செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

தமிழ்நாட்டின் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள்!. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்....

  மின்னம்பலம் : திமுக தனது தேர்தல் அறிக்கையில் புதிய நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கப்படும் எனத் தெரிவித்தது. திமுக ஆட்சி அமைந்த பிறகு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து வந்தார்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற நகராட்சி வளர்ச்சித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு வெளியிட்டார்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நகர்ப்புறத்தின் மக்கள் தொகை 48.45 %ஆகும். இது 2021ஆண்டு சூழலில் 53 சதவிகிதமான உயர்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது என்று தெரிவித்த அமைச்சர் நேரு, "மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் அதுபோன்று மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும், தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

அதன் படி புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும்.

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

மேலும் 29 புதிய நகராட்சிகள் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு, பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கனசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு, முசிறி, இலால்குடி ஆகிய பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சியடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக மாற்றப்படும் என்றும் புஞ்சை புகளூர் மற்றும் TNPL (காதித ஆலை) புகளூர் ஆகிய 2 பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: