திங்கள், 4 ஏப்ரல், 2011

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் ஓய்வு


மும்பை:  சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்றார்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் அதிக விக்கெட் எடு்த்தவர் முத்தையா முரளிதரன் (38). 19 ஆண்டு காலமாக இலங்கை சார்பில் விளையாடிய அவர் நேற்றைய உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் ஏற்கனவே 800 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த 1992-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் தான் அவரது முதல் டெஸ்ட் போட்டி. 1993-ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக ஆடியது தான் அவரது முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டியாகும்.

இந்தியாவின் பிரக்யான் ஓஜாவின் விக்கெட் தான் அவரது டெஸ்ட் போட்டியின் 800-வது விக்கெட். டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட் எடுத்த முதல் மற்றும் ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

நேற்று இந்தியாவுக்கு எதிராக அவர் தனது 350-வது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். அவர் 8 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அவர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் 534 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

கடந்த 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அர்ஜுனா ரனதுங்கா தலைமையிலான இலங்கை அணியில் முத்தையா முரளிதரனும் ஒருவர்.

முரளிதரன் மொத்தம் 5 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் முதலிடத்திலும், 68 விக்கெட்டுகளுடன் முரளிதரன் இரன்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 10 முறை அவர் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடந்த 2006 முதல் 2010-ம் ஆண்டுகள் வரை விளையாடிய 12 டுவென்டி 20 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 முறை விளையாடியுள்ளார். வரும் 8-ம் தேதி துவங்கும் சீசனில் கொச்சி டஸ்க்ர்ஸ கேரளா அணிக்கு விளையாடவிருக்கிறார்.

பந்து வீசும் முறை பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய ஒரே விளையாட்டு வீரர் முரளிதரன் தான். சிலர் அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்று புகழ்கின்றனர். சிலர் அவர் சட்டவிரோதமாக பந்துவீசி புகழ் பெற்றவர் என்கின்றனர்.

அவர் விளையாடத் துவங்கியதில் இருந்தே அவர் பந்துவீச்சு கண்காணிக்கப்பட்டு வந்தது. 1995-96 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது பந்தை வீசியதற்காக அம்பயர் டாரல் ஹேர் விசாரணைக்கு அழைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவரை மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் சோதனை செய்து கொள்ளுமாறு கூறியது. சோதனை முடிவில் அவர் பந்து வீசுவது எறிவது போன்று தெரிகிறதே தவிர நிஜத்தில் ஒழுங்காகத் தான் பந்து வீசுகிறார் என்று தெரியவந்தது.

பிரச்சனை தீர்ந்தது என்று நினைக்கையில் 1998-99 -ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது மீண்டும் அவர் பந்துவீச்சு தொடர்பாக பிரச்சனை எழுந்தது.

மறுபடியும் பெர்த் மற்றும் இங்கிலாந்திலும் சோதனை செய்யப்பட்டதில் முரளி குற்றமற்றவர் என்று நிரூபனம் ஆனது. மீண்டும் 2004-ம் ஆண்டு இதே பிரச்சனை எழுந்தது. அந்த ஆண்டு அவர் மேற்கு இந்தியத் தீவுகளின் கோர்ட்னி வால்ஷின் 519 விக்கெட்டுகளைத் தாண்டி டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கியுள்ள ராட்சசன் முரளி என்று முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் பேடி கடுமையாக விமர்சித்தார். முரளியின் தூஸ்ரா முறை சட்டவிரோதமானது என்று அவர் எப்போதும் கூறுவார். அன்மையில் கூட கையை மடக்காமல் தூஸ்ரா முறைப்படி பந்துவீச முடியாது அதனால் தூஸ்ராவுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பரிந்துரைத்தார்.

முரளியும், ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஷேன் வார்னேவும் போட்டிப்போட்டுக் கொண்டு புதிய சாதனைகள் படைத்தனர். 708 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் ஷேன் ஓய்வு பெற்றார். கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கன்டியில் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஷேன் வார்னேவின் சாதனையை முரளி முறியடித்தார்.

ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தவர் வாசிம் அக்ரம்(502).கடந்த 2009-ம் ஆண்டு வாசிம் அக்ரமின் 502 விக்கெட் சாதனயை முரளி முறியடித்தார்

கருத்துகள் இல்லை: