புதன், 1 டிசம்பர், 2021

இலங்கையில் வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் . உயிரிழப்புக்களும் விபத்துக்களும் தொடர்கிறது

 பிபி சி தமிழ்  : இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறு ஏற்படும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து, தற்போது நாடு முழுவதும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, அம்பாறை, ஹட்டன், புத்தளம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் நாளாந்தம் பதிவாகி வருவதை காணக் கூடியதாக உள்ளது.


2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி வெலிகம பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, தொடர்ச்சியாக இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

நேற்று திங்கள்கிழமை இரவு 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் நாடு முழுவதும் 8 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

இவ்வாறான நிலையில், 2015ம் ஆண்டு முதல் இதுவரையான காலம் வரை இலங்கையில் எரிவாயு உடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் 233 பதிவாகியுள்ளதாக நுகர்வோர் விவகார ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (29) தெரிவித்திருந்தார்.

எனினும், இறுதி வாரங்களில் எரிவாயு தொடர்பிலான வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதையும், ராஜாங்க அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

எதிர்கட்சிகள் கூறுவது என்ன?

சமையல் எரிவாயு சிலிண்டருக்குள் உள்வாங்கப்படும் பியுட்டேன் மற்றும் புரோபீன் ஆகிய இரண்டு ரசாயண பொருள்களின் செறிவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளமையே, இந்த வெடிப்பு சம்பவங்கள் நேர்வதற்கான காரணம் என எதிர்கட்சிகள், நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, சபையில் நேற்றைய தினம் (29) கேள்வி எழுப்பினார்.

பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் ஊடாக, இந்த விடயம் வெளிவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பியுட்டேன் மற்றும் புரோபீன் ஆகிய இரண்டு ரசாயண பொருள்களின் செறிவானது, 49க்கு 51 என்ற அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை வெளியிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு, சபையிலிருந்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உடனடியாக பதில் வழங்கினார்.

நலின் பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் வழங்கப்பட்ட அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்ற நிலைபாட்டிலேயே தானும் இருப்பதாக குறிப்பிட்டார்.

நலின் பண்டாரவின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டோ அல்லது நிராகரித்தோ உதய கம்மன்பில பதிலளிக்கவில்லை.

பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை, நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உதய கம்மன்பில கூறியிருந்தார்.

இதேவேளை, எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்துவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவம் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற தெரிவுக்குழு அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

ஆய்வு கூடம் இல்லை

எரிவாயு கொள்கலன்களில் எந்தளவு பியுட்டேன் மற்றும் புரோபீன் ஆகிய இரண்டு இரசாயண பொருள்களின் செறிவுகளும் இருக்க வேண்டும் என இலங்கையில் எந்தவித கட்டாயங்களும் கிடையாது என விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சபையில் நேற்று தெரித்தார்.

அத்துடன், இந்த பதார்த்தங்களின் செறிவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஆய்வு கூட வசதிகள் இலங்கையில் கிடையாது என அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, இந்த ஆய்வுகளை நடத்துவதற்கான மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் உதவிகளையே தாம் நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகளுக்கு குழு நியமனம்

எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி, ஆய்வு அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை பெறப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிடுகின்றார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, ஆய்வுகளை நடத்துவதற்காக 15க்கும் அதிகமான மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெடிப்புக்கு காரணம் என்னவாக இருக்கலாம்?

எரிவாயு வெடிப்புக்கு சிலிண்டர்கள் காரணமாக இருக்க முடியாது எனவும், அதற்கு பொருத்தப்படும் உபகரணங்களே காரணமாக இருக்கலாம் எனவும் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார்.

01. விறகு அடுப்பிற்கு அருகில் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தல்.

02. எரிவாயு சிலிண்டர் பயன்பாடு குறித்து தெளிவின்மை.

03. எரிவாயு சிலிண்டருக்காக தரமற்ற உபகரணங்களை பயன்படுத்தல்.

04. சிலிண்டருக்கும், அடுப்பிற்கும் இடையிலான தொடர்பு உரிய வகையில் இணைக்கப்படாமை.

05. வயரின் அளவிற்கு அதிகமான அளவை கொண்ட ரேகுலேட்டர் பயன்படுத்தல்.

06. மூடிய இடங்களில் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருந்தல்.

07.எரிவாயு சிலிண்டருக்கான தரமற்ற வயர் பயன்பாடு.

08. சிலிண்டருக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை உரிய வகையில் முகாமைத்துவம் படுத்தாமை.

09. மின்சாரத்தில் கசிவு.

தரமற்ற உபகரணங்களின் பயன்பாடு, வெடிப்புக்களுக்கான காரணமாக இருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிடுகிறார்.

போலீஸ் விசாரணை ஆரம்பம்

சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கான விசேட போலீஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மொறட்டுவை பல்கலைக்கழக அறிக்கை கிடைக்கப் பெற்றவுடனேயே, முடிவொன்றுக்கு வர முடியும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது

கருத்துகள் இல்லை: