Hindu Tamil : சென்னை: திமுக எம்பி ஆ.ராசாவை அழைத்து விழா நடத்திய பச்சையப்பன் கல்லூரி பேராசிரியரின் இடைநீக்கத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டத்தின் 7-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சொல் என்ற மலர் வெளியீட்டு விழா கடந்த ஜன.7-ம் தேதி கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் திமுக எம்பி ஆ.ராசா பங்கேற்று பேசினார். இதன்காரணமாக அந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பேராசிரியர் ரேவதி என்பவரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேவதி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதியளித்த காரணத்தாலேயே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அனுமதி பெறாமல் திமுக எம்பி ஆ.ராசாவை அழைத்து நிகழ்ச்சியை நடத்தியதாக என்னை நிர்வாகம் இடை நீக்கம் செய்திருப்பது சட்டவிரோதமானது’ என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பவானி சுப்பராயன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘மக்களவை எம்பியை அழைத்து விழா நடத்தியதற்காக சம்பந்தப்பட்ட பேராசிரியரை இடைநீக்கம் செய்வது என்பது உச்சபட்ச நடவடிக்கை. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் ரேவதியின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக