வெள்ளி, 31 ஜனவரி, 2025

‘பராசக்தி’ தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது.. நேஷனல் பிக்சர்ஸ் அறிவிப்பு : டிஜிட்டல் வடிவில் வெளிவர இருக்கிறது

May be an image of 6 people and text that says 'JUST IN பராசக்தி Parasakthi புதிய தலைமுறை "பராசக்தி திரைப்பட தலைப்பை பயன்படுத்தக் கூடாது" எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் தலைப்பை யாரும் பயன்படுத்தக் கூடாது பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் திட்டமிட்டுள்ளோம் -நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பராசக்தி திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு 30/01/2025- 10:00 PM www.puthiyathalaimurai.co'

புதிய தலைமுறை -RIshan Vengai :  ‘அமரன்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு சிவகார்த்திகேயனும், ‘சூரரைப் போற்று’ போன்ற தேசிய விருது வென்ற திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் சுதா கொங்கராவும் இணையும் திரைப்படம் ‘SK 25’.
சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜிவிபிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.


டான் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு டீசரானது நேற்று வெளியாகி படத்தின் பெயர் ‘பராசக்தி’ என உறுதிசெய்யப்பட்டது. இந்த அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, இணையதளம் முழுவதும் பேசுபொருளாக மாறியது.

இந்த சூழலில் ’பராசக்தி’ என்ற தலைப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது என சிவாஜி நடிப்பில் 1952-ம் ஆண்டில் வெளிவந்த ’பராசக்தி’ படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒரு டைட்டிலுக்கு 3 தரப்பினர் மோதல்..
சிவகார்த்திகேயன்-சுதா கொங்கரா காம்போவில் உருவாகவிருக்கும் படத்திற்கு ’பராசக்தி’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு தமிழ் மொழியை தவிர மற்ற மொழிகளில் ‘பராசக்தி (Parasakthi)’ என வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கு ’பராசக்தி’ என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி படங்களுக்கான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கான தலைப்பு உரிமையை வெளியிட்டன. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு இரண்டு தரப்பும் சமரசமாக சென்றதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் இரண்டு தரப்பு பிரச்னை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், மூன்றாவது தரப்பாக ‘இருங்க பாய்’ என சிவாஜி நடிப்பில் 1952-ம் ஆண்டில் வெளிவந்த ’பராசக்தி’ படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில், நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அறிமுகமான, 1952ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா திரு.பெருமாள் முதலியார் அவர்கள்தான் தயாரித்தார். ஏ.வி.எம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.

அந்தத் திரைப்படத்தில் சிவாஜி அவர்களைக் கதாநாயகனாக நடிக்க வைப்பதை ஏவிஎம் நிறுவனத்தின் ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தார். பெருமாள் முதலியார் அவர்கள் பிடிவாதமாக சிவாஜி அவர்களையே கதாநாயகனாக நடிக்கவைத்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை, நடிகர்திலகம் சிவாஜி அவர்கள், தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் என்ற வகையில், ஒவ்வொரு பொங்கல் நாளன்றும் வேலூர் வந்து பெருமாள் முதலியார் அவர்களிடம் ஆசிபெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அத்தகைய, எங்களின் தாத்தாவுடைய பெருமைமிகு தயாரிப்புதான்

பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்தத் திரைப்படம் நூறாண்டு ஆனாலும் அதன் தாக்கம் குறையாது என்ற அளவிற்கு, அந்தத் திரைப்படத்தின் கலைஞர் அவர்களின் கனல் தெறிக்கும் வசனங்களும், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும், மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

விரைவில் வெள்ளிவிழா (75வது ஆண்டு) காண இருக்கும் வேளையில், பராசக்தி திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் (நேஷனல் பிக்சர்ஸ்) திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறோம்.

இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை: