சனி, 28 ஆகஸ்ட், 2021

கொரோனா வைரஸின் எண்டமிக் நிலையை அடைந்துவிட்டதா இந்தியா? நிபுணர்கள் தரும் விளக்கம்

வரைப்படம்
BBC :உலக சுகாதார நிறுவனத்த்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், இந்தியா கொரோனாவின் எண்டமிக் கட்டத்திற்குள் நுழைந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார்.
பிபிசியின் சோயா மாட்டீன் எண்டமிக் நிலை இந்தியாவில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்று ஆராய்கிறார்.
ஒரு நோயின் எண்டமிக் கட்டம் என்று எதை சொல்கிறோம்?
ஒரு நோய் குறிப்பிட்ட பகுதியைவிட்டு நீங்காமல் இருந்தாலும் அதன் தாக்கம் சமாளிக்கக் கூடியதாக இருக்கும் நிலையை அடைவதையே எண்டமிக் என்கிறோம்.
இந்தியா கொரோனா வைரசின் ஒருவித எண்டமிக் நிலையை அடைந்திருப்பதாக செளமியா சுவாமிநாதன் தெரிவித்த இந்த கூற்று, இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கி கொரோனா முடக்கநிலை கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் சூழலில் வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தினசரி பாதிப்புகள் 4 லட்சம் வரை இருந்த நிலையில் தற்போது அது 25 ஆயிரமாக குறைந்துள்ளது.

இருப்பினும் இந்தியாவில் மூன்றாம் அலைக்கான சாத்தியங்கள் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரசின் புதிய திரிபுகள் உருவாக்கம், மற்றும் அதிக மக்கள் தொகை ஆகியவை குறித்த அச்சத்தை கருத்தில் கொண்டு இந்தியா எப்போது எண்டமிக் கட்டத்திற்குள் நுழைந்தது என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

மூன்றாம் அலை ஏற்படுமா?

இதற்கான விடை இந்தியா தான் எண்டமிக் கட்டத்தில் நுழைந்துவிட்டதாக எவ்வளவு சீக்கிரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது என்பதை பொறுத்து உள்ளது.

`தி வயர்` செய்தி வலைத்தளத்திற்கு அளித்த நேர்காணலில், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது போல தொற்று பாதிப்புகள் உச்சகட்ட நிலையில் இல்லாமல், பிற நாடுகளை போல இந்தியாவில் தொற்று குறையத் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகையின் பெரும் பகுதியினருக்கு அந்த நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியிருந்தால் அது எண்டமிக் கட்டம் எனப்படுகிறது. இது தடுப்பு மருந்தின் மூலமாகவோ அல்லது முந்தைய தொற்றில் உருவான ஆன்டிபாடிகள் மூலமாகவோ ஏற்பட்டிருக்கலாம்.

இந்த கட்டத்தில் நோய் தொற்றின் வேகம் குறையத் தொடங்கும் என்கிறார் தொற்று நோயியல் நிபுணர் லலித் கண்ட்.

புகழ்பெற்ற வைரலாஜிஸ்ட் ஷாஹித் ஜமீல், எண்டமிக் கட்டம் என்பது அந்த கட்டத்தில் தொற்று ஏற்படாது என்று பொருள் தராது. “அதன்பொருள் நோய் பரவலாக ஏற்படாது என்பதாகும்” என்று கூறுகிறார்.

பிராந்திய அளவில் இந்தியாவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இரண்டாம் அலையில் ஏற்பட்டதை போல அதிகப்படியான தொற்றுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே செளமியா சுவாமிநாதன் தெரிவித்தார். இந்தியாவில் இரண்டாம் அலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமலும், மருத்துவ ஆக்சிஜன் கிடைக்காமலும் மக்கள் கடும் சிரமப்பட்டனர்.

இந்தியாவின் உள்ள பலதரப்பட்ட மக்கள் இருப்பதால், சில பகுதிகளில் அதிக தொற்று ஏற்படலாம். “அவர்கள் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பெரிதும் பாதிக்கப்படாதவர்களாக இருக்கலாம். அல்லது அந்த பகுதியில் தடுப்பூசி போடுவது குறைவாக நடைபெற்றிருக்கலாம்,”

செளமியா சுவாமிநாதன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செளமியா சுவாமிநாதன்

இருப்பினும் எப்போது, எங்கு, எவ்வளவு மோசமாக மூன்றாம் அலை ஏற்படும் என்பதை யாராலும் தெளிவாக சொல்ல முடியாது என்று தெரிவித்த செளமியா சுவாமிநாதன், கற்ற அறிவை கொண்டு யூகங்களாக வேண்டுமானால் சொல்லலாம் என்றார்.

இந்திய அரசு என்ன சொல்கிறது?

இந்திய அரசு மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துகிறது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி 3.2 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரபூர்வ தகவல்களின்படி இந்தியாவில் 4 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறைந்திருப்பது குறித்து சந்தேகம் இல்லை.

ஆனால் அதிகாரிகளும், மக்களும் கவனமாக இல்லையென்றால் மூன்றாம் அலை நிச்சயம் ஏற்படும் என அரசு நிபுணர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.

சமீபமாக அரசு குழு ஒன்று இந்தியாவில் மூன்றாம் அலையின் உச்சம் அக்டோபர் மாதம் ஏற்படலாம் என்று தெரிவித்திருந்தது.

இரண்டாம் அலையை கணிக்க தவறியதால் இந்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டதால் தற்போது அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்ச் மாதம் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வென்றுவிட்டதாக அரசு அறிவித்தது. ஆனால் ஓரிரு வாரங்களில் இரண்டாம் அலை இந்தியாவையே முடக்கியது.

கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க முடியுமா?

கொரோனா வைரஸை துல்லியமாக கணிப்பது கடினம். இருப்பினும் இந்த வைரஸ் கூடிய விரைவில் மறைந்து போகலாம் என்று நம்புவதற்கு சொற்ப காரணங்கள் மட்டுமே உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் தொற்று பரவும் எண்ணிக்கை குறையலாம் என்றும், ஒரு கட்டத்தில் தொற்று இருக்கும் ஆனால் குறைந்த அளவில் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அளவிற்கு தீவிரமான பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை குறையும் என்றும், தீவிர ஆபத்து உள்ளவர்கள் அரிதான எண்ணிக்கையிலேயே இருப்பர் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பொது சுகாதார கவலையாக இது இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என வைராலஜிஸ்ட் ஜேகப் ஜான் தெரிவிக்கிறார்.

எண்டமிக் கட்டம் என்பதில், மலேரியாவை போன்றோ புளூ காய்ச்சலை போன்றோ கொரோனா வைரஸ் மாறிவிடும் என்கிறார் ஜேகப் ஜான்.

“இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களிடம் அதிகம் தோன்றும் ஆனால் உயிர்களை பலிவாங்கும் நிலையில் இருக்காது” என்கிறார் அவர்.

இதே கருத்தைதான் செளமியா சுவாமிநாதனும் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

“இந்த வைரஸை ஒழித்துவிடலாம் என்றோ அழிந்துவிடும் என்றோ நாம் நம்ப முடியாது ஆனால் இது எண்டமிக் கட்டத்தை அடைந்தால் அதனோடு நாம் வாழ பழகிவிடுவோம்” என்கிறார்.

இந்தியா எவ்வளவு விரைவில் எண்டமிக் நிலையை அடையும்?

இதை தற்போது கணிக்க இயலாது என்கின்றனர் நிபுணர்கள்.

கொரோனா வைரஸ் இறுதியில் எண்டமிக் கட்டத்தை அடையும். அனைத்து வைரஸ்களும் அந்த நிலையை அடையும் என்கிறார் ஜமீல்.

“அதிகப்படியான மக்கள், தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தொற்று ஏற்பட்டாலும் அதன் பிறகு இந்த தொற்று தீவிர நோயாக மாறாது.” என்கிறார்.

“இதே நிலைதான் பிரிட்டனில் ஏற்பட்டது அங்கு 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரு டோஸ் தடுப்பு மருந்தை பெற்று கொண்டனர். எனவே ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் தீவிரமான அல்லது இறப்பு ஏற்படும் வகையில் ஏற்பட்ட தொற்று எண்ணிக்கை மிக குறைவே” என்கிறார்.

ஆனால் இந்தியா போன்று அதிகம் மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது ஆறு மாதத்தில் ஏற்படுமா அல்லது ஒரு வருடம் ஆகுமா அல்லது அதற்கு அடுத்த வருடமா என்பதை சொல்வது கடினம் என்கிறார் ஜமீல்.

இந்தியா புதிய திரிபுகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்டா திரிபை காட்டிலும் அதிக தொற்றை ஏற்படுத்தும் திரிபு உருவானால் அது ஏற்கனவே தொற்று ஏற்பட்ட அல்லது தடுப்பு மருந்து எடுத்து கொண்ட மக்களையும் பாதிக்கும் என ஜமீல் விளக்குகிறார்.

இதை பிற நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

புதிய திரிபுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிவிடும். எனவே அதுவரை நாம் எண்டமிக் கட்டத்தை அடைந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது என்கிறார் கண்ட்.

இந்தியாவில் கொரோனா குறித்த கவலை பரவலாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இந்தியா மாதிரியான பலதரப்பட்ட மக்கள் தொகை கொண்ட நாட்டை தற்போதைய நிலையில் எண்டமிக் நிலையில் அடைந்துவிட்டது என்று கூறுவது சரியானதாக இருக்காது என்கிறார் வைரலாஜிஸ்ட் ஜேக்கப் ஜான்.

நாம் வைரஸோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் ஆனால் அதன் மூலம் நாம் மனநிறைவு அடைந்துவிட கூடாது என்பதே செளமிய சுவாமிநாதனின் கூற்றிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்கிறார் ஜேகப் ஜான்.

“எண்டமிக் என்பது எப்போது வேண்டுமானாலும் எபிடமிக் எனப்படும் கொள்ளை நோயாக மாறலாம். எது எப்படியோ நாம் 2019ஆம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்ல முடியாது” என்கிறார் ஜேகப் ஜான்.

எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.

கருத்துகள் இல்லை: