சனி, 17 ஜூலை, 2021

தாலிபானுக்கு பாகிஸ்தான் உதவுகிறது! குற்றம் சாட்டும் ஆப்கான் துணை அதிபர்

zeenews.india.com :  காந்தஹார்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. தாலிபான் கிளர்ச்சியாளர்கள் வடக்கில் தங்கள் பிடியை இறுக்கிக் கொண்டுள்ளன. பாகிஸ்தானுடனான முக்கிய எல்லைத் தளத்தை கைப்பற்ற வெள்ளியன்று ஆப்கான் படைகள் தாலிபான் போராட்டக்காரர்களுடன் மீண்டும் மோதின.
இரவு முழுவதும் நடந்த கடுமையான சண்டைக்குப் பிறகு, பலத்த காயமடைந்த தாலிபான் போராளிகள் எல்லைக்கு அருகிலுள்ள பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சம்பவ இடத்திலுள்ள ஏ.எஃப்.பி நிருபர்கள் தெரிவித்தனர்.
ஜோவ்ஸ்ஜனின் துணை ஆளுநர் தாலிபான்கள் (Taliban) அந்த மாகாண தலைநகரின் வாயில்களை அடைந்துவிட்டதை உறுதிப்படுத்தினார். எனினும், அரசாங்கப் படைகள் போராளிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் பீதியும் பதட்டமும் ஆக்கிரமித்துள்ள நிலையில், காபுல் மற்றும் இஸ்லாமாபாத் இடையில் வாக்குவாதம் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் துணை அதிபர், பாகிஸ்தான் இராணுவம் சில பகுதிகளில் தாலிபான்களுக்கு உறுதியான வான்வழி ஆதரவை வழங்குவதாக குற்றம் சாட்டியதை அடுத்து, இந்த வாக்குவாதம் இன்னும் அதிகரித்துள்ளது.பாகிஸ்தான் (Pakistan) இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "எங்கள் சொந்த துருப்புக்களையும் மக்களையும் பாதுகாக்க மட்டும் எங்கள் எல்லைக்குள் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதனன்று தாலிபான்களால் முற்றுகை இடப்பட்ட ஸ்பின் போல்டாக்கின் குடிமக்கள், எல்லைப் பகுதியில் இருக்கும் தங்கள் நகரத்தின் முக்கிய சந்தைகளில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் சண்டை நடப்பதாக தெரிவித்தனர்.

இந்த எல்லைப் பகுதி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு  செல்ல நேரடி அணுகலை வழங்குகிறது. அங்கு தலிபானின் உயர் தலைமை பல ஆண்டுகளாக தங்கள் தளங்களை அமைத்துள்ளது. மேலும் இந்த தளங்களில் உள்ள அதிக எண்ணிக்கையிலான ரிசர்வ் போராளிகள் அவ்வப்போது ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சண்டை தொடர்ந்த நிலையில், வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தான் குறித்து சிறப்பு மாநாட்டை நடத்தப்போவதாகவும், இதற்கு தாலிபான் அதிகாரிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் பாகிஸ்தான் வியாழக்கிழமை கூறியது.

பல மாதங்களாக நடக்காமல் உள்ள தோஹா அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளும் மீண்டும் தொடரக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.

ஆப்கானிஸ்தான் (Afghanistan) அதிபர் அஷ்ரப் கானியின் உதவியாளர் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில், மத்தியஸ்தர்கள் ஏற்கனவே கத்தாருக்குச் சென்று கொண்டிருப்பதால் இஸ்லாமாபாத் மாநாட்டை ஒத்திவைக்குமாறு தனது அரசாங்கம் கேட்டுக் கொண்டது என்று கூறினார்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் தாலிபானின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தாலிபான் ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிறுமிகள் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட அனைத்து விதவை பெண்களின் பட்டியலும் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

த சன் பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, தாலிபான்கள் இந்த பெண்களை தங்கள் போராளிகளுக்கு திருமணம் செய்துவைத்து பின்னர் பாகிஸ்தானின் வஜீரிஸ்தானுக்கு இவர்களை அனுப்பப்போவதாக உறுதியளித்துள்ளனர். முஸ்லீம் அல்லாத பெண்கள் மதம் மாற்றப்படுவார்கள்.

தாலிபான்கள் இந்த பெண்களை தங்கள் போராளிகளின் அடிமைகளாக்க விரும்புகிறார்கள். போராளிகள் இந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை: