திங்கள், 18 ஜூன், 2012

ஓட்டு கேட்க சென்னை வருகிறார் பிரணாப்

சென்னை :""வரும் 30ம்தேதி, முதன் முதலாக ஓட்டுக் கேட்க, சென்னைக்கு பிரணாப் முகர்ஜி வருகிறார். அவருக்கு வரவேற்பு அளித்து, விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:""தே.ஜ., கூட்டணி சார்பில், ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளரை நிறுத்தப் போவது குறித்து எனக்குத் தெரியாது. பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தே.மு.தி.க., வேட்பாளருக்கு டெபாசிட் கிடைத்திருப்பதைப் பற்றி விளக்கம் சொல்ல விரும்பவில்லை.கலாம் என்ற வார்த்தைக்கு தமிழிலே உள்ள பொருளைப் பற்றி கூறியதைத் திரித்து, அப்துல் கலாம் பற்றி, விமர்சனம் செய்ததாக, சில பேர், அதை திசை திருப்ப முயலுகிறார்கள். அப்துல் கலாம் வகித்த உயர்ந்த பதவி மீதும், அவர் மீதும் நான் வைத்துள்ள மதிப்பு, மரியாதை எத்தகையது என்பதை அவரே அறிவார். அவரை எப்போதும் மதிகக்கக் கூடியவன் நான்.


வரும் 30ம்தேதி, சென்னைக்கு, முதன் முதலாக வாக்காளர்களைச் சந்திப்பதற்காக, பிரணாப் முகர்ஜி வருகிறார். அப்போது, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களையும் சந்தித்து ஓட்டுகளைக் கேட்பார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிப்பதோடு, விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் குறித்து, காங்கிரசில் குழப்பம் இருப்பதாக, அத்வானி சொல்லியிருப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.''இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கருத்துகள் இல்லை: