செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

சென்னை சுகேஷ் சந்திரா ரெய்டு.. 2 கிலோ தங்கம், 20 கார், பீச் ஹவுஸ் பங்களா பறிமுதல்.. அமலாக்கத்துறை அதிரடி

  Shyamsundar  -   Oneindia Tamil News   : சென்னை: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திராவின் சென்னை கானாத்தூர் வீட்டில் இருந்து 20 சொகுசு கார், 2 கிலோ தங்கம், 82.5 லட்சம் ரூபாய் பணம் என்று பல்வேறு கணக்கில் வராத சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத்தர லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா மீது வழக்கு உள்ளது.
இதற்கு ரூ. 50 கோடி லஞ்சம் பெற்றது உட்பட பல்வேறு பண மோசடி வழக்குகள், ஏமாற்று வழக்குகள் இவர் மீது உள்ளது.
பெரிய அரசியல் தலைவர்களின் மகன் என்று கூறி பல்வேறு மோசடிகளை செய்து ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரா மீது புகார் உள்ளது.
பெங்களூரை சேர்ந்த இவர் ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் என்று கூறி அரசுக்கு வாகனம் வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் உள்ளது.
பெங்களூரிலும் இவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளன.
60க்கும் அதிகமான மோசடி வழக்குகள், ஆள்மாறாட்ட வழக்குகள் இவருக்கு எதிராக பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
அதேபோல் இவரின் காதலி நடிகை லீனா மரியாவுடன் சேர்ந்து பல இடங்களில் இவர் பண மோசடி செய்ததாக புகார் உள்ளது.


200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பல்வேறு இடங்களில் இவர் பண மோசடி செய்ததாக வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் இருக்கிறது.
தான்தான் அழகிரி மகன் துறை தயாநிதி என்று கூறி சென்னையில் சுகேஷ் சந்திரா போலீசாரிடம் கூட ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இவரை போலீசார் தேடி வந்தனர். கைது கைது இவர் கைவரிசை காட்டாத துறைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு ஏமாற்று சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி இருக்கிறார்.
ஹைடெக் பாணியில் சதுரங்க வேட்டை ஆடி வந்த இவர் தற்போது திகார் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில்தான் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக இவர் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் பேசி உங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருகிறேன் என்று இவர் 50 கோடி ரூபாயை டிடிவி தினகரனிடம் இருந்து பெற்றதாக புகார் உள்ளது.
இது தொடர்பான வழக்கு மற்றும் பல்வேறு வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் தற்போது இவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுகேஷ் சந்திராவின் சென்னை கானாத்தூர் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை கடந்த 5 நாட்களாக சோதனை செய்தது. வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடியில் இவர் பல கோடி சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.
5 நாட்களாக சோதனை செய்ய செய்ய பல்வேறு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பல்வேறு முறைகேடுகள் வெளியே வந்தன.
இந்த ரெய்டின் முடிவில் அவரின் வீட்டில் இருந்து 16 சொகுசு கார், 2 கிலோ தங்கம், 82.5 லட்சம் ரூபாய் வரை பல்வேறு கணக்கில் வராத சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

பென்ஸ், ஃபெராரி, லேண்ட் க்ரூஸர், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட நிறுவன கார்கள் மொத்தம் 16 கைப்பற்றப்பட்டுள்ளது. இது போக இவரின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த வாட்ச்கள், அணிகலன்கள், பல்வேறு பைக்குகள், லேப்டாப்கள், போன்கள், மற்ற பல வீட்டு உபயோக பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை எல்லாம் கணக்கில் வராத சொத்துக்கள். இத்தனை காலம் ஏமாற்றி, மோசடி செய்த சொத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: