வெள்ளி, 16 ஜூலை, 2021

திருச்சி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 10 பேர் விடுதலை !

 தேசம்நெட்  : திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 10 பேர் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற,எல்லை மீறி மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9 ம் திகதி தொடக்கம் ஆரம்பித்திருந்தனர். தங்களது தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைக்கப்பட்டிருப்போர் உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ் நாடு முதலமைச்சருக்கு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.



இந்நிலையில்,சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் விடுதலை குறித்து முதலமைச்சரோடு கலந்து ஆலோசிக்கபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தங்களின் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: