நக்கீரன் : கடந்த 29 ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்த பேச்சு வந்தபொழுதே இதை நிறைவேற்றக்கூடாது என்றும், நாடாளுமன்ற சிறப்புக்குழு ஒன்றை உருவாக்கி அணை பாதுகாப்பு மசோதாவைப் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் நீண்ட விவாதத்திற்கு பின்னர் நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைத்து அணை பாதுகாப்பு சட்டத்தை பரிசீலனை செய்யவேண்டும் என்ற தீர்மானம் தொடர்பாக நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் கிடைத்தது.
அதன்பிறகு மசோதா மீதான குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைத்ததால் மசோதா இறுதியாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இந்த மசோதா ஒப்புதல் பெற்றுள்ளதால் விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக உருப்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக