வியாழன், 2 டிசம்பர், 2021

அதிமுக கட்சி விதிகள் அதிரடி மாற்றம்! ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்

 மாலைமலர் : அதிமுக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சட்ட திருத்தத்திற்கு கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் கமி‌ஷனின் நிபந்தனையாகும்.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி நடைபெற்றது.
சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அப்போது ஆலோசித்தனர்.


இதைத் தொடர்ந்து தேர்தலில் ஆட்சியை இழந்துள்ள சூழ்நிலையில் பரபரப்பான கால கட்டத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று காலை 10 மணிக்கு கூடியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 280-க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் அனுஷ்டித்தனர்.

அதிமுக உறுப்பினர்கள்

அதன் பிறகு மறைந்த தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டனர்.

செயற்குழு கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து கட்சி விதிகளில் திருத்தம் செய்யும் சிறப்பு தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யும் விதிகளை மாற்றம் செய்யும் வகையில் அந்த சிறப்பு தீர்மானம் அமைந்து இருந்தது.

அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. எனக்குப் பின்னாளும் 100 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து இருக்கும் என்று சூளுரைத்தார். அவர் வகித்த கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு அவர்களுக்கு மட்டுமே உரியது என்று, கழகத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின், கழகத்தை வழிநடத்த 12.9.2017-ம் நாள் நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட் டத்தில், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு, கழகப் பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புகளும், அதிகாரங்களும், கழக ஒருங்கிணைப்பாளருக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கும் முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.

மேலும், கழக சட்ட திட்ட விதியினை திருத்தம் செய்ய, கழகப் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, கழக சட்ட திட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில், விதி 20 மற்றும் விதி 43-ம் திருத்தப்பட்டது.

இது தொடர்பாக, கழக அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, கழக செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, கழக சட்ட திட்ட விதிகளில் பின்வரும் திருத்தங்கள் செய்ய முன்மொழியப்பட்டது:

1. கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேற்படி, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்வு செய்யப்படுவார்கள்” என்று கழக சட்ட திட்ட விதி 20(அ) பிரிவு 2 திருத்தி அமைக்கப்படுகிறது.

2. கழக சட்ட திட்ட விதி 43, பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக திருத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது: “ஆனால் இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியதல்ல.’’

3. கழக சட்ட திட்ட விதி 45, பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக திருத்தப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது. “ஆனால், இந்த சட்ட திட்டங்களின் அடிப்படை உணர்வாக உருவாக்கப்பட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும், விலக்கு அளிப்பதற்கோ, தளர்த்துவதற்கோ அதிகாரம் இல்லை.’’

மேலும், இந்தத் திருத்தங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும், இன்றைக்குப் பிறகு கூட்டப்படும் கழகப் பொதுக்குழுவின் அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் பெறுவதென்றும் இந்தச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

சிறப்பு தீர்மானத்தை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பொன்னையன், தமிழ்மகன் உசேன், தனபால் ஆகியோர் முன்மொழிந்தனர். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்தன

கருத்துகள் இல்லை: