ஞாயிறு, 28 நவம்பர், 2021

சி.வை.தாமோதரம் பிள்ளை... பழந்தமிழ் சுவடிகளை பதிப்பித்த முன்னோடி .. தொல்காப்பியம் கலித்தொகை, சூளாமணி வீரசோழியம் .... இன்னும் பல

ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை | யாழ்ப்பாணம் : Jaffna

.keetru.com  :     தமிழ் இலக்கியங்கள்  இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் கோயில்களிலும், மடங்களிலும், கவிராயர் இல்லங்களிலும், அரண்மனைகளிலும் முடங்கிக்கிடந்த பழந்தமிழ்ச் சுவடிகளை வெளியுலகுக்குக் கொண்டு வந்த பெருமை ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா ஆகியோரைச் சாரும்!
c vai thamodaram pillaiதமிழறிஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாய்மொழியாம் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியுள்ளனர். ஓலைச்சுவடிகளிலிருந்து பண்டைய தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கண்டெடுத்து சரிபார்த்து, திருத்தம் செய்து, பதிப்பித்த பெருமை ‘பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று புகழ்ந்துரைக்கப்படும் சி.வை.தாமோதரம் பிள்ளையையே குறிக்கும்.
தமிழ் இலக்கண, இலக்கியச் சுவடிகள் பதிப்பிக்கத் தொடங்கிய பின்பு தான், தமிழ் மொழியின் பரந்துபட்ட பரப்பு தெரியவந்தது. தமிழ் நூல்களை அழியாமல் காத்துப் பாமர மக்களிடையே பரவலாக்கிய பெருமை தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்களையே சாரும். தமிழ்ச்சுவடிப் பதிப்பு வரலாற்றில் ஆறுமுக நாவலருக்குப்பின் சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்புப்பணி போற்று தற்குரியது. அவர் தமிழ் நூல்கள் பலவற்றை முதன் முதலில் பதிப்பித்து தமிழுலகம் அறியச் செய்தார்.


சுவடியில் உள்ளவற்றை அச்சில் கொண்டு வருவதே பதிப்புப் பணியாய்த் திகழ்ந்த காலத்தில், சுவடிப்பதிப்பிற்கு ஆராய்ச்சி நோக்கில் அரிய பதிப்பு முன்னுரைகளை எழுதி சுவடிப்பதிப்பை ஆய்வு நிலைக்கு உயர்த்தியவர். அவருடைய பதிப்புகளின் சிறப்பியல்பு களில் முத்தாய்ப்பாய் விளங்குவது அவரது பதிப்புரைகள். அவர் பதிப்புரை களை மூலபாடத் திறனாய்வுடனும், வரலாற்று அணுகுமுறையுடனும் கால ஆராய்ச்சியுடனும் அணுகியுள்ளார்.

“ஓலைச் சுவடிகள் சிதைந்த நிலையில், பிரித்தவுடன் ‘பொல பொல’ என்று உதிர்ந்து கொட்டும். கட்டை அவிழ்க்கும்போது கட்டு கயிற்றோடு பிய்த்துக்கொண்டு வரும் ஏடுகள் பல. ஏட்டைப் புரட்டினால் நுனிகள் ஒடிந்து கீழே உதிரும். ஒட்டிக் கொண்டுள்ள இரண்டு ஏடுகளைப் பிரிக்க முயன்றால் இரண்டும் கிழிந்து போகும். இத்தனை அவதிகளையும் பட்டு, நூலை முறைப்படுத்திப் பார்க்கும் போது பக்க எண்கள் இல்லாமல், ஏடு முன்னும் பின்னுமாக இருக்கும். ஒரு பக்கத்தில் அல்லது ஓலையின் கடைசி எழுத்தை வைத்துக்கொண்டு அடுத்த ஓலையின் முதல் எழுத் தையும் வைத்துக்கொண்டு இதற்கடுத்து இதுதானா என்று ஆராய்ந்து உறுதிகொண்டு இணைக்க வேண்டும். சிலமுறை தவறான இணைப்பை ஏற்படுத்தி விட்டால் அவற்றை மறுபடியும் ஆரம்பம் முதல் ஆய்ந்து வரிசைப்படுத்த வேண்டும்.” இவ்வாறு கடினப்பட்டு தான் பழந்தமிழ் நூல்களை சி.வை.தாமோதரம் பிள்ளை பதிப்பித்தார் என்று முக்தா சீனிவாசன் பதிவு செய்துள்ளார்.

சி.வை.தாமோதரம் பிள்ளை நூல் பதிப்பிக்கும் பணிக்கு வந்ததற்குப் பொருள் ஈட்டும் முயற்சியோ, புலமை காட்டும் உயர்ச்சியோ காரணங்கள் இல்லை. தாய்மொழியாம் தமிழின் மீது கொண்ட தணியாக் காதல் ஒன்றே காரணம் ஆகும்.

ஓலைச்சுவடிகளிலுள்ள எழுத்துக்களின் நிலைமை, ஓலைச்சுவடிகள் இருந்த அமைப்பு ஆகியவற்றைக் கண்டு மனம் வருந்தி கண்ணீர் சொரிந்தார். அன்னைத் தமிழுக்கு நேர்ந்த அலங்கோல நிலைமை கண்டு அங்கமெல்லாம் நொந்தார். இத்தகைய அவலநிலையை மாற்றித் தமிழன்னை எழிற்கோலம் கொள்ள வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தினாலேயே நூல் பதிப்புப் பணியில் ஈடுபட்டவர் சி.வை.தாமோதரம் பிள்ளை.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகில் அமைந்துள்ள புத்தூரைச் சேர்ந்த சிறுபிட்டி என்னும் ஊரில் 12.09.1832 அன்று, வைரவநாதபிள்ளை பெருந் தேவி அம்மாள் வாழ்விணையருக்கு மகனாகப் பிறந்தார்.

இளவயதில் வட்டுக்கோட்டையில் உள்ள பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். வாக்குண்டாம், நன்னெறி, மூதுரை, திவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய நூல்களை தமது தந்தையாரிடம் பயின்றார். இவரது தந்தை மிஷின் பாடசாலையில் தலைமை யாசிரியராகவும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

சி.வை.தாமோதரம்பிள்ளை சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயரிடம் நைடதம், பாரதம், கந்தபுராணம், நன்னூல், தொல்காப்பியம் முதலிய இலக்கிய, இலக்கணங் களை தெளிவுறக் கற்றார். பின்னர் தெல்லியம்பதி மிஷன் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலக் கல்வி பயின்றார். பிறகு புகழ்பெற்ற யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டைக் கல்லூரியில் சேர்ந்து 1844 முதல் 1852 வரை கணிதம், தத்துவம், வானவியல், அறிவியல் ஆகிய பாடங்களை ஆர்வமாகக் கற்றார்.

சென்னைக்கு 1857ஆம் ஆண்டு சி.வை.தாமோதரம் பிள்ளை வந்தார். அப்போது தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.ஏ. பட்டப்படிப்பில் சேர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதல் பட்டதாரிகள் மூவரில் ஒருவராக மாநிலத்தின் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பின்னர் 1871 ஆம் ஆண்டு வழக்கறிஞருக்குரிய பி.எல். பட்டமும் பெற்றார்.

சி. வை. தாமோதரம்பிள்ளை கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியர் பணி, கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரித் தலைமை ஆசிரியர் பணி, சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணி ஆகிய பணிகளைச் சிறப்புடன் ஆற்றினார்.

இதழாசிரியர் பணி, வழக்கறிஞர் பணி, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவான் பணி, நீதிமன்றப் பணி, சென்னை அரசு வரவு செலவுக் கணக்கு நிலையத்தில் கணக்காளர் பணி முதலிய பணிகளை திறம்பட ஆற்றினார். ‘உதய தாரகை’, ‘தினவர்த்தமானி’ ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லமை படைத்த சி.வை.தாமோதரம் பிள்ளை, பேராசிரியர் பர்னல், சர். வால்டர் எலியட், லூசிங்டன் முதலிய ஆங்கிலேயப் பெருமக்களுக்குத் தமிழ் கற்பித்தார்.

சி.வை.தாமோதரம் பிள்ளை, நீதிநெறி விளக்கம், திருத்தணிகைப் புராணம், கலித்தொகை, சூளாமணி, ஆதியாகம கீர்த்தனம் முதலிய இலக்கிய நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். மேலும், தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, வீரசோழியம், இறையனார் அகப்பொருள், தொல்காப்பியம் - பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, இலக்கண விளக்கம், தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியர் உரை முதலிய இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.

தமிழ் மொழியில் மட்டுமே காணப்படும் பொருள் இலக்கணம் பற்றிய கருத்துகளைக் கொண்ட தொல் காப்பியப் பொருளதிகாரத்து நச்சினார்க்கினியர் உரையை 1885ஆம் ஆண்டு பதிப்பித்தார்.

பௌத்த மதத்தைச் சேர்ந்த புத்தமித்திரர் என்பவரால் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற தமிழின் ஐந்திலக்கணத்தையும் சுருக்கமாக உணர்த்தும் முறையில் எழுதப்பட்ட வீரசோழியம் என்ற இலக்கண நூலைப் பதிப்பித்தார்.

பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக் கலி, நெய்தல் கலி முதலிய பகுதிகளைக் கொண்டது கலித்தொகை. ஒவ்வொரு பகுதியிலும் கலித்தொகை தொடர்பாகவும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பாடல், பாடலுக்குப் பொருள், குறிப்புரை, இலக்கிய இலக்கண மேற்கோள், அதிகமான பாடவேறுபாடுகள், செய்யுள் முதற் குறிப்பகராதி, ஆசிரியர்கள் வரலாறு, உரை யாசிரியர் வரலாறு, அரும்பதம் அதன் பொருள், பதிப்பில் கையாண்டுள்ள பிற நூல்களின் பெயர் போன்றவற்றுடன் செம்மையான, புதிய ஆய்வுப் பதிப்பைச் சுவடியிலிருந்து கலித்தொகையைப் பதிப்பித் துள்ளார். இவரது கலித்தொகைப் பதிப்பினை முழுமை யான உரையுடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1984 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.

தமிழில் முழுமையாகக் கிடைத்த முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தைத் தாம் பதிப்பித்ததன் நோக்கம், “தமிழ்நாடு முழுவதும் உள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும் நான் தேடிக் கண்டவரை சிதிமலடைந்து இருந்தது, இன்னும் சில ஆண்டுகளுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, பயனுடைய வகையில் அச்சிடலானேன்” என்று கூறியுள்ளார்.

சி.வை.தாமோதரம் பிள்ளை கலித்தொகை பதிப்புரையில், ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஒன்றைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலுந் தலையுமின்றி நாலா புறமும் சிதிலமடைந்து உள்ளது. பழைய சுவடிகள் யாவும் அழிந்து போகின்றன. எத்தனையோ அரிய நூல்கள் காலப்போக்கில் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? தமிழ் மாது நும் தாயல்லவா? இவள் அழிய நமக்கென்ன? என்று வாளாவிருக்கின்றீர்களே! தேசாபிமானம், பாஷாபிமானம் என்று இல்லாதவர் பெருமையும் பெருமையா? இதனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக!

மேலும், நூல் பதிப்பிப்பதில் உள்ள சிக்கல்களை, தடைகளை சி.வை.தாமோதரம் பிள்ளை, “சொத்தைச் சேர்த்துவிடலாம், எழுத்தைச் சேர்ப்பது எளிதல்ல. மண்ணை அளந்து வரப்புகள் வகுத்துவிடலாம். பொன்னைப் போன்ற எழுத்துகளுக்கு அணைகட்டிப் பார்ப்பது முடியாத காரியம். கடுமையான உழைப்பு மட்டும் போதாது. ஆண்டவன் அருளும் இருந்தால் தான் அடுத்த ஓலை முன் ஓலைக்கு உண்மையாகவே அடுத்த ஓலையாக இருக்கும். இடம் பெயர்ந்து இருந்தால் இலக்கியம் உயிர் புரண்டு நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து தமிழ்நாட்டிற்கு வந்து, தன்னந்தனியாகத் தமிழ்ப் புதையலைத் தேடித்திரிந்து தமிழ் மக்களுக்குத் தரும் அரிய, பெரிய முயற்சியில் ஈடுபட்டவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. மேலும், அக்காலத்தில் ஏட்டுப் பிரதிகளைப் படித்துப் பிழையின்றி எழுதித்தரும் திறமையுள்ளவர் கிடைப்பதே அரிது. இதனால் அவரே ஏடுகளைப் படித்துப் பார்ப்பது. நகல் எடுத்து, பொருள் ஆராய வேண்டிய பணியிலும் ஈடுபட்டார்.

நூல்களைப் பதிப்பிப்பதற்கு தமது கைப் பணத்தையும், ஊதியத்தையும் செலவிட்டார். அதனால் கடன் பட்டதுண்டு. இவரது வேண்டுகோளை ஏற்று, நூல்களைப் பதிப்பிப்பதற்கு, சென்னை பூ.அரங்கநாத முதலியார், புதுக்கோட்டை அ.சேசைய சாத்திரியார், கொழும்பு அத்வக்காத் பொ.இராமநாத முதலியார், திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர் முதலியவர்கள் நிதிஉதவி செய்தனர்.

நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவதில் பல பொருளாதாரப் பிரச்சினை இருந்த போதிலும் மாணவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கற்றுணர்தல் வேண்டும் என்பதற்காக, பல மாணவர்கள் ஏழைகள் என்பதாலும் நூல் விலையில் சலுகை அளித்தார்.

பதிப்பில் பிழைகள் இருப்பின், ஐம்பது பிழை களைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு நூலின் ஒரு பிரதி நன்றிக் கடனாக வழங்கினார். மேலும், பதிப்புத் திருத்தத்தையும் வெளியிட்டார்.

சி.வை.தாமோதரம் பிள்ளையின் பணிகளைப் பாராட்டி ‘இராவ் பகதூர்’ என்ற பட்டத்தை 1895 ஆம் ஆண்டு அரசு அளித்துச் சிறப்பித்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் மரபுக்கும், நவீனத்திற்கும் பாலம் அமைத்த பேரறிஞர்களுள் சி.வை. தாமோதரம் பிள்ளை குறிப்பிடக் கூடியவர்.

தமிழறிஞர் உலகம் சி.வை.தாமோதரம் பிள்ளையின் சிறந்த தமிழ்த் தொண்டினைப் பாராட்டி, ‘செந்தமிழ்ச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

சென்னைப் பல்கலைக்கழகப் பாடநூல் குழு, பதிப்புக்குழு, சட்டக்குழு, தேர்வுக்குழு, ஆட்சிக்குழு ஆகியவற்றில் உறுப்பினராகத் திகழ்ந்தார். தமிழ்ப்பாடத் தேர்வுக் குழுவின் தலைவராகவும் விளங்கினார்.

“இன்று அவர் இயற்றிய நூல்கள் மறக்கப்பட்ட போதிலும், பனை ஓலையில் இருந்த பழைய தமிழ் ஏடுகளை பெருமுயற்சியுடன், படித்து முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்ட அவருடைய அரிய தொண்டு மறக்கப்படவில்லை” என்று தமிழறிஞர் மு. வரதராசனார் சி.வை.தாமோதரம் பிள்ளையின் தமிழ்ப்பணியைப் போற்றியுள்ளார்.

“சி.வை. தாமோதரம் பிள்ளையின் சரித்திரம் தமிழ்ச் சரித்திரம்” என்று குறிப்பிட்டுள்ளார் பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை.

“இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வரலாற்றில் உ.வே.சாமிநாதைய்யர், சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகிய இருவரும் போற்றப்படுவதற்கான காரணம் அவர்கள் பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள் அனைத்திந்திய வரலாற்றுப் பின்புலத்தில் முக்கியமானவையாக அமைவதேயாகும்” - என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

“பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை. கூரை வேய்ந்து, நிலையம் கோலியவர் உ.வே.சா” எனப் பதிப்புலகம் பதிவு செய்துள்ளது.

இன்று பார்க்கும் போது தாமோதரம் பிள்ளையின் காலப்பாகுபாடு பல குறைபாடுடையதாய்த் தோன்றி னாலும், வரலாற்றுணர்வும், காலநிர்ணய அறிவும் அவருக்கு இருந்தன என்பதை எவரும் மறுக்கவியலாது. அன்றைய நிலையில் அது ஆராய்ச்சி நெறியின்பாற் பட்டதாகவே இருந்தது.

தனது கல்வியையும், சுய சிந்தனையையும், ஆராய்ச்சியையும் ஆதாரமாகக் கொண்டு மரபு கூறும் செய்திகளையும் மறுத்துரைக்க வேண்டுமிடங்களில் தயங்காது உரைத்தார் தாமோதரம் பிள்ளை. சூளாமணிப் பதிப்புரையில் கூறியுள்ள சில கருத்துகள் அவரது சுதந்திரப் போக்கையும், அவசியமேற்படின் மரபையும் நிராகரித்து உண்மையை நாடும் மனோபாவத்தையும் ஐயத்துக்கிடமின்றிக் காட்டுகின்றன.

“தமிழிலே மூலபாடத் திறனாய்வு தவழும் பருவத்திலிருந்த வேளையிலே தாமோதரம் பிள்ளை அந்நூதனமானதும், துணிகரமானதுமான முயற்சியை மேற்கொண்டது. அவரது முதிர்ச்சியையும் ஆய்வறிவுப் போக்கையும் துல்லியமாக்குகிறது” எனவும் “பதிப்புப் பணியிலும், அதனையட்டிய மூலப்பாடத் திறனாய் விலும் (Textual Criticism) சி.வை.தாமோதரம்பிள்ளை மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்” எனவும் மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் க. கைலாசபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைப் பதிப்பித்து தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி தனி முத்திரையினைப் பதித்த சி.வை.தாமோதரம் பிள்ளை 01.01.1901 அன்று சென்னை புரசைவாக்கத்தில் இயற்கை எய்தினார்.

கருத்துகள் இல்லை: