காவல் நிலையம் வர வேண்டும். திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு நாயகி அல்லது நாயகன் கைதாக வேண்டும். சிறையில் அவர்களைக் கொல்ல ஏற்பாடு நடக்க வேண்டும்…
இதற்காக பல பழைய – புதிய திரைப்படங்கள் அல்லது பாக்கெட் நாவல்களின் கதையை, காட்சிகளை ’சுடலாம்’; சுட வேண்டும். விளம்பர நிறுவனங்களே இதைப் பரிந்துரைக்கவும் செய்கின்றன. ஒவ்வொரு வசன கர்த்தாவும் தனக்கென்று சில உதவியாளர்களை வைத்துக் கொண்டு இப்படித்தான் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு தொடர்களுக்கு பணியாற்றுகின்றனர். டிவி அல்லது டிவிடியில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தபடி உதவியாளர்கள் ஆட்டுப் புழுக்கையைப் போல் வசனம் எழுதித் தள்ளுவார்கள்.
இப்படியான சூத்திரங்களுடன் தான் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 நெடுந்தொடர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கான நேரம் என்பது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தான். சன் டிவி என்றால் அத்தொடரின் இயக்குநர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை எபிசோட் படம் பிடிக்க வேண்டும். அதாவது 18 + 9 நிமிடங்கள். மற்ற தொலைக்காட்சிகள் என்றால், ஒரு நாளைக்கு அந்த இயக்குநர் இரண்டு முதல் மூன்று எபிசோடுக்கான காட்சிகளைச் ‘சுருட்ட’ வேண்டும். அதனால் தான் நடப்பது அல்லது மாடிப்படிகளில் இறங்குவது அல்லது ஆட்டோவில் பயணம் செய்வதை அதிக நேரம் காண்பிக்கிறார்கள்.
நாயகன் அல்லது நாயகி சாதாரண நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், அவர்களுடைய வீடு பெரிய பங்களா போலவோ அல்லது ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து பேர் புழங்கக் கூடிய அளவுக்கு தாராளமாகவோ இருக்கும். “என்னது ஆக்சிடெண்டா?” என்று ஒரு வசனத்துக்கான முகபாவத்தை ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாகக் காட்ட வேண்டும். அதற்குத் தோதாக இடைவெளி விட்டு ஆளுக்கொரு பக்கம் நிற்க வேண்டுமானால் வீடு பெரியதாக இருந்தால்தானே முடியும். அது மட்டுமல்ல, வீட்டுக்குள்ளே மாடிப்படி இருப்பதும் அவசியம்.
இதுவன்றி அவ்வப்போது கதாபாத்திரங்கள் கடுமையான அதிர்ச்சிக்கோ, ஆத்திரத்துக்கோ ஆளாக வேண்டும். அதிர்ச்சி என்றால் வசனமே பேச முடியாமல் வாயடைத்துப் போகும் அளவுக்கு கடுமையான அதிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுடைய முகத்தை மட்டும் காட்டி, பயங்கரமான பின்னணி இசை போட்டு நேரத்தை இழுக்க முடியும்.
ஒரு நெடுந்தொடரில் 20 நடிகர்கள் இருந்தால், அந்த 20 மூஞ்சிகளின் கோபம், அதிர்ச்சி, சோகம், திகைப்பு போன்றவற்றை குளோசப்பிலும் பல கோணங்களிலும் முன்னரே எடுத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஜோக்கர் கார்டு போல செருகிக் கொள்ள முடியும். இப்படியெல்லாம் ‘அரும்பாடு பட்டுத்தான்’ ஒரு தொடரின் இயக்குநர் 18 நிமிடக் காட்சி என்கிற ஒரு நாள் இலக்கை தினந்தோறும் எட்டுகிறார்.
பொதுவாக குறிப்பிட்ட சில நட்சத்திரங்களேதான் அதிகமான தொடர்களில் நடிக்கிறார்கள். எனவே ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தொடர்களின் படப்பிடிப்பில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே அவர்களுடைய கால்ஷீட்டுக்கு ஏற்ப கதையைக் கொண்டு செல்வதற்கு, கிளைக் கதைகளும், துணைக் கதாபாத்திரங்களும் அவசியமாகிறார்கள்.
குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகை குறிப்பிட்ட நாளில் வர முடியாமல் போகலாம். அதற்காக படப்பிடிப்பைத் தள்ளி வைக்க முடியாது. எனவே திரைக்கதை மற்றும் வசனம் எழுதுபவர்கள், இருக்கும் நட்சத்திரங்களுக்கு ஏற்ப காட்சிகளை எழுதி, அதை எப்படியாவது மையக் கதையுடன் இணைத்து விடுவார்கள்; அல்லது ஒரு கிளைக்கதையை சட்டென்று தொடங்கி விடுவார்கள். இதற்கு விளம்பர நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட தொலைக்காட்சிகளின் நிர்வாகிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மட்டும்தான் பிரச்சினை. “என்ன ஒரே டிரையா இருக்கு… அந்த கேரக்டரை கொன்னுடு… இல்லைனா அவனை கோமாவுல படுக்க வை…” என அவர்கள் கட்டளையிடுவார்கள். மறு பேச்சில்லாமல் அதை கடைபிடிக்க வேண்டும்.
இப்படி உருவாக்கப்படும் நெடுந்தொடர்களைத்தான் அன்றாடம் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். எதைக் காட்டக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். வாழ்க்கையின் உண்மையான வேதனைகள், ஏமாற்றங்கள், பிரச்சினைகள் போன்றவற்றுக்காக அல்லாமல் செயற்கையான உணர்ச்சிகளின் சுரண்டலுக்கே மக்கள் ஆட்படுத்தப் படுகிறார்கள். உதாரணமாக தொழிற்சாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்படும் ஒரு தொழிலாளியின் பிரச்சினை, ஒட்டுமொத்தத் தொழிலாளர் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கலாகக் காட்டப்படுவதில்லை. தனி மனித வேதனையாக கதைத் தொடர்கள் வழியாக அவனது மனைவிக்கு வழங்கப்படுகிறது.
புற உலகின் முரண்பாடுகளை மறைத்து, நவக் கிரகங்களுக்குள் தன் எதிர்காலத்தைத் தேடுவது போல, சில நிர்ணயிக்கப்பட்ட சூத்திரங்களுக்குள் நிஜ வாழ்க்கையைப் புரிந்துகொள்ள மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மாமியார், மருமகள், பக்கத்து வீட்டுக்காரன், சக ஊழியன் என்று இத்தகைய தொடர்கள் உருவாக்கிக் காட்டும் பாத்திரங்களுக்குள் இவர்களுடைய பார்வையே சுருங்கி விடுகிறது.
வாழ்க்கை நிலைமையால் மக்கள் வேறுபட்டாலும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஒரே மாதிரியான தேவைகள், பிரச்சினைகள் இருப்பது போல் காட்சி ஊடகங்கள் கதைத் தொடர்கள் வழியாக ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன. கதை மாந்தர்களின் பிரச்னைகளுக்காக உருகுவது மட்டுமின்றி, அவர்களுடைய கண்ணோட்டத்தில் பார்வையாளர்கள் உலகைப் பார்க்கவும் தொடங்குகிறார்கள்.
அந்த இடத்திலிருந்து சீரியல், தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது.

கருத்துகள் இல்லை: