சனி, 28 ஆகஸ்ட், 2021

எஸ்சி எஸ்டி விவசாயிகளுக்கு 100% மானியத்தில் நுண்ணீர் பாசன வசதி!

எஸ்சி எஸ்டி விவசாயிகளுக்கு 100%  மானியத்தில் நுண்ணீர் பாசன வசதி!

மின்னம்பலம் : எஸ்சி எஸ்டி விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் நுண்ணீர் பாசன வசதி செய்து தரப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று (ஆகஸ்ட் 28) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “நாகை, கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் கல்லூரிகள் அமைக்கப்படும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 100 சதவிகித மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நுண்ணீர் பாசன வசதி செய்து தரப்படும். 'விவசாயிகளுடன் ஒரு நாள்' எனும் புதிய திட்டம் கொண்டு வரப்படும். இதன்மூலம் அந்தந்த பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டு அதைத் தீர ஆராய்ந்து அவர்களுக்குத் தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து வேளாண் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ நடப்பு ஆண்டில், தமிழக வரலாற்றில் முதன்முறையாக அரியலூர்‌, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம்‌, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 200 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளின்‌ நலனுக்காக, 12 கோடி ரூபாய் செலவில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள்‌ அமைத்து, மின் வசதியுடன்‌, மின்மோட்டார்‌ பொருத்தி, நுண்ணீர்ப் பாசன வசதிகள்‌ 100% மானியத்தில்‌ மேற்கொள்ளப்படும்‌.

இதுமட்டுமின்றி விவசாயிகளின் விளை பொருட்கள் வீணாகாமல் கிடங்குகளில் சேமித்து வைக்க 2021- 2022ஆம்‌ ஆண்டில்‌, திருப்பூர்‌, புதுக்கோட்டை, நாமக்கல்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உதவும்‌ வகையில்‌, அந்தந்த மாவட்டங்களில் தலா 250 மெட்ரிக்‌ டன்‌ கொள்ளளவுள்ள சேமிப்புக் கிடங்குகள்‌ ரூ.2 கோடி செலவில்‌ கட்டப்படும்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை: