Arumugam Karthikeyan : இன்றக்கு ஈழம் பேசும் குழந்தைகளுக்கு தெரியுமா 29 வருடம் முன் இந்த நாளில் ஈழம் பற்றி பேசிய திமுககாரனுக்கு நடந்த சம்பவத்தை உங்கள் வீட்டுல உள்ளவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க..
ஈழத்துக்காக செத்து பிழைத்தவர்கள் திமுககாரன் தான்...
இன்று மறக்கமுடியாத நாள். அந்த கொடூரமான தாக்குதல் இன்றும் மனதில் நீங்காது இருக்கிறது. அந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து உயிருடன் வெளியே வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு சிறிதும் இல்லை. என் தாயை வணங்கி நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து 4 மணி நேரம் கதவை புட்டி ஒரு நாற்காலியை வைத்து முட்டுகொடுத்து தடுத்து நின்றார். அவர் அப்படி தடுத்து எங்களுடன் நிற்கவில்லை என்றால் என் தாய் தந்தை என்னுடன் சேர்ந்து ஏழு உயிர்கள் 29 ஆண்டுகளுக்கு முன்பே பலியாகியிருக்கும் அந்த கொலைவெறி தாக்குதலுக்கு.
அது வரை எவரும் வெற்றி பெற முடியாத அளவு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று என் தந்தைக்கு உளவுத்துறையில் இருந்தவர்கள் அறிக்கை ஒன்றை தந்தனர். பல லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் செங்கற்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெறுவீர்கள் என்று அந்த அறிக்கை சொன்னது. நிச்சயம் வெற்றி என்பதால் டெல்லிக்கு ப்ளைட் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டார்கள். ஆனால் 21ஆம் தேதிக்கு பின்னர் எல்லாம் மாறிவிட்டது.
1991 ஆம் ஆண்டு நாம் தேர்தலை ஆசுர பலத்துடன் சந்தித்த தருணம், எங்கு பார்த்தாலும் இரு வண்ணத்தில் கழக கொடி கம்பிரமாக. என் தந்தை ஐந்து முறை மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்றவர், முதல் முறையாக செங்கற்பட்டு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
1991 தேர்தலில் செங்கற்பட்டு பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிப்பு வந்துமே அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர் வெற்றி நிச்சயம் என்று. என் தந்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓர் டெம்போ டிராவலர் வாகனம் வாங்கினார், சிங்கப்பூரில் இருந்து பிரத்யேக போகஸ் லைட்டுகள் வாங்கி அப்பு அண்ணன் வழங்கினார்கள், இரவு நேரத்தில் அந்த வாகனத்தில் என் தந்தையின் கம்பிர தோற்றதிற்கு ஆழகு சேர்த்தன அந்த போகஸ் லைட்டுகள.
அந்த வாகனம் என் விளையாட்டு உலகம், காஞ்சி நகரில் பல நாட்கள் பிரச்சாரம் செய்வார் அப்போது அவர் இந்த வாகனத்தை விட்டு இறங்கி அம்பாசிடர் காரில் முன்னே சென்ற பின்னர் நான் அந்த வாகனத்தில் உள்ள மைக்கு எடுத்து வழி நெடுகிலும் உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு என்று கத்தி கொண்டு இருப்பேன் என் தந்தை செல்லும் வாகனம் முன்னால் வேகமாக செல்வதால் என் சேட்டைகள் அவருக்கு தெரியாது என்பதால் காஞ்சிபுரம் நகரில் இருந்து ஒன்றியத்தில் உள்ள பிரச்சார point செல்லும் வரை I had a blast, மறக்க முடியாத காலம் அது. செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருப்போரூர், மதுராந்தகம், உத்திரமேரூர் மற்றும் அச்சிரப்பாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடிக்கியது தான் அன்றைய செங்கற்பட்டு பாராளுமன்ற தொகுதி. பெரிய தொகுதி தினமும் நிறைய பிரச்சார பயணங்கள் பொதுக்கூட்டங்கள்.
செங்கற்பட்டு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து தீவிர பிரச்சாரம் செய்தார் என் தந்தை, பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி நிச்சயம் என்று உளவுத்துறை அவருக்கு தகவல் அனுப்பியது, என் தந்தைக்கு என்று ஓர் கணிப்பு உண்டு அவரின் எண்ணமும் உளவுத்துறையின் தகவலை பிரதிபலித்தது. கழகம் மீண்டும் ஆட்சியில் அமரும் என்று உறுதியான தருணம் அது, மக்கள் நம்மை விரும்பினார்கள். ஆனால் 21-0-1991 அன்று இரவு ஓர் செய்தி வந்தது.
21-05-1991 அன்று இரவு என் தந்தை உணவு அருந்திவிட்டு அமர்ந்திருந்தார். தொலைபேசி அழைப்பு வந்தது நான் தான் cordless phone எடுத்து சென்று என் தந்தையிடம் தந்தேன், அவர் அதை வாங்கி கொண்டு பேசினார், பின்னர் அவர் ஏதும் பேசவில்லை, என் தாய் வந்து யாருடா phone செய்தது என்று கேட்டார் நான் தெரியாது அப்பாகிட்டே கொடுத்துவிட்டேன் என்றேன், யாருங்க phone செய்தது என்று என் தாய் கேட்க போன் அழைப்பை cut செய்துவிட்டு என் தந்தை சொன்ன வார்த்தை
“ தாலி அறுத்துடானுங்க மா “
அந்த தருணம் தோல்வி நிச்சயம் என்பதை அவர் உணர்ந்துவிட்டார், ராஜீவ்காந்தி இறந்த செய்தி சொன்னதும் என் தாயும் உணர்ந்துவிட்டார், நாங்கள் சென்று உறங்கிவிட்டோம்.
மறுநாள் 22-05-2-1991 காலையில் 6.30 மணிக்கு நானும் என் அக்காவும் மடியில் சிறு கற்களை தூக்கி வீசி விளையாடிகொண்டு இருந்தோம், அழகேசன் நகரில் உள்ள எங்கள் விட்டின் எதிரில் உள்ள செங்கற்பட்டு மருத்துவமனை எதிரில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு 40 அடி உயரத்திற்கு cut out வைத்து இருந்தோம், நாங்கள் மடியில் இருந்து பார்த்த போது அந்த cut out ஆடியது, அதன் கிழே 50 பேர் நின்று கொண்டு அதை அசைத்துக்கொண்டு இருந்தனர், என் கண்முன்னே தலைவர் கலைஞர் அவர்களின் cut out கிழேவிழுந்தது. உடனே நான் என் தாயிடம் சொன்னேன் அவரும் அப்பாகிட்டே சொன்னங்க.
எங்கள் விட்டுக்கு செய்தி படித்துவிட்டு வக்கீல் ஆதிகேசவன் காலை 7மணிக்கு வந்தார், அவர் எங்களின் வீட்டு gate திறந்து உள்ளே வந்து படி முன் நின்றார், நான் என் தாயாருடன் வீட்டு வாசலில் ( இரண்டாவது மாடி ) நின்று கொண்டு இருந்தேன், அப்போது தெருவின் கடைசியில் ஓர் பெரும் கூட்டம் ஓடி வந்தது, அவர்கள் கையில் கத்தி, இரும்பு பைப்பு, கடப்பாறை இருந்ததை நான் கவனித்தேன், உடனே என் தாய் வீட்டு வாசல் கதவை பூட்டினார் பின்னர் ஒவ்வொரு கதவையும் நிதானமாக பூட்டினார் பின்னர் என் தந்தையிடம் விவரத்தை சொன்னார், அவர் நான் சென்று அவனுங்ககிட்ட பேசுறேன் என்றார் அனால் என் தாய் விடவில்லை வெளியில் சென்றால் அந்த கொலை வெறி கும்பல் என்ன செய்யும் என்று என் தாய்க்கு நன்கு தெரியும், என் தந்தை என் இரண்டு அக்காகள், நான்,என் அக்கா மகன் மற்றும் எங்கள் வீட்டில் வேலை செய்த பெண் உட்பட ஆறு பேரும் ஓர் அறையில் நிற்க்க, என் தாயார் மட்டும் சென்று பூட்டப்பட்ட கடைசி ( முன்றாவது ) கதவுக்கு பின்னல் ஓர் மர நாற்காளி வைத்து முட்டியால் அதை அழுத்தமாக பிடித்து கொண்டார், அந்த புண்ணியவதி தொடர்ந்து 4 மணி நேரம் அந்த இடத்தை விட்டு அவர் நகரவில்லை, கதவுக்கு அருகில் இருந்த ஜன்னல் வழியாக கத்தியை நீட்டி மிரட்டிய போதும் அவர் நகரவில்லை, கதவை உடைத்து கொண்டு வந்தால் முதலில் பிரிவது அவர் உயிராக இருக்க வேண்டும் என்பதால் அங்கிருந்து அவர் நகரவில்லை, அவர் ஓர் சர்க்கரை நோயாளி இருப்பினும் அவருக்கு அந்த வலிமையை தருமம் தான் தந்தது.
வெளியில் நிறுத்தி இருந்த 2 அம்பாசடர் கார், டிரக்கர் ஜீப், கருங்குழி விசுவநாதன் அவர்களின் புல்லட், ஒரு பைக், மற்றும் அந்த டெம்போ டிராவலர் இவை அனைத்தும் கொளுத்தினார்கள் அந்த கொலை வெறி கும்பல்.
காவல்துறைக்கு call செய்தோம் ஆனால் அவர்கள் வரவில்லை, தீயணைப்பு துறை வாகனம் வந்தது அனால் அதையும் இந்த கொலை வெறி கும்பல் விரட்டிய்டித்துவிட்டது
எங்கள் இல்லத்தில் வாசல் கதவு வேங்கை மரத்தில் செய்யபப்ட்டது அது நல்ல வலிமையாக இருந்ததால் அதை உடைக்க 2.30 மணி நேரம் ஆனது, அந்த கொலை வெறி கும்பல் உள்ளே வந்த உடன் முதல் அறையில் உள்ள பிரோவில் இருந்த 25 லட்சம் பணம் ( கட்சி கொடுத்த பணம், செங்கற்பட்டு மாவட்ட கழக செயலாளர் என்ற முறையில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் ) மற்றும் 100 சவரன் தங்க நகைகளை பார்த்ததும் அவர்களின் எண்ணம் பணத்தின் மீது சென்றது. முதல் அறையில் இரண்டு பேரல் டீசல் இருந்தது இருநூறு லிட்டர் டீசல். அந்த கொலைவெறி கும்பல் அதை தண்ணீர் என்று எண்ணி திறந்து கூட பார்க்கவில்லை, அதை மட்டும் கவிழ்த்துவிட்டு எரித்து இருந்தால் எங்கள் குடும்பமே அன்று இறந்து இருப்போம்.
என் தாய் நின்று தாங்கி பிடித்து கொண்டு இருந்த கதவுக்கு பின்னால் நேர் எதிரில் இருந்த ஜன்னல் வழியாக ஒருவன் சன்சேட் வழியில் நடந்து வந்து கத்தியை காட்டி மிரட்டினான், அவன் அப்படியே அருகில் உள்ள சமையல் அறையில் ஜன்னல் அருகில் இருந்த பிரசர் குக்கரை கடப்பாறை கொண்டு தள்ளிவிட்டான். குக்கர் கீழே விழுந்து உள்ள இருந்த பொங்கல் கிழே சிதறியது. சிலிண்டர் இங்க தான்டா இருக்கு என்று ஒருத்தன் கத்தினான். வீட்டை சுற்றி பற்றி எரிகிறது, 7 பேர் மரணம் என்று செங்கற்பட்டு அரசு மருத்துவமனை முன் நின்று கொண்டு இருந்த அனைவரும் முடிவு செய்துவிட்டனர். அவ்வளவு கொடூரமான் தாக்குதல்.
நாங்கள் 4 மணி நேரம் உள்ளே மரண நிச்சயம் என்ற எண்ணத்தில் உள்ளே இருந்தோம் நான் என் தாயார் அருகிலேயே நின்று கொண்டு இருந்தேன், திடீர் என்று சத்தம் குறைந்தது, குப்பன் என்பவர் வந்து ஜன்னல் வழியாக என் தாயாரிடம் 20 நிமிடம் பேசினார் யாரையும் எதுவும் செய்ய மாட்டோம் வெளியே வாருங்கள் என்றார், இருபது நிமிடம் பேசிய பின்னர் என் தாயார் அந்த நாற்காலியில் இருந்து நகர்ந்தார் கதவை திறந்தார், என்னையும் என் அக்காக்கள் இருவரையும் என் அக்காள் மகன் ஆகியோரை குப்பன் காலில் விழ சொன்னார் என் தாய், நாங்கள் அனைவரும் அவர் காலில் விழுந்தோம் என் தந்தையை தவிர
குப்பனை தாண்டி ஒருவன் கத்தியோடு நின்று கொண்டு இருந்தான் அவன் கால்களிலும் விழுந்தோம் என் தந்தையை தவிர, அவன் என் தந்தையை பார்த்ததும் ஒரு வார்த்தை சொன்னான் “ அண்ணே இது உங்க வீடு என்று தெரியாது அண்ணே “ என்றான்.
அங்கிருந்து படியில் இறங்கி வந்தோம் கிழே ஓர் 50 பேர் இருந்தனர் அவர்கள் அனைவரையும் பார்த்து என் தந்தை
கையெடுத்து கும்பிட்டார்......
எவனுக்கும் அடங்காத ஆறுமுகம்......
அந்த தருணம்
நான் என்றும் வாழ்வில் மறக்கமாட்டேன்
என் ஜென்மமே சிந்தியது போல் ஓர் உணர்வு, இப்போது நினைத்தாலும்.
கூட வீட்டில் இருந்த இருவர் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஆரம்பத்திலேயே ஓடினர், ஒருவர் கழிவறையில் ஒளிந்து கொண்டு பின்னர் யாருக்கு தெரியாமல் ஓடினார்.
இந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என் தந்தை, அதனால் தான் அதிகம் பேரை வீட்டில் சேர்த்து வைக்கவில்லை.
அங்கிருந்து இருந்து வீட்டை விட்டு சாலையில் நடந்தே வந்து அருகில் உள்ள ஓர் வீட்டில் அமர்ந்தோம் பின்னர் அங்கிருந்து கிளம்பி பினாயூர் செல்வராஜ் அவர்களின் இல்லத்தில் தங்கினோம் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து தான் மீண்டும் வீடு திரும்பினோம். உடனே ஆவடி நாசர் அண்ணன் துப்பாக்கியுடன் வந்தார், செங்கற்பட்டு நகரத்தை வலம் வந்து, காவல் நிலையம் சென்று குற்றவாளிகளை நீங்க கைது செய்யுங்கள் இல்லாவிடில் நான் பார்த்துகுறேன் என்று கர்ஜித்தார்.
சண்டை தான் செய்யனும் என்று முடிவு செய்து இருந்தால் என் தந்தை ஒருவர் போதும் இருந்த இருநூறு லிட்டர் பெட்ரோல் மற்றும் கேஸ் சிலிண்டர் வைத்து கூட முடித்து இருப்பார், இளம் வயதில் பல ஆயிரம் சண்டை செய்தவர். ஆனால் அன்று அப்பாவை என் தாய் அனுமதிக்கவில்லை. போரிட்டு வென்றிருப்பார் அல்லது வீரமரணம் அடைந்திருப்பார். என் தாய் தடுத்தது நல்லது தான் அப்பாவுடன் பல ஆண்டுகள் வாழும் வாய்ப்பு கிடைத்தது.
எங்கள் வீட்டை தாக்கியது 700 பேர் கொண்ட கொலை வெறி கும்பல் என்று போலிஸ் ரிப்போர்டு தந்தது.
இந்த விட்டில் இருந்து கொள்ளை அடித்து சென்றவர்கள் அனைவரும் உடனே இறந்தனர் நகைக்கும் பணத்துக்கும் சண்டை போட்டு கொண்டு அதில் ஒருவன் மட்டும் சில வருடம் முன்பு தான் இறந்தான், கொலை செய்யப்பட்டான் சாக்கடையில் விழுந்து இறந்தான்.
எவன் தாலியையும் அறுத்து சம்பாதிக்கவில்லை என் தந்தை நேர்மையாக உழைத்து சம்பாதித்தார். சம்பாதித்ததை கட்சிக்கு செலவு செய்தார்.
என் தந்தைக்கு இந்த நிகழ்வு ஓர் பெரும் பின்னடைவு மனரீதியாகவும் பொருளாதாரரீதியிலும், இந்த இழப்பில் இருந்து அவரால் பொருளாதாரரீதியில் கடைசிவரை மீண்டு வர முடியவில்லை.
என் வாழ்வில் இந்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்று
இந்த வலி என்றும் என் மனதில்
Arumugam Karthikeyan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக