ஞாயிறு, 11 ஜூலை, 2021

முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்த் வீட்டிற்கு வருகை கூடவே அமைச்சர் துரைமுருகன்! சமாதானமாயிட்டாங்களா? திருப்பம் வருமா?

Shyamsundar - tamil.oneindia.com :  சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜய்காந்த்தை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பில் நடந்த சம்பவம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திமுகவினர், தேமுதிகவினர் இடையே இந்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜயகாந்தின் வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அதோடு தேமுதிக சார்பாக விஜயகாந்த ரூ. 10 லட்சம் கொரோனா நிவாரண நிதியும் வழங்கினார்.
சில நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் விஜயகாந்தின் சமீபத்திய சிகிச்சைகள் குறித்தும், தேமுதிக கட்சி குறித்தும், ஸ்டாலின் விசாரித்ததாக கூறப்படுகிறது
இந்த சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார். முன்னதாக கடந்த லோக்சபா தேர்தலின் போது துரைமுருகன் மற்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துரைமுருகனும், பிரேமலதாவும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர்.லோக்சபா தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சார்பாக ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. அவரின் வீடு, அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டு குறித்து விமர்சனம் செய்திருந்த பிரேமலதா, தேமுதிகவை சீண்டினால் இப்படித்தான் நடக்கும். தேமுதிகவின் பலம் இப்போதாவது துரைமுருகனுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்களை சீண்டியதால் வந்த பலன் இது. தேமுதிகவை வீழ்த்த நினைத்து தற்போது துரைமுருகன் வீழ்ந்து இருக்கிறார் என்று கடுமையாக துரைமுருகனை விமர்சனம் செய்து பிரேமலதா பேசி இருந்தார். இது திமுக - தேமுதிக இடையே கசப்பான மோதலை ஏற்படுத்தியது. பிரேமலதா vs துரைமுருகன் என்ற விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று நடந்த ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பில் துரைமுருகனும் உடன் இருந்தார்.

கசப்பு கசப்புகளை மறந்து துரைமுருகன் விஜயகாந்தை சந்திக்க அவரின் வீட்டிற்கே சென்றார். உள்ளே சென்ற துரைமுருகனை சிரித்த முகத்தோடு பிரேமலதா வரவேற்றார். தேர்தலுக்கு பின் கூட்டணி தலைவர்கள் கூட விஜயகாந்தை சந்திக்க வராத நிலையில் இன்று ஸ்டாலின் துரைமுருகனும் விஜயகாந்தை சந்தித்தனர்.

பிரேமலதா பிரேமலதா இரண்டு முக்கிய தலைவர்கள் வீடு தேடி வந்ததை பார்த்து பிரேமலதா மகிழ்ச்சி அடைந்தார். தமிழ்நாடு அரசியலில் இந்த சம்பவம் ஆக்கபூர்வமான விஷயமாக பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளுடன் கசப்புகள் மறந்து, அரசியல் கடந்து சந்திப்புகளை நடத்துவது நாகரீகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆக்கபூர்வம் மிகவும் ஆக்கப்பூர்வமாக அரசியல் இது என்று இணையத்தில் பலரும் பாராட்ட தொடங்கி உள்ளனர். துரைமுருகன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றதும், பிரேமலதா அவர்களை சிரித்த முகத்தோடு வரவேற்றதும் இரண்டு கட்சி தொண்டர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. லோக்சபா தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட கசப்புகளை இதை மறக்கடிக்க செய்யும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்

கருத்துகள் இல்லை: