ஞாயிறு, 11 ஜூலை, 2021

காங்கிரசுக்கு தாவத்துடிக்கும் தமாக வாசன் கேங்

தேர்தலில் நின்றதாக வரலாறு இல்லை... ஆனாலும் மீண்டும் மீண்டும் எம்.பி.யாகும்  வாசன் | There is no history that gk vasan contest for election - Tamil  Oneindia

மின்னம்பலம் :நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரசின் பல்வேறு நிர்வாகிகள் காங்கிரஸுக்கும் வெவ்வேறு கட்சிகளுக்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து மாவட்டம் தோறும் பயணம் மேற் கொண்டிருக்கிறார்.வாசன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் 12 தொகுதிகள் கேட்டார்.
ஆனால் அதிமுகவோ வெறும் 6 தொகுதிகள்தான் கொடுத்தது.
அதுவும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே நிற்க வேண்டும் என்று நிர்பந்தமும் செய்தது. அதுவும் தமாகாவுக்கு வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளாகவே அந்த ஆறு தொகுதிகளும் இருந்தன. இதெல்லாம் தமாகா நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை அளித்தது.


தேர்தல் முடிவுகளில் ஆறிலும் தமாகா தோல்வி அடைந்திருந்தது. தமாகாவின் துணைத் தலைவர் கோவை தங்கம் திமுகவுக்குச் சென்றுவிட்டார். அதன் பல்வேறு நிர்வாகிகள் மீண்டும் காங்கிரசுக்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி அவர்களை கட்சியில் இருந்து வெளியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டிருக்கிறார் ஜி.கே.வாசன்.

இந்த வகையில் ஜூலை 8 ஆம் தேதி மாலை டெல்டா மாவட்ட தமாகா நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திருச்சியிலுள்ள ஒரு ஹோட்டலில் கூட்டியிருந்தார் வாசன். அன்று காலையில்தான், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் நந்தா செந்தில்வேல் தமாகாவில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது வாசனுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னதாக ஹோட்டலில் வாசனுடன் முக்கியமான மூவர் மட்டும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மூன்றெழுத்து தனியார் பஸ் நிறுவன உரிமையாளரான தமாகா பிரமுகர், சோழனின் பெயரைக் கொண்ட தமாகா பேச்சாளர், திருச்சி மாவட்டத்தில் தமாகா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லால்குடி தர்மராஜ் மூவரும்தான் வாசனுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டத் தலைவர்கள் தமாகாவில் இருந்து விலகிக் கொண்டிருப்பதை வருத்தத்தோடு குறிப்பிட்ட அந்த பஸ் ஓனர், “இப்படி ஒவ்வொருத்தரா போயிட்டிருந்தா நம்ம கட்சி என்ன ஆகுறது? இனியும் நாம லேட் பண்ணாம ராகுல்கிட்ட பேசிடலாமா சார். கட்சியை காங்கிரஸோட இணைச்சுடலாமா?’ என்று கேட்க மற்ற இருவரும் திகைத்துவிட்டனர். ஏனெனில் அவர் எப்போதுமே வாசனிடம் உரிமையாக பேசக் கூடியவர். ஆலோசனைகளை சொல்லக் கூடியவர்.

அதைக் கேட்ட வாசன், “என்ன சார் சொல்றீங்க... சரி நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்கிட்டாலும் நம்மளை யார் சார் அங்கே கூட்டிக்கிட்டு போக தயாரா இருக்காங்க?” என்று பதிலுக்குக் கேட்க வாசனின் கேள்விக்குள் பல அர்த்தங்கள் இருப்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர்.

உடனே அதற்கு பதிலளித்த அந்த பஸ் ஓனர், “2019 தேர்தலுக்கு முன்னாடியே திருநாவுக்கரசர், ‘மூத்த சகோதரனா இருந்து உங்களை அழைக்கிறேன்’னு சொன்னாரு. செல்லகுமார் கூட வேணுகோபால்கிட்ட பேசினதா சொன்னாங்க. இப்படி நமக்குனு யாரும் இல்லாமலா இருக்காங்க? ஐயாவோட பழகின எத்தனையோ பேரு அங்க நல்லாதானே இப்ப இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர் மூலமா நாம பேச முடியாதா?” என கேட்டிருக்கிறார்.

அப்போது குறுக்கே பேசிய லால்குடி தர்மராஜ், “அழகிரி கூட நமக்கு வேண்டியவர்தானேய்யா... ஐயாவோட சீடர்தானே அவரும்’என்று கேட்க... ஜி.கே.வாசன், ‘பாக்கலாம் சார் பாக்கலாம் சார்...’ என்று அவருக்கே உரிய பாணியில் டக்கென அந்த டாப்பிக்கை முடித்துவிட்டார்.

இந்த உரையாடல்தான் இப்போது தமாகாவின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மூலம் மாநில நிர்வாகிகள் வரை பேசப்பட்டு மெல்ல மெல்ல காங்கிரஸ் நிர்வாகிகள் காதுக்கும் எட்டியிருக்கிறது.

“வெகு சிலரே இருந்த அந்த முக்கியமான ஆலோசனையில் வாசன் தமாகாவை காங்கிரசில் சேர்ப்பது பற்றிய கேள்விக்கு, ‘யார் சார் நம்மை கூட்டிக்கிட்டு போவா? என்று கேட்டதற்கு பெரிய பின்னணி இருக்கிறது. ஏனென்றால் ராகுல் காந்தி யுபிஏ இரண்டாம் ஆட்சியில் இருந்தே ஜி.கே.வாசன் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார். அதுவும் அவர் கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி கண்டு மோடியோடு நட்பு பாராட்டியது ராகுலுக்கு கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாசனைத் தவிர அந்த கட்சியில் உள்ள அனைவரையும் காங்கிரஸில் இணைக்கலாம் என்று ஒரு கட்டத்தில் அவர் சொன்னதாகவும் காங்கிரஸில் பேச்சுகள் அடிபட்டன. ஆனால் இப்போது இந்தியா முழுதும் காங்கிரசை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில் தமாகாவை காங்கிரஸில் இணைக்க ராகுல் சம்மதிக்கலாம். ஆனால் தன்னை சேர்த்துக் கொள்வதற்காக ராகுலை சம்மதிக்க வைப்பது எப்படி, யார் ராகுலிடம் பேசி சம்மதிக்க வைப்பார்கள் என்பதுதான் இப்போது வாசனுக்கு இருக்கும் யோசனை” என்கிறார்கள் தமாகாவில் இருக்கும் விவரம் அறிந்தவர்கள்.

வாசனின் இந்த மனப்போக்கு தொடர்ந்தால் விரைவில் தமாகா காங்கிரஸோடு இணையும்!

-வேந்தன்

கருத்துகள் இல்லை: