கடந்த 26.12.2010 ல் படுகொலை செய்யப்பட்ட யாழ். வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர் திரு மார்க்கண்டு சிவலிங்கம் அவர்களுடைய கொலையில் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருக்குத் தொடர்பு இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது தெரிந்ததே. முதன் முதலில் இலங்கை அரசில் வீடமைப்பு நிரமாணத்துறை அமைச்சராக அங்கம் வகிக்கும் திரு விமல் வீரவன்ச அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் இதனைச் சூசகமாக ‘யாழ்ப்பாணத்துக் கொலையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குத் தொடர்பு இருப்பதாக’ தெரிவித்திருந்தார். அப்போது பாராளுமன்றத்தில் பிரசன்னமாயிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இக்கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவோ அல்லது பாராளுமன்ற ஹன்சாட் பதிவிலிருந்து இப் பேச்சை அகற்றவேண்டுமென்றோ கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. அப்போதிருந்து விடயம் தெரிந்தவர்கள் மத்தியில் இவ்விடயத்தில் உண்மை இருக்கவேண்டும் எனப் பேசப்பட்டிருந்தது. பின்னர் இலங்கை அரசில் சிறுகைத்தொழில் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சராக அங்கம் வகிக்கும் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி வலயக் கல்விப் பணிப்பாளர் கொலையுடன் யாழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாகவும், அவர் எந்நேரமும் கைதாகலாம் எனவும் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ் ராணுவ கட்டளைத்தளபதி திரு ஹத்துருசிங்க அவர்கள் பத்திரிகைப் பேட்டியொன்றில் இதனை உறுதிப்படுத்தி மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் கைதாவார் எனத் தெரிவித்திருந்தார்.
இன்று, இக் கொலைச் சந்தேக நபர் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உ. திரு சிறிதரன் என்பது டி.என்.எல். தொலைக்காட்சி பேட்டியொன்றின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ‘தமிழ்நெற்’ உட்பட புலன்பெயர் தமிழ் இணையத்தளங்களும், நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமராக அறிக்கைகள் வெளிவிடத் தொடங்கியுள்ள அமெரிக்காவிலுள்ள அகதிகள் வழக்குகள் பேசும் சட்டத்தரணி திரு உருத்திரகுமாரனும், இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காகவே மேற்படி கல்விப்பணிப்பாளர் கொலை செய்யப்பட்டதாக ‘கண்டு பிடித்து’ செய்திகளை வெளியிட்டும், ஜக்கிய நாடுகள் சபைக்கு மனுக்களை அனுப்பியும் வந்திருந்தன.
தனிப்பட்ட பகை காரணமாகவே மேற்படி கொலை இடம்பெற்றதாக நம்பப் படுகிறது. இக் கொலையைச் செய்தவர் மிக நன்றாக ராணுவப் பயிற்சி பெற்ற ஒருவர் என்பதையும், மிகத் துல்லியமாகக் குறிபார்த்துச் சுடத் தெரிந்த ஒருவர் என்பதையும், கொலையுண்ட திரு சிவலிங்கம் அவர்களின் வீட்டுப் புகைக்கூண்டால் ஏறி அவரது வீட்டிற்குள் நுழைந்து ஒழிந்திருந்தார் என்பதையும் பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இலங்கை பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுவது குறித்த பிரச்சினை எழுந்தபோது, தக்க தருணம் பார்த்து அச் சம்பவத்துடன் முடிச்சுப் போடுவதற்கு சாமர்த்தியமாகத் திட்டம் தீட்டப்பட்டு இக் கொலை செய்யப்பட்டதாக அறியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக