Prasanna Venkatesh - GoodReturns Tamil : ஒமிக்ரான் வைரஸ் பரவல் வேமாகி வரும் வேளையில், அமெரிக்கப் பெடர்ல் ரிசர்வ் தனது பத்திர கொள்முதல்-ஐ குறைக்கவும், வட்டியை வரைவாக உயர்த்த முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் பரவி வந்த ஒமிக்ரான் தற்போது இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பரவிய நிலையில், முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வேறு முதலீட்டுத் தளத்திற்குச் செல்லும் வேளையில் அமெரிக்காவில் பிற முதலீட்டுத் தளத்தில் இருக்கும் முதலீடுகள் குறிப்பாகக் கிரிப்டோசந்தையில் இருக்கும் முதலீடுகள் பங்குச்சந்தை பக்கம் திரும்பியுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் கிரிப்டோகரன்சியில் மிக முக்கிய நாணயமாக இருக்கும் பிட்காயின் மதிப்பு ஒரு மணிநேரத்தில் 10000 டாலர் சரிந்துள்ளது.
அமெரிக்கச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து தொடர்ந்து சரிந்து வந்த பிட்காயின் விலை கிட்டத்தட்ட 14,607.55 டாலர் சரிந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் இந்திய முதலீட்டாளர்களும் அதிகளவிலான இழப்பை எதிர்கொண்டு உள்ளனர்.
பிட்காயின் விலை கடந்த 24 மணிநேரத்தில் கிட்டதட்ட 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு பிட்காயின் விலை $57,482.17 டாலர் விலையில் இருந்து $42,874.62 டாலர் வரையில் சரிந்துள்ளது. இதில் மிக முக்கியமான ஒரு மணிநேர வர்த்தகத்தில் மொத்தமும் மாறியுள்ளது.
ஆம், பிட்காயின் மதிப்பு மெல்ல மெல்ல சர்வதேச வர்த்தகச் சூழ்நிலைக்குச் சரிந்து வந்த நிலையில் அமெரிக்கச் சந்தை துவங்கிய வேளையில் ஒரு பிட்காயின் விலை 52,661 டாலரில் இருந்து 45,032 டாலர் வரையில் சரிந்தது, இந்த மாபெரும் சரிவு வெறும் ஒரு மணிநேரத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
பிட்காயின் மட்டும் அல்லாமல் எதிரியம் 15 சதவீத சரிவு, சோலான 17.84 சதவீத சரிவு, ரிப்பிள் 20 சதவீத சரிவு, டெரா 17 சதவீத சரிவு, கார்டானோ 17.47 சதவீத சரிவு, டோஜ்காயின் 22.15 சதவீத சரிவு, ஷிபா இனு 16.17 சதவீத சரிவு என அனைத்து முன்னணி கிரிப்டோவும் சரிவை எதிர்கொண்டு உள்ளது.
இந்தப் பெரும் சரிவுக்கு மிக முக்கியக் காரணம் புதிதாகப் பரவி வரும் கொரோனா வைரஸான ஒமிக்ரான் மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ள பணப்புழக்க கட்டுப்பாட்டு நடவடிக்கை தான். மேலும் இந்தியாவில் அடுத்தது கிரிப்டோகரன்சி மசோதா மற்றும் அதன் மீதான வரி அறிவிப்புகள் இந்திய முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக