ஜனாதிபதி தேர்தல் கலாட்டா: “அத்வானி சராசரி கூட இல்லை.. நர்சரி!”
Viruvirupu
ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவை ஆதரிப்பதாக நேற்று பா.ஜ.க. அறிவித்த
போது, அதற்கான காரணத்தையும் சேர்த்தே தெரிவித்திருந்தது. பா.ஜ.க. அறிவித்த
காரணம், குழந்தைத்தனமானது என்று பிலுபிலுவென பிடித்திருக்கிறது காங்கிரஸ்
கட்சி.பா.ஜ.க. அறிவித்த காரணம் என்ன? “ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக, பிரணாப் முகர்ஜியை அறிவிக்கும் முன்னர், எம்முடன் அவர்கள் (காங்கிரஸ்) கலந்து ஆலோசிக்கவில்லை. அதனால்தான், அவர்களது வேட்பாளரை விட்டு, நாம் சங்மாவை ஆதரிக்கிறோம்” என காரணம் கூறியிருந்தது பா.ஜ.க.
இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் ஜனார்த்தனன் திவேதி, “பா.ஜ.க.-வால் எம்மிடமிருந்து இரவல் வாங்கப்பட்ட வேட்பாளர்தான் பி.ஏ.சங்மா. அவரை பா.ஜ.க. ஏன் ஆதரிக்கிறது? பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவிக்கும் முன்னர், தங்களிடம் ஆலோசிக்கவில்லை என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
அவர்கள் (பா.ஜ.க.) அரசியல் விளையாட்டு விளையாடுகின்றனர். அவர்கள் கூறும் காரணம், குழந்தைத்தனமானது. இவர்கள் பேசுவதெல்லாம் வெறும் பயனற்ற பேச்சு.
எமது வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்தவுடன், பிரதமர் மன்மோகன்சிங் அனைத்து அரசியல் கட்சிகளையும் தொடர்பு கொண்டு, “பிரணாப்பிற்கு ஆதரவு தர வேண்டும்” என, கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரணாப்பிற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார். பா.ஜ.க. இன்றைக்கு சொல்வது எல்லாம், உண்மைக்கு மாறானது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடிய தகுதி, சங்மாவுக்கும் இருக்கலாம். ஆனால் அதற்காக, அவரையும், பிரணாப்பையும் ஒப்பிட முடியாது.
பிரணாப்புக்கு ஆதரவு தர வேண்டும் என, பிரதமர் மன்மோகன்சிங் கேட்டபோது, உடனடியாக பா.ஜ.க. பதில் கொடுத்திருக்கலாமே. பா.ஜ.க. தலைவர்கள், பிரணாப்பை நிறுத்த வேண்டாம் என, ஏன் உடனடியாகச் சொல்லவில்லை. அப்துல் கலாம் பெயரை அவர்கள் பரிசீலித்தது ஏன்?
இதே அப்துல் கலாம் பெயரை ஜனாதிபதி பதவிக்கு கடந்த 2002-ம் ஆண்டில் முன்மொழிந்தது பா.ஜ.க. அப்போது காங்கிரஸ் கட்சி வேறு வேட்பாளரைத் தேடி அலைந்ததா? இல்லையே! பா.ஜ.க. முன்மொழிந்த அப்துல் கலாமை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. இப்போது, புதிதாக குழந்தைத் தனமான விளையாட்டு விளையாடுகிறார்கள் அவர்கள்” என பதிலடி கொடுத்திருக்கிறார் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலர் ஜனார்த்தனன் திவேதி.
இதற்கு பா.ஜ.க. கூறப்போகும் பதில் அரசியல் ரீதியாக இருக்குமா? குழந்தைத்தனமாக இருக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக