மாலைமலர் : எம்.பி.க்கள் மீதான இடை நிறுத்த நடவடிக்கை அவசியமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்பிக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்பி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை அவசியமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேலும் இந்த நடவடிக்கை மாநிலங்களவையின் அனைத்து விதிகள் மற்றும் நடைமுறைகளை மீறுவதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.
மத்திய அரசின் சர்வாதிகார முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான எதிர்கால நடவடிக்கை குறித்து மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாளை ஆலோசிக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக