சனி, 17 ஜூலை, 2021

சபரீசனிடம் பஞ்சாயத்து - சோளிங்கர் பார்த்திபன் (தினகரன்குரூப்) வருவதற்கு ராணிப்பேட்டை காந்தி எதிர்ப்பு!

அமமுக புள்ளிக்கு அமைச்சர் எதிர்ப்பு: சபரீசனிடம் பஞ்சாயத்து!
minnambalam.com : அமமுகவில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை திமுகவுக்குக் கொண்டுவருவதில் அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிரமாக இருக்கிறார். கடந்த ஜூன் 25 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களான மாரிப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

அதே நாளில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சோளிங்கர் பார்த்திபனும் இருந்ததையும் அவர் செந்தில்பாலாஜியை சந்தித்துவிட்டுத் திரும்பும்போது மாரியப்பன் கென்னடியை அங்கே வைத்து சந்தித்ததையும் மின்னம்பலத்தில் அமமுகவில் அடுத்த விக்கெட் என்ற தலைப்பில் விரிவாக வெளியிட்டிருந்தோம்.

அன்றே செந்தில்பாலாஜியை சந்தித்துவிட்டுத் திரும்பிய சோளிங்கர் பார்த்திபனிடம் அதற்குப் பின் சசிகலாவும் போனில் பேசியிருக்கிறார். ஆனாலும் பார்த்திபனின் திமுகவை நோக்கிய பயணம் தாமதமாகிறது. இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனை சோளிங்கர் பார்த்திபன் சந்தித்தாக வேலூர் அமமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.

செந்தில்பாலாஜி மூலம் திமுகவில் சேர நினைத்த சோளிங்கர் பார்த்திபனுக்கு சில தடைகள் ஏற்பட்டதால்தான் அவர் சபரீசனை சந்தித்தார் என்கிறார்கள். அதுபற்றி விசாரித்தபோது,

“ 2019 இல் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போதே சோளிங்கர் பார்த்திபனை செந்தில்பாலாஜி திமுகவுக்கு அழைத்தார். அப்போது பார்த்திபன் சில நிபந்தனைகளை முன் வைத்தார். அதாவது திமுகவில் சில பதவிகளை அவர் எதிர்பார்த்தார். ஆனால் இதற்கு திமுகவின் மாவட்டச் செயலாளரான ராணிப்பேட்டை காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மாவட்டச் செயலாளர் காந்தியின் எதிர்ப்பை மீறி தன்னால் சேர்க்க முடியாது என்று தேர்தலுக்கு முன் ஸ்டாலின் சொல்லிவிட்டார்.

இப்போதும் செந்தில்பாலாஜி மூலமாக பார்த்திபன் திமுகவுக்குள் நுழைய முயற்சிக்க, அவர் உள்ளே வருவதை திமுக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ராணிப்பேட்டை காந்தி எதிர்க்கிறார். இந்த நிலையில்தான் நேரடியாக சபரீசனையே சந்தித்திருக்கிறார் பார்த்திபன். தான் திமுகவுக்கு வரத் தயார் எனவும், ஆனால் அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறாரென்றும் சபரீசனிடம் தெரிவித்துள்ளார். இனிஅமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் எதிர்ப்பை மீறி சபரீசனால், பார்த்திபன் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படி திமுகவில் சேர்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டவாறே அமமுவில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியிருக்கிறார் பார்த்திபன்” என்கிறார்கள் வேலூர் மாவட்ட அமமுக மற்றும் திமுகவினர்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: