சனி, 4 டிசம்பர், 2021

எம்ஜியாரின் வாக்குவங்கியாக இருந்த மீனவர் சமூகத்திற்கு... அவரிழைத்த வரலாற்று ....

May be an image of outdoors

G Cruz Antony Hubertt :  மீனவர்களுக்கு எப்போதுமே எம்.ஜி.ஆர் என்றால் உயிர். அதிலும் படகோட்டி, மீனவ நண்பன் போன்ற திரைப்படங்களுக்கு பின் அவர் மீனவர்களுக்கு தங்களுள் ஒருவராகிப் போனார். கடற்புரத்தில் அவருக்குப் பெயர் "பப்பா". பப்பா என்றால் தாத்தா.
"ஏக்கி! பப்பா படம் போட்டிருக்கான்" என்றுதான் பெண்களும் பேசுவார்கள். இன்று வரை மீனவர்களிடம் பெரும் ஓட்டு  வங்கி அதிமுகவுக்கு உண்டு.
அவர் மீனவர்களுக்கு கொடுத்த முதல் அடி  1982 ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரத்தின் போது. ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். அரசு தரப்பில் இரண்டு, மூன்று என கணக்கு சொல்லப்பட்டது.
மீனவ கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப் பட்டு அவர்களுக்கான உணவு பொருட்கள் கிடைக்காமல் செய்யப் பட்டது. குடிநீர்க் கிணறுகளில்  டீசலும், மனிதக் கழிவுகளும் கொட்டப் பட்டன. இவை அனைத்தும் காவல் துறை உதவியுடன் நடந்தது.
அடுத்த அடி 1985ம் ஆண்டு.


12 கிமி தூரமுள்ள மெரினா கடற்கரை முதலில் களிமண் நிறைந்ததாக இருந்தது. ஜார்ஜ் கோட்டையை கட்டிய போது கடல் கோட்டையின் சுவர் வரை இருந்ததாக பதிவுகள் இருக்கின்றன. 1881 அன்றைய லெப்டினன்ட் கவர்னராக இருந்த சர். மௌண்ட்ஸ்டூவர்ட்  எல்பின்ஸ்டன் என்பவரே தற்போதுள்ளது போல அழகு படுத்தினார்.  
எம்.ஜி.ஆரின் அதிமுக அரசு உலக வங்கியின் உதவியுடன் மெரினாவை அழகு படுத்தும் திட்டத்தில் இறங்கியது.  அழகு படுத்தும் திட்டமென்பது நிறைய உயர்தர தங்கும் விடுதிகளையும்,  கேளிக்கை விடுதிகளையும், விளையாட்டு அரங்கங்களையும் நிறுவி சுற்றுலாவை ஊக்குவிப்பது.
இதற்காக சென்னையின் பூர்வீக குடிகளாக காலகாலமாக கடற்கரையில் வாழ்ந்த மீனவ மக்களை அவர்கள் இருப்பிடங்களான குப்பங்களிலிருந்து காலி செய்யச் சொன்னது அதிமுக அரசு. மறுத்த மீனவர்கள் வேட்டையாடப் பட்டனர்.  
1985 நவம்பர் 4ம் தேதி காவல்துறை உதவியுடன் நகராட்சி அலுவலர்கள் மீனவர்களின் யாத்தனங்களான வலை, துடுப்பு, கட்டுமரம் போன்றவற்றை லாரிகளில் அள்ளி எடுத்துச் சென்று விட்டனர்.. தங்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதை
அடுத்து மீனவ குப்பத்து மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர்.  சட்டப் போராட்டமாக நீதி மன்றத்திற்கு எடுத்து செல்லப் பட்டபோது அதை விசாரிக்க வேண்டிய நீதிபதி என்ன காரணத்தினாலோ வராமல் போனார்.  
ஒரு மாதமாக நீடித்த மீனவ மக்களின் போராட்டத்தை ஒடுக்க எம்.ஜி.ஆர் அன்றைய காவல் துறை அதிகாரிகளான தேவாரத்தையும், மோகன்தாஸையும்  ஏவி விட்டார். வேட்டை நாய்களைப் போல  பாய்ந்த போலீஸ் படை அயோத்தியா குப்பம், நடுக்குப்பம், நொச்சிக்குப்பம்  ஆகிய மீனவர் குடியிருப்புகளில் இரவோடிரவாக புகுந்து நாசம் செய்தது.
17 முறை துப்பாக்கியால் சுட்டனர். 7 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். 19 பேருக்கு மேல் காயமும் ஊனமும் ஏற்பட்டது. 40 பேருக்கு மேல் கைது செய்யப் பட்டனர்.
உயிர் பலிக்குப் பின்னரே நீதிமன்றம் தலையிட்டு தடையாணை பிறப்பித்தது.
எத்தனையோ பேருக்கு சிலைகளும், நினைவு மண்டபங்களும் இருக்கும் மெரினாவில்  மீனவர்களுக்காக உயிர் நீத்த எழுவருக்கு எந்த நினைவுச் சின்னமும் இல்லை. அயோத்தியா குப்பத்தில் மட்டும் ஒரு சிறிய நிணைவுச் சின்னம் உள்ளது.
மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தைக் காப்பதற்காக துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த எழுவரின்  37வது நினைவு நாள் இன்று 04/12/2021.
வீர வணக்கம்.

கருத்துகள் இல்லை: