ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

இந்த வாரம்..."ஏமாற்றியவர்,ஏமாந்தவர்".

சன்டேனா (3-4-11) இரண்டு செய்திவிமர்சனம்

ஒரு முறை திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவம் இது. அப்போது கடலூர் தொகுதியின் திமுக எம். எல்.ஏ ஆக இருந்த ஆதி.சங்கர் சட்டசபையில் இருந்து கருணாநிதி அவர்களால் வெளியேற்றப்பட்டார்.

கழகத்தின் கொள்கைகளுக்கு அவர் எதிராக நடந்துகொண்டார் என்று கண்டிக்கப்பட்டார். ஆதி.சங்கர், மன்னிப்பு கடிதம் தந்தே பிறகே அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?



ஆதி.சங்கர், அன்று சட்டசபைக்கு வரும்போது, அவர் தனது நெற்றியில் விபுதி குங்குமம் இட்டு இருந்தார் என்பதே.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது கருணாநிதி, இவ்வாறு பேசினார்.

"முன்பு "முந்திரா' ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். "முந்திரா' ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர்.

இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? "ஸ்பெக்ட்ரம்' ஊழலை நிரூபிக்க தயாரா? . தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்".என்று "விளக்கம்" அளித்தார் அவர்.

ஆனால், அவர் அடிக்கடி பயன்படுத்தும் ஆர்யாள்,பார்ப்பனர் ஆகியோரிடமே இப்போது தஞ்சம் அடைந்து இருக்கிறார் "பகுத்தறிவு தந்தை".

திருநள்ளார் சனி பகவான் கோயிலில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தரிசனம் செய்ததோடு, முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றி , காக்கைக்கு அளித்தார்.

இந்த பரிகாரங்களை முன்னின்று செய்தவர்கள் ...பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்களே.

கும்பகோணம் அருகே அய்யாவாடி பிரிதியங்கரா காளி கோயில் இருக்கிறது. பண்டைய காலத்தில் சோழ மன்னர்கள், போர்களத்திற்கு செல்லும்முன் அங்கு சென்று யாகம் செய்துவிட்டு வருவார்கள். ஜெயலலிதா அவர்கள் இந்த யாகத்தை வெளிப்படையாக செய்து வருகிறார்.

ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒவ்வொரு தேர்தலின் போதும் அங்கு சென்று யாகம் செய்து வருகிறார்கள் ரகசியமாய். இந்த முறையும் அவ்வாறே அங்கு சென்று யாகம் செய்து இருக்கிறார்கள்.

இங்கும் யாகத்தை நடத்தியவர்கள்.....பார்ப்பனர்களே.

திராவிட கழக கி.வீரமணி ஏன் இதற்கெல்லாம் கருத்து தெரிவிக்கவில்லை. சுயமரியாதை,பகுத்தறிவு போன்றவை எல்லாம் இவர்களுக்கு அரசியல் வியாபாரம் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணங்கள் உண்டா??

சமிபத்தில், பத்திரிக்கையாளர் பேட்டியில், "ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?" என்ற கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில்,

"இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்".

இந்த தருணத்தில் யாராவது, சங்கர மடத்திற்கு சென்று, ஜெயேந்திரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பார் என்று ஆருடம் சொன்னால் , ராவோடு ராவாக
அதையும் செய்ய பெரியாரின் சீடர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆருடம் சொல்ல தான் ஆள் இல்லை !

செய்தி # 2
வடிவேலு, விஜயகாந்தை தண்ணி வண்டி என்று விமர்சிப்பது இருக்கட்டும். விஜயகாந்த் தான்போகும் பிரச்சார கூட்டங்களில் எல்லாம், டாக்டர் ராமதாசையும்,பாமகவையும் "அதிமுகவின் வடிவேலு" ரேஞ்சுக்கு விமர்சித்து வருகிறார்.

" சமூக நீதி காத்த போராளி (ராமதாஸ்) என்கிறார்களே, அவர் அப்படி எந்த சமூகத்தைக் காத்தார்?. எந்த சமூகத்தை அவர் காத்தார் என்பதை அறிய நான் விரும்புகிறேன்.

நீங்கள் காத்த சமுதாயம் எது என்பது மக்களுக்குத் தெரியாதா?. அவரது கூட்டணித் தலைவர் கருணாநிதி பாணியில் சொல்வதானால், இரு ஆடுகளை முட்ட விட்டு அதில் ரத்தம் குடிக்கும் ஓநாய் போன்றவர்தான் இவர்.

இரு ஜாதிகளை மோத விட்டு, அதில் ரத்தம் குடித்தவர்தான் இவர். இவர் என்னைப் பார்த்து சிறைக்குப் போனாயா என்கிறார். நீங்கள் எதற்காக சிறைக்குப் போனீர்கள். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க சிறைக்குப் போனீர்களா?. பஸ்களை எரித்து சிறைக்குப் போனீர்கள். சமூகத்தை மோத விட்டு சிறைக்குப் போனீர்கள். இது பெருமையா?."

என்று விமர்சித்து இருக்கிறார்.

"பாமகவினர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி நாசமாக்கிவிட்டனர். இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் அமைப்பு தொடங்கி மரம் நடச் சொல்கின்றனர்.இதேபோன்று மதுவை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை விரட்டுவோம் என அன்று வீராப்புடன் முழங்கியவர்கள் இன்று டாஸ்மாக் கடைகளை நடத்தும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

குரங்கு மரம் விட்டு மரம் தாவுவது போல ஒவ்வொரு தேர்தலிலும் பாமக கூட்டணியை மாற்றிக் கொண்டே இருக்கிறது."

இவ்வாறு ராமதாசை ஓநாய், குரங்கு என்கிற பாணியில் விமர்சித்து வருகிறார் விஜயகாந்த்.

முன்பு, தனியாக நின்றபோது ஜெயலலிதா,கருணாநிதி என்று இருவரையும் பாரபட்சமின்றி விமர்சித்தார் விஜயகாந்த். தற்சமயம், அதிமுக கூட்டணியில் இருப்பதால், டாக்டரையும், கருணாநிதியையும் பிடித்து கொண்டு இருக்கிறார்.

இன்று தேர்தல் பிரச்சாரம் செய்பவர்கள் யாரிடமும் நல்ல செயல்திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. அந்த அந்த ஊருக்கு தக்கவாறு வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். தேர்தலுக்கு பின் இதையெல்லாம் யார் நினைவில் வைத்து இருக்க போகிறார்கள் என்ற கணக்கில், ஊருக்கு ஒரு வாக்குறுதிகளை வீசி வருகிறார்கள் திமுக மற்றும் அதிமுக தலைவர்களும்.

வைகோ போன்று நன்றாக பிரச்சாரம் செய்பவர்கள் இன்று இரண்டு கூட்டணியிலும் இல்லை. இன்றைய அரசியல் டிரண்ட் படி, அரசியல் கட்சி பேச்சாளர்களுக்கு இரண்டே தகுதிகள்தான். ஒன்று, தனிப்பட்டமுறையில் எதிராளியை தாக்கி பேசவேண்டும். இரண்டு, ஆபாசமாக இரட்டை அரத்ததோடு கண்டிப்பாக பேச தெரிந்து இருக்க வேண்டும்.விந்தியா,குஷ்பூ போன்ற கவர்ச்சி நடிகைகளையும், வடிவேலு போன்ற நடிகர்களையும் நம்பியே பிரச்சாரத்தில் இருக்கின்றன இன்றைய கட்சிகள்.

ஆனால், விஜயகாந்த் மட்டும் வாய் ஓயாது குறை சொல்லிவருகிறார். முறையான செயல்திட்டங்களோ ஏன் சினிமாவில் அவர் பேசும் புள்ளிவிவரங்கள் கூட அவர் பிரச்சாரத்தில் இல்லை.வடிவேலு சொல்வது ஒரு விதத்தில் உண்மையே. விஜயகாந்துக்கு எப்படி பேசவேண்டும், பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அரசியல் அடிப்படைகள் கூட தெரியவில்லையே.

"தருமபுரியில் நான் வேட்பாளரை அடித்ததாக சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்டுள்ளனர். அது தவறானது. ஒருவேளை அப்படியே நான் அடித்திருந்தாலும், என்னுடைய கட்சி ஆளைத்தானே அடித்தேன். என்னைப் பற்றி என் கட்சிக்காரர்களுக்கு தெரியும். என் கையில் அடி வாங்குகிறவன் நாளை மகாராஜா ஆவான்' என்றார்.
முன்பு ஒரு முறை,திருச்சியில் ஒரு படபிடிப்புக்காக சென்றபோது, தனது கார் டிரைவரை பொதுமக்கள் முன்பாக கன்னத்தில் அறைந்தார் விஜயகாந்த்.

தர்மபுரியில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில், தனது வேட்பாளர் பெயரே தெரியாமல் தவறான பெயரை சொல்லி பிரச்சாரம் செய்ய, அதை சுட்டிகாட்டிய வேட்பாளரை 'பப்ளிக்காக' குனியவைத்து, முதுகில் சாத்தி இருக்கிறார் விஜயகாந்த். எந்த அளவுக்கு அவர் பக்குவமோ அறிவோ இல்லாமல் இருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

இது குறித்து தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கர் கூறியதாவது, "தர்மபுரியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தபோது அவர் வைத்திருந்த மைக்கின் பேட்டரி கழன்று கீழே விழுந்தது. அதை எடுத்துக் கொடுக்குமாறு தனது உதவியாளரை கேட்டார். அவரும் எடுத்துக் கொடுத்தார். பின்னர் மீண்டும் கீழே விழுந்தபோதும் எடுத்துக் கொடுத்தார்.

பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் என்னை அடித்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் தான் அமர்ந்திருந்தோம்.

விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. நான் வெற்றி பெறக் கூடாது என்று இது போன்ற பொய்யான பிரசாரம் செய்கின்றனர்" என்றார்.

அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு முதல் காரணமான 'துக்ளக்' ஆசிரியர் சோ அவர்கள்,

"எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க" - என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.

"நீ அடிச்சா மகாராஜா ஆகிடுவாங்கன்னு சொல்றியே, பேசாம உன்னோட கல்யாண மண்டபத்து உன் கட்சிக்காரங்கள வரிசையில நிக்க வச்சு ஆளுக்கு நாலு குத்து நங்கு நங்குன்னு குத்தி, எல்லோரையும் மகாராஜா ஆக்க வேண்டியதுதானே. அதுக்கு எதுக்குடா எலக்ஷன். பொது இடத்துல வச்சு நாலு பேரு பாக்கற மாதிரி நங்கு நங்குன்னு குத்துறான். இதை இந்த தேர்தல் அதிகாரிங்க பார்த்துக்கிட்டு என்ன செய்றாங்க. அந்தாளை கைது செய்ய வேண்டாமா."

என்று வழக்கமாக தாக்கி இருக்கிறார் திமுகவின் "பிரச்சார பீரங்கி" வடிவேலு.

விஜயகாந்தின் நடவடிக்கைகளை பார்த்தால், வடிவேலு சொல்வது ஓரளவுக்கு நியாயமாகவே படுகிறது.

பக்குவமோ பொறுப்போ கொஞ்சம் கூட இல்லாத விஜயகாந்தின் சினிமா கவர்ச்சிக்கு வரும் கூட்டத்தை நம்பி ஏமாந்துவிட்டார் ஜெயலலிதா என்று தோன்றுகிறது.

(நன்றி, இனி, அடுத்த வாரம்)

-இன்பா

கருத்துகள் இல்லை: