ஞாயிறு, 28 நவம்பர், 2021

200 ஆண்டுகளில் இல்லாத மழை ... களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஆவடியில் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம், செங்கல்பட்டு, செய்யாறு ஆகிய இடங்களில் தலா 18 சென்டிமீட்டர் மழையும்,  காட்டப்பாக்கத்தில் 17 சென்டி மீட்டர் மழையும், திருக்கழுக்குன்றத்தில் 16 சென்டி மீட்டரும், மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டையில் தலா 15 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.


தற்பொழுது சென்னையில் மீண்டும் மழைபொழிந்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது! அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!' எனத் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: