வெள்ளி, 3 டிசம்பர், 2021

மம்தா அதானியோடு சந்திப்பு! காங்கிரஸ் மீது பாய்ச்சல்! நிறம் மாறுகிறார்?

மின்னம்பலம் : ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பதே தற்போது இல்லை என்றும் ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்றுகொண்டே இருக்கிறார் என்றும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியிருப்பதற்கு காங்கிரஸிடம் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தொடர் அழைப்பு விடுத்து வருகிறார். டெல்லியில் சில வாரங்கள் முன்பு அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டினார்.


அதே நேரம் மம்தா பானர்ஜி அடுத்த பிரதமர் என்ற குறிக்கோளை நோக்கி செயல்பட்டு வருகிறார். டிசம்பர் 1ஆம் தேதி மம்தா பானர்ஜி மும்பை சென்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசினார். அவரது சில்வர் ஓக் இல்லத்தில் சரத் பவாரை பானர்ஜி சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “இன்று நாட்டில் பாசிச சூழல் நிலவுகிறது. அதற்கெதிராக வலுவான மாற்றீடு வழங்கப்பட வேண்டும். அதை யாரும் தனியாக செய்ய முடியாது. வலுவாக உள்ளவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்”என்று கூறினார்.

அப்போது ஒரு செய்தியாளர், “ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு சரத் பவார் தலைமை தாங்குவாரா?”என்று கேட்டார்.

அதற்கு மம்தா பானர்ஜி, “ஐக்கியமுற்போக்குக் கூட்டணியா? அப்படியென்றால் என்ன? அது இப்போது இல்லையே?”என்று கூறினார். காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மம்தா "சரத்ஜி என்னிடம் சொன்னது என்னவென்றால், இப்போது வலுவான மாற்று அணி இருக்க வேண்டும். ஒருவர் சண்டையிடவில்லை என்றால் என்ன செய்வது? அனைவரும் களத்தில் போராட வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம்”என்று கூறினார்.

ஆனால் சரத் பவார், “ யாரையும் ஒதுக்கி வைக்கும் கேள்வியே இல்லை. பிஜேபிக்கு எதிரானவர்கள் அனைவரும் எங்களுடன் இணைவதை வரவேற்கிறோம்.. அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்வதே முக்கிய விஷயம். கடினமாக உழைக்கத் தயாராக உள்ளவர்கள், அனைவருடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். தலைமை எங்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சினை அல்ல. வலுவான மற்றும் நம்பகமான தளத்தை மக்களுக்கு வழங்குவது எங்களுக்கு முக்கியம். அதற்கு யார் தலைமை தாங்குவது என்பது இரண்டாம் பட்சம்,'' என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் ஒரு காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பெரிய வெற்றிபெற்ற பின் மம்தா தேசிய அளவில் கண் வைத்துள்ளார். அதற்கு காங்கிரஸ் இடைஞ்சலாக இருப்பதாகக் கருதுகிறார். அதனால்தான் காங்கிரஸ் அல்லாத எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயல்கிறார். இந்த ஆண்டு ஜூலை மாதம் தனது டெல்லி பயணத்தின் போது, ​​மம்தா பானர்ஜி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார். ஆனாலும் கடந்த சில மாதங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பலரை குறிவைத்து திரிணமூல் காங்கிரஸில் குறிவைத்து சேர்த்துள்ளார் மம்தா. இந்த நிலையில் யுபிஏ கூட்டணியே இல்லை என்ற மம்தான் கருத்து சோனியாவை கோபப்படுத்தியிருக்கிறது.

டிசம்பர் 1 ஆம் தேதி இரவு டெல்லியில் முக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்தது. அதில் மம்தா பற்றிதான் விவாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில் மம்தா மீது விமர்சனங்களை வைக்காமல் இருந்தோம். இனி மம்தாவை கடுமையாகத் தாக்கலாம்’ என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி தர ஆரம்பித்துள்ளனர்.

“காங்கிரஸ் இல்லாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆன்மா இல்லாத உடலாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் இது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.

மக்களவை காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவருமான அதிர் ரஞ்சன் சௌத்ரி, “மம்தா பானர்ஜி பைத்தியக் காரத் தனமாக பேசி வருகிறார். UPA என்றால் என்னவென்று மம்தா பானர்ஜிக்கு தெரியாதா? இந்தியா முழுவதும் ’மம்தா, மம்தா’ என்று முழக்கமிட ஆரம்பித்துவிட்டதாக அவர் நினைக்கிறார். ஆனால் இந்தியா என்பது வங்காளத்தைக் குறிக்காது, வங்காளம் மட்டும் இந்தியாவைக் குறிக்காது. மம்தா -பவார் சந்திப்பு என்பது சதித் திட்டத்துக்கான சந்திப்பு. பாஜகவுக்கு ஆக்ஸிஜன் சப்ளையராக மம்தா மாறிவிட்டார்”என்று கூறியுள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் ட்விட்டரில், “மோடிஜியிடம் எந்தக் கேள்வியும் கேளுங்கள், நீங்கள் தேச துரோகி என அழைக்கப்படுவீர்கள். அதேபோல் மம்தாவிடம் எந்தக் கேள்வியையும் கேளுங்கள், நீங்கள் மாவோயிஸ்ட் என்று அழைக்கப்படுவீர்கள்... என்ன வித்தியாசம்?”என்று கேட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளரும், ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவருமான ரந்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் நேற்று (டிசம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசும்போது,

“மம்தா பானர்ஜி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார். அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மாறி மாறி சென்றவர். பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 20-ந் தேதி அவர் கூறினார். ஆனால் தற்போது கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக போட்டியிடுகிறார். இது மம்தா பானர்ஜிக்கு அரசியல் சமயோசிதமாக தெரியலாம். ஆனால், அவர் செய்வது அரசியல் சந்தர்ப்பவாதம். இதன்மூலம், தான் எதிர்ப்பதாக நடிக்கும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச சக்திகளுக்கு அவர் மறைமுகமாக உதவுகிறார்”என்று தாக்கியிருக்கிறார்.

மேகாலயாவில் 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். அதனால்,மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறியதையடுத்து, காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. செப்டம்பரில், கோவாவின் முன்னாள் முதல்வர் லூயிசின்ஹோ ஃபலேரோ காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் டிஎம்சியில் இணைந்தார். ஃபலேரோ மாற்றத்தைத் தொடர்ந்து, காங்கிரஸில் இருந்து மேலும் ஒன்பது தலைவர்களும் டிஎம்சியில் இணைந்தனர்.

அசாமின் சில்சார் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், அகில இந்திய மகிளா காங்கிரஸின் முன்னாள் தலைவருமான சுஷ்மிதா தேவ், ஆகஸ்ட் மாதம் டிஎம்சியில் இணைந்தார். திரிபுராவில் டிஎம்சியின் விவகாரங்களைக் கவனிக்க அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு லூயிசின்ஹோ ஃபலேரோ மற்றும் சுஷ்மிதா தேவ் இருவருக்கும் ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத் மற்றும் ஹரியானா முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் ஆகியோரும் சமீபத்தில் டிஎம்சியில் இணைந்தனர். தன்வார் ஒரு காலத்தில் ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளராக இருந்தார். இப்படி காங்கிரஸின் முக்கிய தலைவர்களை எல்லாம் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இழுத்து வருகிறது. இந்த கோபமும் காங்கிரஸுக்கு இருக்கிறது.

இந்த நிலையில் சரத் பவாரை டிசம்பர் 1 ஆம் தேதி சந்தித்த மம்தா பானர்ஜி நேற்று (டிசம்பர் 2) ஆம் தேதி பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் தொழிலதிபர் அதானியை சந்தித்திருக்கிறார். மும்பை சென்று சரத் பவாரை சந்தித்துவிட்டு மம்தா பானர்ஜி கொல்கத்தா திரும்பிய பிறகு, கொல்கத்தாவில்இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பின் அதானி தனது ட்விட்டர் பதிவில்,

“முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருடன் பல்வேறு முதலீட்டுச் சூழல்கள் மற்றும் மேற்கு வங்காளத்தின் அளப்பரிய சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஏப்ரல் 2022 இல் மேற்கு வங்காளத்தில் நடக்கும் உலகளாவிய வணிக மாநாட்டில் பங்கேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்”என்று கூறியிருக்கிறார். இந்த சந்திப்பின் போது திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜியும் கலந்து கொண்டார்.

ஒருபக்கம் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதாக சொல்லும் மம்தா பானர்ஜி காங்கிரஸை கடுமையாகத் தாக்குகிறார், காங்கிரஸ் தலைமையில் கூட்டணியே இல்லை என்கிறார். அதேநேரம் பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானியை முதல்வர் என்ற முறையில் மருமகனோடு சந்திக்கிறார். அடுத்த ஆண்டு நடக்கும் மேற்கு வங்காள முதலீட்டாளர் மாநாட்டுக்கு அதானியை அழைத்திருக்கிறார். இது அரசியல் ரீதியான சந்திப்பாகவும் தேசிய அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படுகிறது.

மோடியை மிகக் கடுமையாக எதிர்ப்பவர் என்ற பிம்பத்தில் இருந்து மம்தா கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறாரோ, நிறம் மாறுகிறாரோ என்ற விவாதங்கள் தேசிய அளவில் எழுந்துள்ளன.

-ஆரா

 

கருத்துகள் இல்லை: