கிரிக்கெட் யுத்தம்?
எஸ். ராஜாராம்
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்கப்படுகிறதா? ஆரம்ப காலத்திலிருந்தே இந்த இரு அணிகளும் மோதும் போட்டி பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கப்படுவது வழக்கம்.
அண்மைக்காலமாக, அது ஒரு போர்போல சித்திரிக்கப்பட்டு, ஏறக்குறைய இருநாட்டையும் சேர்ந்த பெரும்பாலான ரசிகர்களும் அந்த மனநிலைக்கே வந்துவிட்டனர்.
விளையாட்டு என்பது ஒற்றுமை உணர்வை வளர்க்கத்தானே தவிர, வேற்றுமையை விதைக்க அல்ல. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்தால் அந்தப் போட்டியின் நோக்கமே மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த அரையிறுதிப் போட்டியும் அதை நிரூபித்தது. அந்தப் போட்டி நடந்த தினத்தன்று பாகிஸ்தானில் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலும் தில்லி உள்பட சில மாநிலங்களில் அரைநாள் விடுமுறையை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன.
கிரிக்கெட் ஜுரத்தால் தனியார் அலுவலகங்களில் வேலையே நடக்கவில்லை. மாணவர்கள் படிப்பில் கவனமின்றி தொலைக்காட்சியே கதியெனக் கிடந்தனர். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பான நேரத்தில் தேர்தல் பிரசாரத்துக்குப்போன தலைவர்களைப் பார்க்கக்கூட கூட்டமில்லையாம்!
மத்தியப் பிரதேசத்தில் மின்தடையின்றி ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதற்காக அந்த மாநில அரசு 1.80 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கியதாம்.
இந்தியாவுடனான போட்டியில் வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் 25 ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு அறிவித்தது. இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவை வீழ்த்தினால் போதுமாம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட் முக்கியமான ஒன்று. அதுவும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இரு நாட்டு அணிகளும் மோதுவது பெரிய விஷயம்தான். அதற்காக அரசாங்கமே அரைநாள் விடுப்பு அறிவிக்கும் அளவு அத்தனை முக்கியத்துவம் அதில் இருக்கிறதா?
மேலும், அந்த நாளில் இரு நாடுகளிலும் முக்கியமான நகரங்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதுபோல ஆள்நடமாட்டமே இன்றி வெறிச்சோடி இருந்தனவாம். கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதைக் கடந்து அதில் ஒன்றுமேயில்லை. ஆனால், அந்தப் போட்டியில் வெற்றிபெறுவது இரு நாடுகளின் கௌரவம் சார்ந்த விஷயமாக ஆக்கப்பட்டுவிட்டது.
இரு அணி வீரர்களையும் இந்த அழுத்தம் வேறு மாதிரி பாதித்துள்ளது. "இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி என்றாலே "டபுள் பிரஷர்' இருப்பது வழக்கம்தான்' என்கிறார் இந்திய அணியின் ஹர்பஜன் சிங். இரு அணி கேப்டன்களுக்கும் இந்தப் போட்டியில் வெல்வது என்பது உணர்வுபூர்வமான விஷயமாகிவிட்டது.
போட்டியில் வென்றுவிட்டால் பாராட்டு மழை; தோற்றுப்போனால் நாட்டின் மானத்தையே அடகுவைத்தாற்போன்ற அவச்சொல். ஒரு விளையாட்டுப் போட்டியின் வெற்றி தோல்வியில்தான் ஒரு நாட்டின் மானமே அடங்கியிருக்கிறதா? இதுதவிர, போட்டியில் ஏதாவது ஒரு வீரரின் செயல்பாடு மோசமாக இருந்தால், அந்த வீரரின் நேர்மையையே சந்தேகிக்க வேண்டிய சூழலை இந்த கிரிக்கெட் போட்டி ஏற்படுத்திவிட்டது.
இந்தப் போட்டியைக் காண இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸப் கிலானி நேரில் வந்திருந்து போட்டியை இந்திய பிரதமருடன் அமர்ந்து பார்த்தார்.
இரு நாடுகளின் உறவை மேம்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் கிரிக்கெட் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டார் என ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. "இந்தச் சந்திப்பால் உடனடி பலன் கிடைத்துவிடப் போவதில்லை; இருப்பினும் இரு நாடுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு இருந்த தயக்கங்கள் குறைந்துவிட்டன' என பாகிஸ்தான் பத்திரிகைகள் எழுதுகின்றன. இது எந்த அளவுக்குச் சரி?
எத்தனையோ முறை கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுள்ள பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயக்கத்தை இந்த கிரிக்கெட் போட்டிதானா தகர்த்துவிடும்? இதெல்லாம் ஊடகங்கள் தோற்றுவிக்கும் மாயபிம்பங்கள்.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெறும் நாள்களில் எல்லாம் இரு நாடுகளிலுமே தொழில்துறையில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இதுபோதாது என்று, மொஹாலியில் நடந்த அரையிறுதியில் பாகிஸ்தான் அணி தோற்றுப்போனதும் அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். எத்தகைய மோசமான செயல் இது. பாகிஸ்தான் எத்தனையோ அணிகளிடம் தோற்கத்தான் செய்கிறது? ஆனால், இந்திய அணியிடம் தோற்பதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாதாம்.
இரு நாட்டு ரசிகர்களையும் வசப்படுத்துகிற கிரிக்கெட் உண்மையிலேயே நல்ல விஷயம்தான். ஆனால், வசப்படுத்திய ரசிகர்களை வெறிபிடிக்க வைக்கக்கூடாது. கிரிக்கெட்டை ரசியுங்கள், மகிழுங்கள். அது ஒரு விளையாட்டுதானன்றி யுத்தம் அல்ல.
- தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக