சனி, 23 ஜூன், 2012

போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை நெருங்கியது மீட்புக்குழு!


 Rescue Team Nearing The Baby Bore W
குர்காவ்ன்: ஹரியானா மாநிலம் மனேசர் அருகில் 70 அடி ஆழ போர் கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை மஹி, அருகே மீட்புக் குழுவினர் நெருங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் மஹி மீட்கப்படுவார் என்று அப்பகுதி மக்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஹரியானா மாநிலம் குர்காவ்ன் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
அதன் பிறகே அவளின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மீட்பு படையினர் இரவு 12.30 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ராணுவம் மற்றும் தேசியபாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கிணற்றுக்கு ஆக்சிஜன் சப்ளை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அவர்கள் கிணற்றுக்குள் கயிறைப் போட்டுள்ளனர். ஆனால் சிறுமியால் கயிறைப் பிடித்து மேலே வரமுடியவில்லை.
ஆழ்துளைக் கிணற்றுக்கு இணையாக மற்றொரு பெரிய சுரங்கம் அமைத்து குழந்தையை நெருங்க முயன்று வருகின்றனர் படையினர். ஆனால் சுற்றிலும் உள்ள மண் கடினமாகவும், பாறைகள் நிறைந்ததாகவும் இருப்பதால் மீட்புப் பணி தாமதமாகிறது.
சிறுமி விழுந்து 48 மணி நேரத்துக்கும் அதிகமாகிவிட்டதால், சிறுமியின் உறவினர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.
போர்வெல் கிணற்றுக்காக போடப்பட்ட ஆழ்துளையை மூடாமல் வைத்துள்ளனர். அதைப் பார்க்காமல் சிறுமி விழுந்துவிட்டாள்.
சிறுமி மாஹி வியாழக்கிழமைதான் தனது 4வது பிறந்தநாளைக் கொண்டாடினாள் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: