தினமலர் : சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு வாங்க வந்தவருக்கு நிர்வாகிகள் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மீடியாவிற்கு பேட்டி அளிக்க வந்த போது, அங்கிருந்த தொண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை முன்மொழியவும், வழிமொழியவும் ஆட்கள் இல்லாததால் வேட்புமனு வழங்கவில்லை என அதிமுக நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம்(டிச.,1) நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களால், ஒற்றை ஓட்டின் வாயிலாக இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சி அமைப்புகளுக்கான பொதுத் தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்ப, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று(டிச.,3) துவங்கியது.
இந்நிலையில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(டிச.,3) காலை துவங்கியது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க ஓட்டேரியை சேர்ந்த அ.தி.மு.க., தொண்டர் பிரசாத் சிங் என்பவர் வந்தார். ஆனால், அவருக்கு வேட்புமனு கொடுக்கப்படவில்லை.
இதனையடுத்து வெளியே வந்த பிரசாத் சிங், மீடியாவிற்கு பேட்டி அளித்தார். அப்போது அங்கிருந்த அதிமுக.,வினர் அவரை அடித்து விரட்டினர். இதனால் , அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் அளித்த விளக்கத்தில்,விதிகளை பின்பற்றாமல், வழிமொழியவும், முன்மொழியவும் ஆட்கள் இல்லாததால், பிரசாத் சிங்கிற்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.
இதனிடையே, பன்னீர்செல்வம், பழனிசாமி தூண்டுதல் காரணமாக என்னை தாக்கினர் எனவும், விருப்ப மனு பெற தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீசாரிடம் பிரசாத் சிங் புகார் மனு அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக