BBC News தமிழ் , தங்கதுரை குமாரபாண்டியன் : தூத்துக்குடி புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துபெருமாள் என்ற இளைஞர் நேற்று (டிச. 31) தனது இருசக்கர வாகனத்தில் நெல்லை நோக்கி சென்றபோது வழிமறித்த மூன்று இளைஞர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றனர்.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்ததில் சாதியக் கொலை என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் மாயமான நபரை தேடி வருகின்றனர்.
நெல்லையில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைக்கான காரணங்கள் என்ன?
புளியங்குளம் இளைஞர் கொலைக்கு செய்யப்பட்டதன் பின்னணி என்ன? காவல் துறையினர் விசாரணையில் வெளியான தகவல் என்ன? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா கருங்குளத்தை அடுத்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி முத்துபெருமாள்(28). இவர் கருங்குளத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காசாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி காலை 9:00-க்கு மேல் வீட்டில் இருந்து திருநெல்வேலியை நோக்கி தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சிவந்திப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 3 இளைஞர்கள் முத்துபெருமாளின் இருச்சக்கர வாகனத்தை வழிமறித்து நிறுத்தி, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகவெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து வந்த பெருமாள்புரம் போலீசார் நெல்லை, தூத்துக்குடி காவலர்களுக்கு வாக்கி டாக்கியில் தகவலை கொடுத்தனர்.
பட்டியல் பிரிவு இளைஞர் கொலையில் இருவர் கைது
புளியங்குளம் முத்துபெருமாளை கொலை செய்துவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் முன்னீர் பள்ளம் என்ற பகுதியில் மடக்கிப் பிடிக்க முயற்சி செய்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட மற்ற இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் காரச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து (25), முத்து கிருஷ்ணன் (24) என தெரியவந்தது. மேலும், பட்டியல் பிரிவு இளைஞர் என்று தெரிந்தே கொலை செய்ததாகவும் இருவரும் கூறியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய காவல்துறை உயர் அதிகாரி கூறும்போது, "புளியங்குளம் இளைஞர் கொலை வழக்கில் காரச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்", என்றார்.
சாதிய கொலையா?
தொடர்ந்து பேசிய அவர், "இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து ஏற்கனவே மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
போலீசார் இருவரையும் கைது செய்தபோது மது போதையில் இருந்ததால் விசாரணை செய்வதில் காவல்துறைக்கு சற்று சிரமம் இருந்தது.
பட்டியல் பிரிவு இளைஞர் என்று தெரிந்தேதான் கொலை செய்திருக்கின்றனர். காரச்சேரியை சேர்ந்த கணவரை பிரிந்த பெண்ணுடன் முத்துபொருமாள் பழகி வந்திருக்கிறார். பெண்ணை இருச்சக்கர வாகனத்தில் இறக்கி விடுவதற்காக அவர் காரச்சேரி சென்று வந்துள்ளார். இதையடுத்தே அவரை கொலை செய்ததாக கூறி இருக்கின்றனர்.
அதேபோல், மேலும் சில காரணங்களை கூறி வருகின்றனர். ஆனால் மூன்றாவது நபரையும் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும்போதுதான் முழுமையான தகவல் தெரியவரும்", என கூறினார்.
முத்துபெருமாள் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக தூத்துக்குடி செல்லும் சாலையில் புளியங்குளம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலை தொடங்கி மாலை வரை சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தப்பியோடிய குற்றவாளியை விரைந்து பிடிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்களை கலைந்து செய்ய சென்றனர்.
ஆனால், இரண்டாவது நாளாக இன்றும் இறந்த இளைஞரின் உடலை பெறாமல் கிராமத்திற்குள் ஊர் மக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது.
கொலைக்கான பின்னணி தெரிந்தால் மட்டுமே உடலை பெறுவோம் என கொலை செய்யப்பட்ட முத்துபெருமாள் சகோதரர் அஜய்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, பிபிசியிடம் பேசிய அவர், "முத்து பெருமாள் பொறியியல் பட்டதாரி, அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். அவர் எந்த பிரச்னைக்கும் செல்ல மாட்டார். தெற்கு காரச்சேரியில் வசிக்கும் பெண்ணை பெட்ரோல் பங்க் உரிமையாளர் கூறியதன் அடிப்படையிலேயே எனது அண்ணன் சென்று ஊரில் இறக்கிவிட்டு அழைத்து வந்து இருக்கிறார்.
திடீரென சிலரால் கொலை செய்யப்பட்டு இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த கொலைக்கான உண்மை காரணத்தை காவல்துறையினர் கூற வேண்டும். அதேபோல, இந்த கொலைச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கக்கூடிய உண்மை குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே முத்துபெருமாளின் உடலை நாங்கள் பெறுவோம்", என கூறினார்.
நெல்லையில் 3 மாதங்களில் 50 சாதிய கொலைகள்
நெல்லை மாவட்டத்தில் மட்டுமே கடந்த மூன்று மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட சாதிய கொலைகள் நடந்தேறி இருப்பதாக கூறுகிறார் சமூக செயற்பாட்டாளர் லெனின் கென்னடி.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "நெல்லை மாவட்டத்தில் 1990 காலகட்டத்தில் அதிக அளவிலான சாதிய வன்முறைகள், கொலைகள் அரங்கேறி வந்தன. அதன்பின் குற்றச் சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சமீப காலமாக நெல்லை மாவட்டத்தில் பட்டியலின சாதியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொலைகள் அதிகரித்து இருக்கின்றன. இதற்கு சமூக ஊடகங்களே தூண்டுகோலாக அமைந்துள்ளன. இளைஞர்கள் சாதியை முதன்மைப்படுத்தி சமூக வலைதளத்தில் செயல்படுவதே வன்முறைக்கான தொடக்கப் புள்ளியாக மாறிவிடுகிறது", என்றார்.
நெல்லையில் காவல்துறை பற்றாக்குறையா?
தொடர்ந்து பேசிய அவர், "நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க 20 போலீசார் மட்டுமே இருக்கின்றனர். காவல்துறை எண்ணிக்கையை நெல்லை மாநகரில் அதிகரிக்க வேண்டும்.
காவல்துறை அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினால் நெல்லையில் தொடரும் சாதிய வன்முறைகளை தடுக்கலாம்", என கூறுகிறார்.
மழை, வெள்ளம் புயலில் இருந்து மாவட்டம் மீளவில்லை, அத்தகைய சூழலில் சாதிவெறியர்களின் படுகொலை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் படுகொலைகளை தடுத்திட அரசு நடவடிக்கைகள் எடுத்து, நேர்மை திறனுடன் பணியாற்றும் அதிகாரியை அந்தப் பகுதிகளில் நியமனம் செய்ய வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக