வியாழன், 21 ஜூன், 2012

Mumbai பயங்கர தீவிபத்து: முக்கிய பைல்களை அழிக்க சதி?

மும்பை: மகாராஷ்டிர மாநில தலைமைச்செயலகமான மந்த்ராலயாவில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் 25 தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன. ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பான பைல்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருப்பதால் சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தின் 4வது மாடியில் இன்று மதியம் 2.45 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. கடல் அருகில் அமைந்துள்ளதால் கடல் காற்றின் காரணமாக தீ மளமளவென பரவி, 5வது மற்றும் 6வது மாடியிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட போது, மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான் அப்போது மந்த்ராலயாவில் உள்ளே இருந்தார். தீவிபத்து ஏற்பட்ட செய்தியறிந்தவுடன் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இந்த விபத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் அறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தீவிபத்து நடந்த சமயத்தில், ஏழு மாடிகளைக் கொண்ட அந்த கட்டடத்தில் சுமார் 200 முதல் 300 பேர் வரை இருந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். போர்ஸ் ஒன் என்றழைக்கப்படும் மகாராஷ்டிரா எலைட் பாதுகாப்பு படையினர், விரைவுப்படை ஆகிய படைகள் உதவிக்கு அழைக்கப்பட்டன. மும்பை நகரம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. தீயைணப்பு வாகனங்கள் மற்றும் ஆக்சிஜன் வாகனங்கள் கொண்டுவரப்பட்டு மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த பணிகளை முதல்வரே நேரடியாக கண்காணித்து பணிகளை தீவிரப்படுத்தினார்.

தீவிபத்திற்கான காரணம் உடனடியாக தெரியாவிட்டாலும், 4வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள ஏசியிலிருந்து தீ பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. தீவிபத்தின் காரணமாக ஏற்பட்ட புகை, அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கும் பரவியுள்ளது. மந்த்ராலயா அருகிலுள்ள ஜேஜே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தீயணைப்பு பணியில் கடற்படை ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சதி? மந்த்ராலயாவின் 4வது மாடியில் ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பான பைல்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள தீவிபத்து பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

11 பேர் காயம்: இந்த விபத்தில் இதுவரை 11 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அருகிலுள்ள ஜேஜே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: