புதன், 3 ஜனவரி, 2024

பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு - சொத்துக்குவிப்பு வழக்கில்

 மின்னம்பலம் - Kavi : சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி இன்று (ஜனவரி 3) மேல்முறையீடு செய்துள்ளார். Ponmudi appeals in Supreme Court
கடந்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக  பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.76 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என்று கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து டிசம்பர் 21ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. பொன்முடி மற்றும் விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக கால அவகாசம் வழங்கி தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

அனால், இந்த தீர்ப்பு வந்த சமயத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு டிசம்பர் 18 முதல் ஜனவரி 1 வரை விடுமுறை காலமாகும். டிசம்பர் 25ஆம் தேதி ஜனவரி 1ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கும் விடுமுறை.

இந்த விடுமுறை காலங்களில் ரெகுலர் கோர்ட் எனப்படும் வழக்கமான அமர்வுகள் செயல்படாது. விடுமுறை கால அமர்வுகள் மட்டுமே செயல்படும்.

இதனால் பொன்முடி தரப்பில்   உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யமுடியவில்லை.

இந்நிலையில் விடுமுறை முடிந்து ஒரு தினத்துக்கு பின் ஜனவரி 3ஆம் தேதியான இன்று பொன்முடி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

அந்த மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். அதுபோன்று இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு மாத கால அவகாசத்தில் ஏற்கனவே 12 தினங்கள் விடுமுறையில் முடிந்துவிட்டன.

இன்னும் 18 நாட்களே இருக்கும் நிலையில் விரைவில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரியா

கருத்துகள் இல்லை: